* ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் மீன்வளம் பாதிப்பு
உலகளவில் ஒரு நாட்டின் கடல்வளம் பவளப்பாறைகளைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. பவளப்பாறைகள் என்பது கடலில் காணப்படும் அரிய வகை நுண்ணுயிரி. நிடாரியா வகையை சார்ந்த சிறிய உயிரினமான இவை ஒரே இடத்தில் ஒட்டி வாழும் உயிரியான செசில் இனத்தை சேர்ந்தது. மென்மையான, ஒளி ஊடுருவும் தன்மையுடைய பாலிப்புகள் என்ற உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்வதாலேயே பவளப்பாறைகள் உருவாகின்றது. ஒரு செ.மீ முதல் 100 செ.மீ வரை வளரும் தன்மையுடைய இவைகள் கடலில் உள்ள கால்சியத்தை எடுத்துக்கொண்டு கால்சியம் கார்பனேட்டாக மாறுவதால் பலவகையான தோற்றத்தையும், நிறங்களையும், கடினத்தன்மையையும் கொண்ட பவளப்பாறைகளாக மாறுகிறது.
117 வகைகள்: சிறிய மீன்கள், பிலான்டுனிக் விலங்குகளை உணவாகக்கொண்டும், கடல் பாசிகள் மூலம் ஒளிச்சேர்க்கை செய்தும் இவை வாழ்கின்றன. சூரிய ஒளி கடலின் ஆழம் வரை ஊடுருவக்கூடிய, கடல் அலை குறைந்த, 20 முதல் 24 செல்சியஸ் நீரின் வெப்பநிலை, 30 முதல் 35 சதவீதம் வரை நீரின் ஈரப்பதம் உள்ள பகுதியில்தான் இவை காணப்படும். பவளப்பாறைகளில் கண்டத்திட்டு பவளப்பாறை, தடுப்பு பவளப்பாறை, வட்டத்திட்டு பவளப்பாறைகள் என மூன்று வகை உள்ளது.
வெப்ப மண்டல கடல் பகுதி, பசிபிக் கடல் பகுதியில் இவை அதிகளவில் உள்ளது. அதிகபட்சமாக 50 மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியில் மட்டுமே செழித்து வளரக்கூடிய பவளப்பாறைகள் இந்தியாவில் அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகளை யொட்டிய கடல் பகுதியிலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் பல வண்ணங்களில் பல வகையான தோற்றத்தில் 117 வகைகளும் உள்ளது. பாலினமற்ற இனப்பெருக்கம் செய்து வாழும் பவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்கள் வாழிடமாகவும் விளங்கி வருகிறது. மீனவர்களுக்கு தொழில் வாய்ப்பு: பவளப்பாறைகள் அமைந்துள்ள பகுதி மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களில் வாழ்வாதார பகுதியாக மட்டுமின்றி மீன்களின் இனப்பெருக்க பகுதியாகவும் இருக்கிறது. கடல் அரிப்பு, புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் கேடயமாகவும் விளங்கி வருகிறது. பவளப்பூச்சிகளால் அணிகலன்களுக்கு பயன்படும் சிவப்பு பவளங்கள் கிடைக்கிறது. பவளத்தினால் செய்யப்படும் பவளபஸ்பம் என்ற மருந்து இதய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. கிருமி பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கவும் பவளம் பயன்படுகிறது. பவளத்திலிருந்து கிடைக்கும் கால்சியம் கார்பனேட் மூலம் பற்பசை, வெள்ளை வண்ணப்பூச்சுகள், சலவைத்தூள், எழுதும் மை, பீங்கான் பொருட்கள் உள்ளிட்ட அழகுசாதன பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. பவளப்பாறைகள் சுத்தம் செய்யப்பட்டு வீடுகளிலும், வரவேற்பு அறைகளிலும் அழகுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தருவதுடன், கடல் மீன்வளம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதாரமாக உள்ளது.
உணவாக, உறைவிடமாக...: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகளவில் பவளப்பாறை திட்டுகள் உள்ளது. இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையில் மேற்கு கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் 21 தீவுகளைக் கொண்ட மன்னார் வளைகுடா கடலில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. இதனைச்சார்ந்து 45 வகையான வண்ண மீன்களும், நூற்றுக்கணக்கில் உணவுக்காக பயன்படுத்தப்படும் மீன்களும் வாழ்ந்து வருகின்றன. திமிங்கலம், கடல்பசு, டால்பின், கடல் ஆமைகளும் அதிகளவில் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன. மீன்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் விளங்கி வரும் பவளப்பாறைகள் பல்வேறு காரணிகளால் அழிந்து வருகிறது. பவளப்பாறைகளே இருக்காது...: வானியல் மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணியாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளாலும் இக்கடல் பகுதியில் இவை அழிந்து வருகிறது. கடலோர பகுதியில் விரிவாக்கம், அதிளவில் நடக்கும் இயந்திரப்படகு மீன்பிடித்தொழில், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல், தவறான மீன்பிடி முறைகள், பவளப்பாறைகளை வெட்டியெடுத்தல், தொழிற்சாலை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பது, அமிலத்தன்மை அதிகரிப்பு, கடல்நீர் வெப்பமடைதல், கடல் மாசுபடுதல் போன்றவற்றால் பவளப்பாறைகள் அழிந்து வருகிறது.
இந்நிலை தொடர்ந்தால் 2050ம் ஆண்டுக்குப்பிறகு பவளப்பாறைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் கடலில் வாழும் ஏராளமான கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து கடலில் மாசு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக, மன்னார் வளைகுடா கடலில் பவளப்பாறைகள் அழிந்து வருவதால் மீன் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் மீனவர்கள் ஆழ்கடல் மற்றும் எல்லை தாண்டி மீன் பிடித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால் இலங்கை கடற்படையின் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
பாதுகாப்பது எப்படி ?: உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளிம்பிற்கு செல்வதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பவளப்பாறைகளின் வளத்தை பாதுகாக்க மாற்றுவழியாக விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் வைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும் கடலோர ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் மற்றும் வேதிப்பொருட்கள் கடலில் கலப்பது, தவறான மீன்பிடி முறைகள் போன்றவற்றையும் தடுத்து நிறுத்தினால்தான் பவளப்பாறைகளை பாதுகாக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமை மீனவர்களுக்கு மட்டுமல்லாது ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதனை உணர்ந்து செயல்பட்டால்தான பவளப்பாறைகள் மட்டுமின்றி கடல் வளமும் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை தந்த வளங்களை நாம் அழித்துக்கொண்டிருந்தால் ஒரு நாள் இயற்கையின் ஆற்றலால், பேரழிவுகளால் மனித இனம் அழியும் சூழல் உருவாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
7 ஆண்டுகள் சிறை தண்டனை
மண்டபம் ரேஞ்சர் சதீஷ்குமார் கூறும்போது, ‘‘மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறை தோண்டப்படுவது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. வனஉயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை 1ல் பகுதி 4ஏல் பவளப்பாறை இருக்கிறது. எனவே 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் கடுமை இருக்கிறது. வாழ்வாதாரம் கருதி கடற்பாசி சேகரிக்கும்போது, மீனவர்கள் இந்த பவளப்பாறையை சேதப்படுத்துவதாக புகார் உள்ளது. எனினும் இதுகுறித்த விழிப்புணர்வு மீனவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ‘குளோபல் வார்மிங்’ எனும் வெப்பமயமாதலால் பவளப்பாறைகள் அழிகின்றன. அதிக வெப்பத்தால், ‘கோரல் பிளீச்சிங்’ என்ற பாதிப்பில் பவளப்பாறை வெண்மையாக மாறுகிறது. இதன் பாதிப்பு குறைந்ததும் திரும்பவும் பழைய வண்ணத்தன்மை அடைகிறது.
கடல் அலைகள் மூலம் மண் படிதலாலும் இவை அழிகின்றன. ‘கப்பாப் பைகஸ்’ என்ற ஒரு வகை பாசி, சுற்றி வளர்ந்து பவளப்பாறையின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதற்கான சிறப்பு திட்டத்தில் இந்த பாசியை ஆண்டுக்கொரு முறை அகற்றி வருகிறோம். கப்பலில் வழியும் எண்ணெய் கடற்பரப்பில் படிதலிலும் இந்த பாறைகள் பாதிக்கின்றன. கடலுக்குள் பவளப்பாறைகள் இல்லாத இடங்களில், ‘சிமென்ட் ஸ்ட்ரெட்சர்கள்’ அமைத்து செயற்கை முறையிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000ம் ஆண்டில் எவ்வளவு பவளப்பாறைகள் கடற்பகுதியில் இருந்தன எனக் கணக்கிடப்பட்டது. வரும் ஜூன் மாதம் மறு கணக்கெடுப்பு எடுக்கப்பட இருக்கிறது. அப்போது இந்த பவளப்பாறைகள் உயர்ந்திருக்கிறதா என்பது தெரியும்’’ என்றார்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!
