×

நெல்லையில் வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் வள்ளியூர் பள்ளி மாணவர்கள் 22 பேர் காயம்

நெல்லை : நெல்லையில் வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் வள்ளியூர் உண்டு உறைவிட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்பதற்கு திட்டமிட்டனர்.

இதனையடுத்து அப்பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்கள், 2 ஆசிரியைகள் தலைமையில் ஒரு வேனில் 25 மாணவ, மாணவிகள் பாளை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். நெல்லை அரசு மருத்துவமனை அருகே வேன் வரும்போது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்து நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் பள்ளி மாணவர்கள் மணிகண்டன்(11), ஒஸ்தி(11), சக்தி(13), கந்தவள்ளி(9), ஜெயசக்தி(10), விஷ்வலட்சுமி(10), உலகவள்ளி(9), ரத்தினவேல்(11), ஜெயலட்சுமி(10), ஷாலினி(9), புவனேஸ்வரி(8), வைரவள்ளி(12), நீலசக்தி(13), பொன்னுலட்சுமி(7), தெனாலி(8), சிவா(10), ராஜ்(10) மற்றும் வேன் டிரைவர் திருக்குறுங்குடியை சேர்ந்த தங்கமுத்து (36), ஆசிரியர்கள் 4 பேர் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த பாளை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வேனிலிருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி தலைமையில் டாக்டர்கள் மருத்துவ சிகிச்சையளித்து வருகின்றனர். இதனை அறிந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.இதுகுறித்து நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லையில் வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் வள்ளியூர் பள்ளி மாணவர்கள் 22 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Vallyur School ,Nelli ,Paddy ,Vallyur ,van Tyre ,Dinakaran ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...