பள்ளிபாளையம் : நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த வெப்படையை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி வெங்கடேஷ். இவரது மகன் சஞ்சய்(10) க்கு கடந்த சில மாதங்களுக்கு முன், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவரிடம் காண்பித்தபோது, அவனது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷ், மகனை இலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். அங்கு, மாவட்ட மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி தெரிவித்துள்ளனர். கூலிவேலை செய்யும் தன்னால் மகனுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வெங்கடேஷின் நண்பரான ஈரோட்டை சேர்ந்த சர்தார் என்பவர், நேற்று வெங்கடேஷின் மகள் மகேஷ் ஆகியோருடன், சிறுவன் சஞ்சயை வெப்படை 4 ரோட்டின் நடுவே படுக்க வைத்து, மருத்துவ உதவி கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சர்தாரை எச்சரித்தனர். ஆனால், நோயால் பாதித்த சிறுவனுக்கு மருத்துவ உதவி கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என அவர் கூறினார்.பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, சிறுவனை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தேவையான மருத்துவ உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து தர்ணா போராட்டத்தை சர்தார் கைவிட்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். …
The post 2 சிறுநீரகமும் செயலிழந்த மகனை ரோட்டில் படுக்க வைத்து பெற்றோர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.