×

கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்ததாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் மாதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலை ஒட்டி கடந்த மார்ச் 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்தப்பட்டது. இதில், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்ததாக கோவை தனியார் பள்ளி மீதும், அதன் தலைமை ஆசிரியர் மீதும் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அந்த தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் அதன் தாளாளர்கள் வேணுகோபால், நிர்மல்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், ‘பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், 22 மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்றே அவர்கள் பேரணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை. மாணவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவில்லை. பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்தும் நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தார். ஏற்கனவே, சாய்பாபா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பதியப்பட்ட வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,show ,Goa ,Chennai ,Chennai High Court ,Narendra Modi ,Modi Road Show ,
× RELATED உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!!