×

திருவண்ணாமலையில் பாஜ வேட்பாளருக்கு எதிராக அதிமுக நிர்வாகி மனுதாக்கல்: கூட்டணிக்குள் விரிசல்

திருவண்ணாமலை: வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நேரத்தில், திருவண்ணாமலை தொகுதியில் பாஜ வேட்பாளருக்கு போட்டியாக அதிமுக நிர்வாகி மனு தாக்கல் செய்ததால் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதையொட்டி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேல், தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்டிஓ வெற்றிவேலிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மாநில செயலாளர்கள் கே.டி.ராகவன், நரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலின்போது, தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காததால் அதிருப்தியடைந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் வேட்பாளருடன் செல்லாமல் திடீரென வெளியேறினர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நேரத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு வந்த திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் மாவட்ட அவைத்தலைவருமான வக்கீல் பி.அன்பழகன்(66), அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக கூட்டணியில் திருவண்ணாமலை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த கட்சியின் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் முடியும் நேரத்தில் திடீரென அவசர, அவசரமாக வந்து அன்பழகன் மனுதாக்கல் செய்திருப்பது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்துள்ள பி.அன்பழகன், அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். எனவே, கட்சியின் அனுமதியின்றி வேட்புமனு தாக்கல் செய்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அன்பழகனிடம் கேட்டபோது, ‘‘அதிமுக சார்பில் போட்டியிட மனுதாக்கல் செய்திருக்கிறேன். இதுபற்றி கட்சி தலைமைதான் தெரிவிக்கும்’’ என்றார்….

The post திருவண்ணாமலையில் பாஜ வேட்பாளருக்கு எதிராக அதிமுக நிர்வாகி மனுதாக்கல்: கூட்டணிக்குள் விரிசல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Tiruvannamalai ,Cracks ,ADMK ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...