×

போலி இ-மெயிலில் 2 நாள் ரூம் புக்கிங் செய்து தங்கி ஓட்டலில் ரூ.25 ஆயிரத்துக்கு உணவு, மது அருந்தி மோசடி: 3 பேர் கைது

தாம்பரம்: கிளாம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில், போலி நிறுவனம் பெயரில் இ-மெயில் மூலம் அறையை புக்கிங் செய்து, ஓட்டலுக்கு வந்து 2 இரண்டு நாட்கள் தங்கியிருந்து ரூ.25 ஆயிரத்துக்கு உணவு மற்றும் மது அருந்தி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இ-மெயில் வந்துள்ளது. அதில், தங்களது நிறுவனத்தின் விருந்தினர்கள் ஓட்டலுக்கு வருவதாகவும், விருந்தினர் செக் அவுட் செய்யும்போது எந்தவித வாடகை மற்றும் உணவு கட்டணம் மற்றும் மதுபானம் போன்றவற்றிற்கு பில் கட்டணம் வாங்க வேண்டாம் என்றும், விருந்தினர் எது கேட்டாலும் அனைத்தையும் கொடுக்கவும், அனைத்து கட்டணமும் எங்கள் நிறுவனம் செலுத்தும் என அந்த இ-மெயிலில் குறிப்பிட்டு இருந்துள்ளது. அதன்படி, கடந்த 18ம்தேதி மதியம் 3 பேர் ஓட்டலுக்கு வந்து தாங்கள் தனியார் நிறுவனத்தின் விருந்தினர்கள் என கூறி, 2 நாட்கள் தங்கியுள்ளனர். அந்த 2 நாட்களும் அவர்கள் மது, உணவு மற்றும் தங்கியதற்கு என 25038 ரூபாய் பில் தொகை வந்துள்ளது. அதிகப்படியான தொகை என்பதால் ஓட்டல் நிர்வாகம் சார்பில் தங்கியிருந்த 3 பேரிடமும் விளக்கம் கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு பணம் அனுப்புமாறு இ-மெயில் அனுப்பியுள்ளனர்.ஆனால், அந்த இ-மெயிலுக்கு எந்தவித பதிலும் வராததால் ஓட்டலில் தங்கியிருந்த 3 நபர்களும் தனியார் நிறுவனம் சார்பில் போலியாக இ-மெயில் அனுப்பியது தெரியவந்தது. இதனால், ஓட்டல் நிர்வாகம் சார்பில், அவர்களிடம்  பில் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் பில் தொகையை செலுத்த மறுத்ததோடு, ஓட்டல் நிர்வாகிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி, நீங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும், ஓட்டல் மேலாளரை கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியதாக கூறியுள்ளனர்.எனவே, அதிர்ச்சியடைந்த ஓட்டல் மேலாளர் ரிச்சர்ட் (42), சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சிவராமன் (31), பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (37), ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (37) எனவும், தனியார் நிறுவனம் பெயரில் போலி இ-மெயில் அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post போலி இ-மெயிலில் 2 நாள் ரூம் புக்கிங் செய்து தங்கி ஓட்டலில் ரூ.25 ஆயிரத்துக்கு உணவு, மது அருந்தி மோசடி: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : TAMBARI ,Klambakkam ,Dinakaran ,
× RELATED திருவள்ளூரிலிருந்து தாம்பரம் வழியாக...