×

திராவிட மாடல் அரசு என்பது மத நம்பிக்கைக்கு எதிரானது அல்ல மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டி லாபம் பெற நினைப்பவர்களுக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும்  எதிரானது அல்ல. மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம்  என்று நினைக்கக்கூடியவர்களுக்கு எதிரான  அரசு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு பேசியதாவது: திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு  மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எதிரான அரசு தான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.  சமய மார்க்கங்கள் சொன்னதை அரசியல் இயக்கமாக வழிநடத்தி, வெற்றிகரமாக அதனை செயல்படுத்தி வரக்கூடிய ஆட்சி தான் உங்கள் ஆட்சி, இந்த திராவிட மாடல் ஆட்சி. ஒரு துளி கண்ணீர் ஏழையிடமிருந்து வெளிப்பட்டாலும், அதனை துடைக்க வேண்டிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்க வேண்டும் அதுதான் என்னுடைய நோக்கம்.  தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய உடைமைகளைப் பெறுவது இன்பம். அத்தகைய உடைமைகளைப் பெற இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு அவற்றை வழங்கி மகிழ்வதுதான் பேரின்பம். அதுதான், திருநாள்-திருவிழா என்பதற்கு உண்மையான பொருளாக அமைந்திட முடியும்.  இந்த கிறிஸ்துமஸ் விழா அப்படிப்பட்ட உண்மையான மகிழ்ச்சியைத் தரக்கூடிய விழாவாக அமைந்துள்ளது. கிறிஸ்துவ நிறுவனங்கள் செய்துள்ள பங்களிப்பை நிச்சயமாக கல்வித்துறையைப் பொறுத்தவரையில் எவராலும் மறக்க முடியாது. நானும் கிறிஸ்துவ நிறுவனத்தினரின் பள்ளியில்தான் படித்தேன். அதை நினைத்து இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுபோலவே, மருத்துவத் துறையிலும் கிறிஸ்துவ நிறுவனங்கள் ஆற்றியிருக்கக்கூடிய தொண்டையும் நாம் மறக்க முடியாது. இன்று இந்தியாவிலேயே மருத்துவக் கட்டமைப்பில் சிறந்த மாநிலமாகத் நம்முடைய தமிழ்நாட்டை மேம்படுத்தி, அரசு மருத்துவமனைகளில் தரமான, விரைவான சிகிச்சையைக் கிடைக்கச் செய்திருக்கிறோம். மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்து சாதனை படைத்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. தமிழ் மொழி வளர்ச்சிக்காக பங்காற்றிய வீரமாமுனிவர், எல்லிஸ், கால்டுவெல், போன்றவர்களின் பங்களிப்பும் இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களைத் தொடர்ந்து தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வலியுறுத்தியவர் யார் என்று கேட்டால், பரிதிமாற் கலைஞர். அதனை நிறைவேற்றிக் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். மதத்தால் வெவ்வேறானவராக இருந்தாலும், மொழியால் நாம் எல்லோரும் தமிழர்கள். அந்த உணர்வுடன், மதநல்லிணக்கத்தை முன்வைத்து, ஒற்றுமையுடன் பயணிப்போம். கிறிஸ்துமஸ் திருநாள் சிறப்பாக அமையட்டும்.  அடுத்து வரக்கூடிய ஆங்கிலப் புத்தாண்டும் ஒளிமயமாகத் திகழட்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்….

The post திராவிட மாடல் அரசு என்பது மத நம்பிக்கைக்கு எதிரானது அல்ல மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டி லாபம் பெற நினைப்பவர்களுக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : dravish model government ,CM. G.K. Stalin ,Chennai ,drawid model government ,Travidi Model Government ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்