×

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் சாகசம் செய்த 8 வாலிபர்கள் கைது: 6 வாகனங்கள் பறிமுதல்

அம்பத்தூர்: புத்தாண்டு இரவில் பைக் சாகசம் செய்த 8 வாலிபர்களை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து நெரிசல், விபத்து, பைக் ரேஸ் மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். மேலும், முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் ஆகிய கடற்கரை சாலைகள் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் மூடப்பட்டன. பைக் ரேஸ், மது போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபடுவதை தடுக்க தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். இதேபோல், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக பகுதிகளிலும் போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.இந்நிலையில், அம்பத்தூர் ஒரகடம் அம்பேத்கர் சிலை அருகே கடந்த டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு அப்பகுதி இளைஞர்கள் பலர் ஒன்று திரண்டு கேக் வெட்டி, புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். பின்னர், அனைவரும் பைக்கில் அதிக ஒலியை எழுப்பியவாறும், வீலிங் செய்தவாறும் சாகசத்தில் ஈடுபட்டனர். மேலும் அதனை வீடியோவாக எடுத்து தங்களது சமூகவலைதள பக்கங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பதிவேற்றியுள்ளனர். இது வைரலாக பரவியது. இதுபற்றி அறிந்த ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அவரது தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தேடும் பணியில் இறங்கினர். அதில், அம்பத்தூர் திருமலை பிரியா நகர் பகுதி சேர்ந்த அபிஷேக் (20), ஒரகடம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (20), ஜெகதீவன் ராம் (21), மதன் குமார் (20), ஜெயந்த் (18), ஜீவன் செரின் (19), ஜாபர் (19) மற்றும் மேளமேடு கருக்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த விஷ்வா (18) ஆகியோர் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 8 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து சாகசத்திற்கு பயன்படுத்திய 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். …

The post புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் சாகசம் செய்த 8 வாலிபர்கள் கைது: 6 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : New Year's Eve ,Ambathur ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்