×

மனம் கவரும் மாமல்லபுரம்: வரலாற்றை அறிய 200 போதும்

மன்னராட்சி காலத்தில் துறைமுக நகரம், கோயில்கள், மாட மாளிகைகள், மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை எப்படி இருந்திருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளதா உங்களுக்கு. உடனே, கிளம்பி மாமல்லபுரம் செல்லுங்கள். பல்லவ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சொர்க்கபூமியாக இருந்த மாமல்லபுரத்தின் கலைச்சிற்பங்கள் இப்போதும் காண்போர்களின் கண்களை வியப்பில் ஆழ்த்துபவை. சென்னையில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அலைகளின் தாலாட்டு சத்தத்தை கேட்டபடியே 1 மணி நேர பயணத்தில் மாமல்லபுரத்தை அடையலாம். அற்புதமான கடற்கரை கோயில் வடிவத்தை ஒரு நாள் முழுக்க பார்க்கலாம். அதே போன்று ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்த ரத சிற்பங்கள், மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் அர்ச்சுனன் தபசு சிற்பங்கள், முகுந்தராயர் மண்டபம் ஆகியவை மன்னராட்சியை நம் கண் முன்னே காட்டுபவை.

மேலும், யானை வைத்து தள்ளியும் கீழேவிழாத வெண்ணெய் உருண்டை கல் ஆச்சரியங்களின் உச்சம். இன்னும் 70 வயது தாத்தாவும் தள்ளிப்பார்க்க விரும்பும் கல் இது. கொப்பரையில் எண்ணெய் ஊற்றி, திரியில் விளக்கேற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல்களுக்கு கரை இருக்கும் திசையை காட்டிய பழங்கால கலங்கரை விளக்கத்தை பார்ப்பவர்கள் தமிழனின் திறத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. சென்னை கோயம்பேடு, உயர்நீதிமன்றம், அடையாறு, தி.நகர் பகுதிகளில் இருந்து 10 நிமிடத்திற்கு ஒரு மாநகரப்பேருந்து மாமல்லபுரத்திற்கு இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி புதுச்சேரி, கடலூர், வேதாரண்யம், கல்பாக்கம் செல்லும் வெளி மாவட்டப் பேருந்துகள் மாமல்லபுரம் பைபாஸ் சாலையில் நின்று செல்லும். அங்கிருந்து மாமல்லபுரத்தை 5 நிமிடத்தில் அடையலாம். இங்கு, கடலில் பிடிக்கப்பட்ட புத்தம்புதிய மீன் வகைகள், இறால் வகைகள் நம் கண் முன்னே வறுத்து சுவையாகவும், சூடாகவும் விற்கப்படுகிறது. கடலில் கிடைக்கும் அத்தனை உயிரினமும் இங்கு உணவாக கிடைப்பது மாமல்லபுரத்தின் சிறப்பு. உணவுக்கான செலவைத் தவிர்த்து பேருந்தில் சென்று வந்தால் நபர் ஒருவருக்கு 200க்குள் வரலாற்று நகரத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை காவல் துறையில் 21...