×

கோடை காலத்தில் தண்ணீர் தேடிவரும் காட்டு முயல்கள் பறவைகள் வேட்டை

ராமநாதபுரம்: காட்டு முயல்கள், கொக்கு உள்ளிட்ட பறவை இனங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால்
விரைவில் அவற்றின் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் ஒன்றியங்களில் கருவேல மரங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் ஏராளமான காட்டு முயல்கள், பறவைகள் உள்ளன. ஆடு, கோழிகள் விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்கள் தற்போது காட்டு முயல்களையும் விட்டு வைப்பது கிடையாது. பெரிய ஹோட்டல்களில் கூட ஆடு, கோழி போல் முயல் கறியும் விற்பனை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் பலர் நாட்டு துப்பாக்கி, நாய்களை பயன்படுத்தி முயல்களை வேட்டையாடுகின்றனர். காட்டு மிருகங்கள், பறவைகளை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் விலைக்காக கிராம பகுதிகளில் வசிப்பவர்கள் பலர் இதை தொழிலாகவே செய்து வருகின்றனர். முயல் உள்ளிட்ட காட்டு விலங்குகள், பறவைகள் உயிருடன் இருந்தால் ரூ.300 முதல் 400 வரை விலை போவதாலும், அவற்றின் இறைச்சி ருசியாக இருப்பதாலும் பலரும் அதை விரும்பி வாங்குவதாலும் முயல் பிடிப்பவர்கள் தொடர்ந்து இதை செய்து வருகின்றனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கா விட்டால் இப்பகுதியில் காட்டு விலங்குகளின் இனமே விரைவில் அழிந்துவிடும் நிலை உருவாகி வருகிறது.

காட்டு முயல்கள், பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முயல் உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அவ்வப்போது கிராம பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். முயல், கொக்கு ஆகியவற்றை பிடிப்போர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இருப்பினும் பலர் நாட்டு துப்பாக்கிகள் மூலம் அனுமதியின்றி இதையே தொழிலாக செய்து வருகின்றனர்.

தற்போது வெயில்காலம் தொடங்கியுள்ளதால் காட்டுக்குள் இருந்து தண்ணீருக்காக அதிகளவில் முயல்கள் வெளியே வருகின்றன. இதைத் தெரிந்து கொண்டு வேட்டையாடுபவர்கள் கிராம பகுதிகளில் முகாமிட்டு முயல்களை பிடித்து வருகின்றனர். கிராம பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகப்படுத்தியுள்ளோம். முயல்களை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Tags :
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்...