×

விளாத்திகுளம், புதூர் வட்டாரத்தில் 2 ஆண்டுக்கு பிறகு வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்

விளாத்திகுளம்: விளாத்திகுளம் வட்டாரத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெங்காயம் அறுவடை பணி நடந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த புரட்டாசி மாதம் சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மூலிகை செடிகள் போன்றவற்றை விவசாயிகள்  பயிரிட்டனர். அவற்றில் நாட்டு வெங்காயம் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தனியாகவும்  ஊடுபயிராகவும் பயிடப்பட்டுள்ளது. 1 ஏக்கருக்கு 70 கிலோ கொண்ட 10 பை வெங்காய விதை ஊண்றி இந்த ஆண்டிலாவது வெங்காயம் அறுவடை செய்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் தீவிர விவசாய பணிகள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விதை விதைத்த பின்னர் போதிய மழை பெய்யாததால் வெங்காயத்தில் நண்டுக்கால், திருகல், அழுகல் நோயால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் பல்வேறு வகையான மருந்து தெளித்தும் வெங்காயத்தில் நோய் பாதிப்பு கட்டுப்படவில்லை. இருப்பினும் இந்தாண்டில் எப்படியாவது வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்தாக வேண்டும் என்று வறுமையிலும் கடன் பெற்று விதைப்பு முதல் அறுவடை வரை விதைப்பு கூலி, களை எடுப்பு கூலி, உரம் போடுதல், அறுவடை செய்தல் என அனைத்திற்கும் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்தனர். தீராத தொடர் பணியால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பகுதியில் வெங்காயம் அறுவடை பணி தொடங்கியள்ளனர். தற்போது விளாத்திகுளம் காய்கறி சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் 1 கிலோ ரூ.120 விற்று வந்த சிறிய வெங்காயம் தற்போது ரூ.70 முதல் 80 வரை விற்கத் துவங்கி உள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக வெங்காயம் விவசாயம் செய்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்த  விவசாயிகளுக்கு தற்போது ஓரளவு விளைச்சல் வந்துள்ளதால் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.உரிய விலை கிடைத்தால் லாபம் பெறலாம்இதுகுறித்து கரிசல்பூமி விவசாய சங்கத்தலைவர் வரதராஜன் கூறுகையில் ‘‘விளாத்திகுளம் தொகுதி முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கனமழை அல்லது மழையின்மை காரணமாக நிலத்தில் ஊண்றிய வெங்காயத்தை கூட கண்ணில் காண முடியத நிலையில் விவசாயிகளுக்கு இருந்தது. தற்போது வெங்காயம் விவசாயம் செய்து அறுவடை செய்து வருவதால் பல கிராமங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் நல்ல திரட்சியான வெங்காயம் நல்ல விலைக்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் பெற்று செல்கின்றனர். அனைத்து பகுதிகளிலும் வெங்காயம் அறுவடை செய்து முடிக்கும் வரையில் இதே போன்று வெங்காயத்திற்கு நல்ல விலை வழங்கினால் விவசாயிகள் லாபம் பெற முடியும்’’ என்றார்….

The post விளாத்திகுளம், புதூர் வட்டாரத்தில் 2 ஆண்டுக்கு பிறகு வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vlathikulam, Pudur ,Vlatikulam ,Vlaatikulam ,Tutukudi ,Vlathigulam, Pudur region ,
× RELATED கோவில்பட்டி, விளாத்திகுளம்,...