×

சுரண்டை அருகே பூப்பாண்டியாபுரத்தில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்: பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் நடந்துசெல்லும் மாணவர்கள்

சுரண்டை:  சுரண்டை அருகே எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி பூப்பாண்டியாபுரம் கிராம மக்கள் தவிக்கின்றனர்.  பள்ளிக்கு தினமும் 5 கி.மீ. மாணவர்கள் நடந்து செல்லும் அவலமும் தொடர்கிறது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலையில் முதியவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, உடனடியாக சாலை, பஸ் வசதி செய்துதரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது. சுரண்டை அருகே குலையநேரி ஊராட்சிக்கு உட்பட்ட பூப்பாண்டியாபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளதால் இக்கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மேற்படிப்புக்காக சுரண்டை மற்றும் கடையாலுருட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் முறையாக பஸ் வசதிகூட செய்து தரப்படவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல சுமார் 5 கி.மீ. தூரம் நடந்தே செல்லும் அவலம் தொடர்கிறது. காலை, மாலை வேளைகளில் காட்டுப் பகுதியில் நடந்துசெல்லும் போது மாணவிகள் மிகுந்த அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. இதனால் தன்னந்தனியே வராமல் கூட்டம்கூட்டமாக சென்று வருகின்றனர். அதேபோல் இப்பகுதி மக்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும் அத்தியாவசிய குடிமைப் பொருட்களை வாங்க இரட்டை குளம் என்ற கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள் நடந்து சென்று, பொருட்களை வாங்க முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொதுமக்கள் அன்றைய தினத்திலேயே உடனடியாக பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே குலையநேரி குளத்தில் இருந்து பூப்பாண்டியாபுரம் செல்லும் சாலையானது பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் குண்டும், குழியுமாக உருக்குலைந்துள்ளது. சாலையின் இந்நிலையை காரணம் காட்டி இப்பகுதிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வருவதில்லையாம். இதனால் மருத்துவம் தொடர்பான அவசர தேவைகளை கூட முறையாகப் பெற முடியாமல் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். எனவே, இனியாவது இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொள்ள முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. குறிப்பாக  சாலை, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.நிரந்தரத்தீர்வுஇதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்: ‘‘பூப்பாண்டியாபுரத்தில் பஸ் வசதி செய்துதரப்படாததால் இங்குள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சுமார் 5 கி.மீ. தூரம் நடந்தே செல்கின்றனர். இதே போல் உருக்குலைந்த சாலையால் வாகனங்களில் செல்வதே பெரும் சவாலாக உள்ளது. ரேஷன் கடை இங்கு இல்லாததால் பொருட்களை உடனடியாக வாங்க முடியவில்லை. மலைவாழ் மக்களுக்கு கூட அடிப்படை வசதி கிடைக்க செய்து வரும் முதல்வர் மு.க‌. ஸ்டாலின் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் எங்கள் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துகொடுத்து இங்கு நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தரத்தீர்வு காண வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றனர்….

The post சுரண்டை அருகே பூப்பாண்டியாபுரத்தில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்: பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் நடந்துசெல்லும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Poopantiapuram ,Churundai ,Churandai ,Poopantiyapuram ,Poopandiapuram ,Surundai ,Dinakaran ,
× RELATED புதுப்பெண் தற்கொலை தென்காசி ஆர்டிஓ விசாரணை