×

திருமுருகன்பூண்டி நகராட்சியாக மாறியதால் வார்டுகள் பிரிக்கும் பணி துவக்கம்

திருமுருகன்பூண்டி :  திருப்பூர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி நகராட்சியாக மாறிய நிலையில் தற்போது 15 வார்டுகள் உள்ளது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருமுருகன்பூண்டி நகராட்சியின் மக்கள் தொகை 31 ஆயிரத்து, 528 ஆகும். 13 ஆயிரத்து 725 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 805 பெண் வாக்காளர்கள், ஒரு திருநங்கை என 27 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர விண்ணப்பித்துள்ளனர். திருமுருகன்பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக மாறியதால் நகராட்சிகள் சட்டவிதிகளின்படி குறைந்தது 21 வார்டுகளாவது இருக்கவேண்டும். அதன்அடிப்படையில், ரோடுகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதியாக பிரித்து ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது 1000 முதல் 1500 வாக்காளர்கள் கொண்ட வார்டாக பிரிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போதே திருமுருகன்பூண்டி நகராட்சி தேர்தலையும் நடத்தும் வகையில் அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக பதவியேற்ற ஏ.ஜே. முகம்மது சம்சுதீன் தலைமையில் நேற்றே வார்டு பிரிக்கும் பணி தொடங்கியது.இதற்காக, பவானி நகராட்சி மேலாளர் தங்கராஜ் தலைமையில் பவானி நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் பெரியசாமி, குன்னூர் நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகளாக பிரிக்கும் பணியை துரிதமாக செய்து வருகின்றனர்.இந்த குழுவினர் இதற்காக வரைபடங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு திருமுருகன்பூண்டி: திருப்பூர் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஏ.ஜே.முகம்மது சம்சுதீன் பதவி உயர்வு பெற்று திருமுருகன்பூண்டி 2ம் நிலை நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு வந்து பதவியேற்றார். இவர் நகராட்சியின் முதல் கமிஷனர் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு முன்னாள் செயல் அலுவலர் ஆனந்தன், திமுக நகர செயலாளர் பாரதி, முன்னாள் செயலாளர் குமார், நகர துணைச் செயலாளர் மூர்த்தி,  மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, நகர ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணை செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் ஒன்றிய குழு பாலசுப்பிரமணியம் மற்றும்  பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்….

The post திருமுருகன்பூண்டி நகராட்சியாக மாறியதால் வார்டுகள் பிரிக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Thirumurukanbuundi ,Thirumuruganbuundi ,Tiruppur ,
× RELATED மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி