×

 9 நாட்கள் ஓய்வுக்கு பின் தொடங்கியது உத்தரப்பிரதேசத்தில் நுழைந்தது ராகுலின் ஒற்றுமை நடைபயணம்: டெல்லியில் போக்குவரத்து முடக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் 9 நாட்களுக்கு பிறகு டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று உத்தர பிரதேச மாநிலத்துக்குள் நுழைந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி என இதுவரை 3,000 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார். அவரது இந்த ஒற்றுமை நடைபயணம் ஒன்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்று டெல்லியில் காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள அனுமன் மந்திரில் இருந்து புறப்பட்டு சுற்று வட்டச்சாலை வழியாக உத்தர பிரதேச மாநிலம் சென்றது. அங்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் ராகுல் அதன் பிறகு அரியானாவில் உள்ள பானிபட் வழியாக அம்மாநிலத்துக்கு செல்ல உள்ளார்.இதனையடுத்து ஒற்றுமை நடைபயணம் பஞ்சாப், இமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.  லோனி எல்லை வழியாக உத்தர பிரதேசத்திற்குள் நுழைந்த ராகுலை அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் பொது செயலாளருமான பிரியங்கா காந்தி உ.பி. மற்றும் டெல்லி காங்கிரஸ் சார்பில் வரவேற்றார். ராகுலின் இந்த ஒற்றுமை நடைபயணத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று வருகின்றனர்.  உ.பி. நடைபயணத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பக் அப்துல்லா கலந்துகொண்டார். * போர் வீரன் ராகுல் லோனி எல்லையில் ராகுலை வரவேற்ற பொது செயலாளர் பிரியங்கா காந்தி, “அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் எத்தனையோ பெரிய அரசியல்வாதிகள், பொதுத்துறை நிறுவனங்கள், ஊடகங்களை விலைக்கு வாங்கி இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் எனது அண்ணன் ராகுலை விலை கொடுத்து வாங்கவும் இல்லை, இனி வாங்கவும் முடியாது. ஏனென்றால் அவர் ஒரு போர் வீரர். தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க கோடி கோடியாக செலவிடும் அரசின் பலத்தை கண்டு அஞ்சியதில்லை. உண்மையின் பாதையை விட்டு விலகியதில்லை. அவரை எண்ணி பெருமைப்படுகிறேன்,’’ என்று கூறியுள்ளார்….

The post  9 நாட்கள் ஓய்வுக்கு பின் தொடங்கியது உத்தரப்பிரதேசத்தில் நுழைந்தது ராகுலின் ஒற்றுமை நடைபயணம்: டெல்லியில் போக்குவரத்து முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Uttar Pradesh ,Delhi ,New Delhi ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில்...