×

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறுவதா? பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப்படி, பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக 10 கிலோ உணவு தானியங்களைப் பெற 81 கோடி இந்தியர்கள் தகுதி பெற்றிருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் 5 கிலோ உணவு தானியங்களை மட்டுமே பெற முடியும். வழக்கம் போல் மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்காமலும் இந்தத் திட்டத்தை ரத்து செய்து தன்னிச்சையான முடிவை பிரதமர் எடுத்துள்ளார். ஒருவர் கூட பட்டினியோடு இருக்கக் கூடாது என்பதற்காக, உணவு உரிமைச் சட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. தவறான பொருளாதார நிர்வாகத்தால் பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய நிலையில், இந்த திட்டத்தை மோடி அரசு நிறுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உணவு தானியங்களை இலவசமாக வழங்குவது இந்திய மக்களுக்கு அளிக்கும் பரிசு அல்ல. அது அவர்களது உரிமை என்பதை மோடி அரசுக்கு நினைவூட்டுகிறேன். பசியோடு போராடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2021ம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவைச் செயல்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. இந்த உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறுவதா? பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : KS Alagiri ,Modi ,Chennai ,KS Azhagiri ,Modi government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில்...