×

கரிமேடு,புதூர் மார்க்கெட்டுகளில் முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்

மதுரை : மதுரை கரிமேடு மற்றும் புதூர் மார்க்கெட்டுகளில் முத்திரை இல்லாத தராசுகள் மற்றும் எடை அளவைகளை தொழிலாளர் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மதுரை கரிமேடு மற்றும் புதூர் பகுதியில் உள்ள மீன் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில், எடை குறைவாக வழங்கி பொதுமக்களை ஏமாற்றுவதாக தொழிலாளர் துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனடிப்படையில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் மற்றும் இணை ஆணையர் சுப்பிரமணி ஆகியோர் வழிகாட்டுதல்படி, மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில், துணை ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பாண்டீஸ்வரன், உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் அலுவலக பணியாளர்கள் நேற்று சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ், கரிமேடு மற்றும் புதூர் மார்க்கெட்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், 23 மின்னணு தராசுகள், 26 டேபிள் தராசுகள், 8 விட்டத் தராசுகள், 115 இரும்பு எடை கற்கள் மற்றம் தரமற்ற எடை அளவைகள் (படிகள்) முத்திரையிடப்படாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.இதுதவிர, இம்மாதம் நடந்த சிறப்பாய்வுகள் மூலம், முத்திரையிடாத 11 வணிக நிறுவனங்கள் மீது எடையளவைகள் சட்டத்தின் கீழும், 6 சிகரெட் விற்பனை மற்றும் இதர நிறுவனங்கள் மீது, 2011ம் வருட சட்டமுறை எடை அளவு (பொட்டல பொருட்கள்) சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் நலன் கருதி, வியாபாரிகள் தங்களது எடையளவைகளை முத்திரையிட்டு உபயோகப்படுத்த வேண்டும் என்றும், ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், மேற்படி சட்டத்தின் கீழ், முதல்முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம, 2ம் முறை குற்றத்திற்கு ரு.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.சாலை மறியல்மதுரை புதூர் மார்க்கெட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடை அளவைகளை திரும்பத் தருமாறு கேட்டு வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தராசுகளை தர அதிகாரிகள் மறுத்ததால், சிலர், புதூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து வந்த புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மறியல் கைவிடப்பட்டது….

The post கரிமேடு,புதூர் மார்க்கெட்டுகளில் முத்திரையிடாத தராசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karimedu ,Putur ,Madurai ,Labor Department ,Puthur ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது