×

முருகனை தரிசிக்க தென்மாவட்டங்களிலிருந்து வரும் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக தயாராகும் பாதை-முதற்கட்டமாக தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

நிலக்கோட்டை : பழநி பாதயாத்திரை முருக பக்தர்களுக்காக சாலையோரங்களை முதற்கட்டமாக தூய்மைப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி பிரசித்தி பெற்றது. இந்த பழநி மலை முருகனை தரிசிக்க மார்கழி மாதம் தொடங்கி தைப்பூசம் வரை பக்தர்கள் பாதையாத்திரையாக வருவார்கள்.குறிப்பாக ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் விடுமுறை முன்னிட்டு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு சாலைகளின் வழியாக பழநிக்கு பாதையாத்திரையாக வருவது வழக்கம். இதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு பிரத்யோக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் மற்றும் உசிலம்பட்டி, பேரையூர் பக்தர்கள் வத்தலக்குண்டு, செங்கட்டாம்பட்டி, அணைப்பட்டி, நிலக்கோட்டை, மைக்கேல்பாளையம், செம்பட்டி வழியாக வருகின்றனர். மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ,சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்குவழி சாலை மாவட்ட எல்லை பள்ளப்பட்டி, கொடைரோடு, காமலாபுரம் வழியாக வருகின்றனர்.பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு செம்பட்டியிலிருந்து சாலையின் இடதுபுறமாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு பாதை வசதி செய்து தரப்பட்டது. ஆனால் செம்பட்டி பகுதிக்கு முன்னால் அது போன்ற சாலை வசதிகள் கிடையாது. சாலையின் ஓரத்தில் தான் நடந்து வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் நடந்து செல்ல சாலையின் ஓரத்தில் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடப்பட்டது. அதன் எதிரொலியாக பக்தர்களின் வசதிக்காக கொடைரோடு-செம்பட்டி நெடுஞ்சாலையை கொடைரோடு நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவிப் பொறியாளர் யோகவேல் தலைமையிலான பணியாளர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக முதற்கட்ட பணியாக காமலாபுரம் சக்கையாநாயக்கனூர் முதல் காமபிள்ளைசத்திரம் சாலையின் இரு ஓரத்திலும் உள்ள முள்செடிகள், புதர்கள், தேவையற்ற கம்பிகளை அகற்றுதல், மேடு பள்ளங்கங்களை சரி செய்யும் பணியை செய்து வருகின்றனர்.தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் சீரமைப்பு பணிகளை செய்து வருவதும் இந்தாண்டு முன்கூட்டியே பணிகளை துவக்கியது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.இது குறித்து கொடைரோடு பகுதி பக்தர் ஆறுமுகம் கூறுகையில, ‘‘ ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஊர் சார்பில் சிறுவர்கள் முதல் வயதானவர் வரை குழுவாக பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். எங்கள் பக்தர்களுக்கு தமிழக அரசு சார்பில் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை,காவல்துறை,பொதுப்பணி துறையினர் என பல்வேறு அரசு துறை சார்பில் பிரத்யேக வசதிகள் செய்து தருவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் சாலையின் ஓரங்களில் செடிகள், முட்செடிகள் படர்ந்து வளர்ந்து கிடக்கின்றன. இவை பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் கால்களை பதம்பார்த்துவிடுகிறது.இந்த ஆண்டு பாதயாத்திரை பக்தர்கள் நடக்க தொடங்குவதற்கு முன்பே சாலை சீரமைப்பு பணிகள் செய்ய தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு முதற்கட்ட பணிகளான சாலையோரமுட்கள், புதர்கள், அகற்றப்பட்டு மழைநீரால் அரிக்கப்பட்ட பள்ளங்களை மண்ணால் மூடி சரிசெய்யும் பணிகளை துவக்கி உள்ளனர். இப்பணிகள் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மேலும் இதே சாலையோர விளக்குகள் வசதி, எச்சரிக்கை பலகைகள், சாலை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பாதையாத்திரை பக்தர்கள் செல்லும் வழியில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் 24 மணி நேர மருத்துவ குழு அமர்த்துதல், கழிப்பறை வசதி , குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளையும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்யும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்….

The post முருகனை தரிசிக்க தென்மாவட்டங்களிலிருந்து வரும் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக தயாராகும் பாதை-முதற்கட்டமாக தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Bharani Pathyatrah ,Murugana ,Nalakkot ,Muruga ,Parani Pathyatri ,Murugan ,Tamil ,Paranani Pathyatri ,
× RELATED ராமராஜபுரத்தில் நாளை மின்தடை