×

அயல்நாடு செல்லும் கோவக்காய்

ஆண்டுக்கு ரூ. லட்சம் ஈட்டும் பட்டதாரிநெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயற்கை முறையில் கோவக்காய் விவசாயம் செய்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம் ஈட்டி வருகிறார் கன்னியாகுமரியிலிருந்து நெல்லை வள்ளியூர் அச்சம்பாடு கிராமத்திலுள்ள ரீகனின் தோட்டத்தில் ஒரு காலைப் பொழுதில் கோவக்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரை சந்தித்துப் பேசினோம்.பூர்வீகம் கன்னியாகுமரி காணிமடம்தான். அப்பா ராஜமணி வாழை, தென்னை மற்றும் காய்கறி விவசாயம் செய்தார். சிறுவயது முதலே நானும் எனது சகோதரர்களும் அவருக்கு ஒத்தாசையாக விவசாய வேலைகளை செய்வோம். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பி.ஏ.பொருளாதாரத்தில் பட்டப் படிப்பும், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ படிப்பும் முடித்துள்ளேன். விவசாய பணிகளில் எனக்கு சிறு வயது முதலே அதிக ஈடுபாடு இருந்ததால் தற்போது நெல்லை மாவட்டம் டி.கள்ளிகுளம் அருகேயுள்ள அச்சம்பாடு கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயப் பணிகளை செய்து வருகிறேன். அச்சம்பாடு கிராமத்திலுள்ள தோட்டத்தில் 1 ஏக்கர் 15 சென்ட் அளவுள்ள நிலத்தில் கேரளா நாடு ரகத்தைச் சேர்ந்த கோவக்காய் பயிர் செய்துள்ளேன். இதற்கான கோவக்காய் நாற்றுகளை தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து வாங்கி வந்து, இங்கு இயற்கை முறையில் பயிர் செய்துள்ளேன். ஒரு நாற்று ரூ.15 வீதம் மொத்தம் 1,000 நாற்றுகள் ரூ.15,000 செலவு செய்து வாங்கிவந்து இங்கு நட்டுள்ளேன். கோவக்காய் கொடி படர்வதற்கு ஏற்ப முதலில் பந்தல் அமைக்க வேண்டும். 1 ஹெக்டேருக்கு பந்தல் அமைப்பதற்கு அரசு மானியமாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் மற்றும் வள்ளியூர் வட்டார உதவி இயக்குநர் டெனின்ஸ் ஆகியோரின் உதவிேயாடு அரசு மானியம் பெற்று அதன் மூலம் கோவக்காய்க்கு பந்தல் அமைத்துள்ளேன். கோவக்காய் நாற்று நடுவதற்கு முன்னர் முதலில் நிலத்தை தயார் செய்ய வேண்டும். நிலத்தை 10 நாள் இடைவெளிவிட்டு மூன்று முறை உழவு செய்து நன்கு பண்படுத்த வேண்டும். பின்னர் ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலம் வீதம் வயலில் தேவையான நீளத்திற்கு குழி வெட்ட வேண்டும். இந்த குழிகளில் இயற்கை முறையில் கிடைக்கும் எருக்கு, வேப்ப இழை, ஆவாரை, சாணி உரம் ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு வர வேண்டும். பின்னர் 10 நாட்கள் கழித்து கோவக்காய் நாற்றுகளை அந்த குழிகளில் நட வேண்டும். இதில் ஒரு நாற்றுக்கும் மற்றொரு நாற்றுக்கும் இடையே 10 அடி இடைவெளி இருக்குமாறு நட வேண்டும். கடலை புண்ணாக்கு ஒரு ஏக்கர் நிலத்துக்கு 25 கிலோ வீதம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் 3வது நாள் அந்தக் கரைசலை எடுத்து நாற்றின் வேர்ப் பகுதிகளில், ஒரு நாற்றுக்கு 200 மில்லி லிட்டர் வீதம் ஊற்றினேன். இதுபோல் வாரம் ஒரு முறை இக்கரைசலை ஊற்றி வந்தேன். நாற்றுகள் நட்ட பிறகு தண்ணீர் பாய்ச்சி உரிய முறையில் தேவைக்கேற்ப இதுபோல் இயற்கை முறையில் பராமரித்து வந்தேன். இந்த நாற்றுகளுக்கு சொட்டு நீர்ப் பாசன முறை மூலம் தினமும் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். மேலும் தேவைப்படும் பட்சத்தில் இதற்கு பயோ என்கான்சர் என்று சொல்லப்படும் எழில்மாஸ், நேச்சர்டீப் போன்ற வளர்ச்சி ஊக்கிகளை வாங்கி பயன்படுத்தினேன். இதுபோல் தொடர்ந்து பராமரித்து வந்தால் நாற்று நட்டதில் இருந்து 45 நாட்கள் கழித்து கோவக்காய் கொடிகளில் இருந்து காய்களை பறிக்கலாம்.கோவக்காய் காடுகளிலும், வேலிகளிலும் படர்ந்து வளரக்கூடிய கொடி வகையைச் சேர்ந்தது. நான் ஆரம்பத்தில் களிமண் நிலத்தில் கோவக்காய் பயிரிட்டபோது குறைந்த அளவே மகசூல் கிடைத்தது. அதன் பின்னர் செம்மண் நிலத்தில் பயிரிட்டபோது கூடுதல் மகசூல் கிடைத்ததோடு, கூடுதல் வருமானமும் கிடைத்தது. அதன் பின்னர் தொடர்ந்து கடந்த 3 வருடங்களாக செம்மண் நிலத்திலேயே பயிர் செய்து வருகிறேன். எனவே கோவக்காய் பயிர் செய்ய செம்மண் நிலம் மிகவும் சிறப்பாக இருக்கும். நான் பயிர் செய்த கோவக்காய் கொடிகளில் இருந்து ஒரு வாரத்திற்கு இரண்டு முறை காய்கள் பறித்தோம். இதில் ஒரு பறிக்கு 1,000 கிலோ வீதம் ஒரு மாதத்துக்கு 8,000 கிலோ காய்கள் கிடைத்தது. இந்த கோவக்காயில் இருந்து வருடம் முழுவதும் பலன் கிடைக்கும். அதில் மழைக்காலம் தவிர்த்து மற்ற காலங்களில் 6 மாதங்கள் வரை நல்ல மகசூல் கிடைத்தது. இதிலிருந்து 6 மாதங்களுக்கு 48,000 கிலோ அளவில் காய்கள் கிடைத்தது. மார்க்கெட்டில் கோவக்காயின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நாங்கள் இயற்கை முறையில் கோவக்காய் உற்பத்தி செய்வதால் சீசனைப் பொறுத்து 1 கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை எங்களுக்கு விலை கிடைத்தது. எனவே ஒரு கிலோ ₹20 வீதம் 48,000 கிலோவுக்கு ₹9,60,000 ஒரு ஆண்டுக்கு வருமானமாக கிடைத்தது. இதில் நாற்றுகளுக்கான செலவு, பந்தல் அமைக்கும் செலவு, இயற்கை உரங்களுக்கான செலவு, களை பறிக்க, மருந்தடிக்க, காய்கள் பறிக்க, எடைபோட்டு பெட்டிகளில் வைத்து விற்பனைக்கு அனுப்ப, வேலையாள் சம்பளம், பராமரிப்பு செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஆரம்பத்தில் ₹.4 லட்சத்துக்கும் மேல் செலவானது. எனவே செலவுகள் அனைத்தும் கழித்து போக ஒரு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை லாபம் கிடைத்தது. சீசனைப் பொறுத்து மாறும் விலை மற்றும் மழைக் காலங்களில் பூக்கள் அதிகம் உதிர்வதால் ஏற்படும் மகசூல் குறைவு போன்ற பல காரணங்களால் வருமானத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நாங்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் கோவக்காய்க்கு நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கோவக்காயில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளதால் அது உணவாகவும், மருந்தாகவும் தற்போது பயன்படுத்தப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு நல்ல மருந்தாகவும் அது பயன்படுகிறது. கோவக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது என்பதால் உணவுக்காகவும், மருத்துவ காரணங்களுக்காகவும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாங்கள் உற்பத்தி செய்யும் கோவக்காயை இங்கிருந்து நாகர்கோயில் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். பின்னர் நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் ஏர்ப்போட்டுக்கு சென்று அங்கிருந்து துபாய், கனடா, சௌதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது என்கிறார். ‘‘கோவக்காயை தினமும் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட கழிவுகள் ஆகிய அனைத்தையும் கோவக்காய் குணமாக்குகிறது’’  என்கிறார் உணவியல் நிபுணர் வண்டார்குழலி.தொடர்புக்கு:  ரீகன்- 98652 62394.தொகுப்பு: க.கதிரவன்  படங்கள்: வே.ரவிச்சந்திரன்

The post அயல்நாடு செல்லும் கோவக்காய் appeared first on Dinakaran.

Tags : Vallyur ,Govakai Govakai ,
× RELATED நெல்லையில் வேன் டயர் வெடித்து...