×

உலகம் முழுவதும் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: 7 நாளில் 10,000 பேர் பலி; 36 லட்சம் பேர் பாதிப்பு.! ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் கடந்த 7 நாளில் 10,000 பேர் பலியாகி உள்ளனர்; 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சீனாவில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, கோவிட் பாசிட்டிவ்  நோயாளிகளின் மாதிரிகளை இன்சாகோக் (இந்திய சார்ஸ்-கொரோனா வைரஸ் -2  ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு) ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், உருமாறிய கொரோனா குறித்து தகவல் தெரிந்தால் தொடர்ந்து கண்காணிக்கவும், பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்கிடையே உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 36,32,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் மட்டும் 10,55,578 பேருக்கும், தென் கொரியாவில் 4,60,766 பேருக்கும், பிரான்சில் 3,84,184 பேருக்கும், பிரேசிலில் 2,84,200 பேருக்கும், அமெரிக்காவில் 2,72,075 பேருக்கும், ஜெர்மனியில் 2,23,227 பேருக்கும், ஹாங்காங்கில் 1,08,577 பேருக்கும், சீனாவின் அண்டை நாடான தைவானில் 1,07,381 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 7 நாட்களில் கொரோனாவால் 1,670 பேர் இறந்துள்ளனர். இதுதவிர, அமெரிக்காவில் 1,607 பேரும், தென் கொரியாவில் 335 பேரும், பிரான்சில் 747 பேரும், பிரேசிலில் 973 பேரும், ஜெர்மனியில் 868 பேரும், ஹாங்காங்கில் 226 பேரும், தைவானில் 203 பேரும், இத்தாலியில் 397 பேரும் இறந்துள்ளனர். மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்தில் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 22,578 பேருக்கும், ஜப்பானில் 72,297 பேருக்கும், ஜெர்மனியில் 55,016 பேருக்கும், பிரேசிலில் 29,579 பேருக்கும், தென் கொரியாவில் 26,622 பேருக்கும், பிரான்சில் 8,213 பேருக்கும், தைவானில் 10,359 பேருக்கும், ரஷ்யாவில் 6,341 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 140 பேரும், பிரான்சில் 178 பேரும், ஜெர்மனியில் 161 பேரும், பிரேசிலில் 140 பேரும், ஜப்பானில் 180 பேரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சில நாடுகளில் விமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது….

The post உலகம் முழுவதும் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: 7 நாளில் 10,000 பேர் பலி; 36 லட்சம் பேர் பாதிப்பு.! ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Union Health ,Minister ,New Delhi ,Corona ,Union ,Health Minister Urgent Advice ,
× RELATED ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்:...