×

கிண்ணக்கொரை-கெத்தை இடையே மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்

*எல்லையோர மக்கள் வலியுறுத்தல்மஞ்சூர் :  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. தமிழக கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியை சுற்றிலும் கிண்ணக்கொரைஆடா, இரியசீகை, காமராஜ் நகர், அப்பட்டி, மேலுார், தணியகண்டி, ஆத்தட்டு, காமராஜ்நகர், இந்திராநகர், ஒசாட்டி, கீழ்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் கிண்ணக்கொரை சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களது எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் சென்று வர சுமார் 60 கி.மீ. தொலைவுள்ள மஞ்சூருக்கே சென்று வர வேண்டியுள்ளது. அல்லது ஊட்டி, குன்னூர், கோைவ போன்ற தொலைதூர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக கிண்ணக்கொரையில் இருந்து சுமார் 125 கி.மீ தொலைவுள்ள கோவைக்கு செல்ல வேண்டுமானால் முதலில் மஞ்சூருக்கு சென்று அங்கிருந்து கோவைக்கு பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளது. போக,வர மொத்தம் 250 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளதால் காற்று, மழை சமயங்களில் அதிக அளவில் மரங்கள் விழுகின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒருசில சமயங்களில் போக்குவரத்து சீரடைய 2 நாட்களுக்கும் மேலாகிறது. இது போன்ற நேரங்களில் கிண்ணக்கொரை சுற்று வட்டார கிராமத்தினர் வெளியுலக தொடர்பு அறவே இன்றி பெரிதும் அவதியடைகின்றனர். இதையடுத்து கிண்ணக்கொரையில் இருந்து கெத்தைக்கு மாற்று பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிண்ணக்கொரையில் இருந்து கெத்தைக்கு ஏற்கனவே பாதை உள்ளது. சுமார் 7 கி.மீ. தூரம் உள்ள இந்த பாதையின் பெரும்பகுதி தனியார் பட்டா நிலங்களிலும் குறிப்பிட்ட பகுதி வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிண்ணக்கொரையில் இருந்து கெத்தைக்கு மாற்று பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 2 கி.மீ. துாரம் தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில் இடையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதி குறுக்கிட்டதால் அங்கு சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர். வனத்துறையின் ஆட்சேபத்தால் மேற்கொண்டு சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிண்ணக்கொரையில் இருந்து கெத்தைக்கு மாற்றுபாதை அமைப்பதன் மூலம் மஞ்சூர் வழியாக சுற்றுபாதையில் செல்லாமல் கெத்தை சென்று அங்கிருந்து கோவை செல்லலாம். இதன் மூலம் 41 கி.மீ தூரம் பயண நேரம் குறைகிறது. எனவே பொதுமக்களின் அத்தியாவசியப் போக்குவரத்து நலன் கருதி கிண்ணக்கொரையில் இருந்து கெத்தைக்கு மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எல்லையோர கிராமமக்கள் என வலியுறுத்தியுள்ளனர்….

The post கிண்ணக்கொரை-கெத்தை இடையே மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kinnakorai-Keth ,Manjoor ,Kinnakorai ,Nilgiri district ,Tamil Nadu ,Kerala ,Kinnakorai-Kethi ,Dinakaran ,
× RELATED மேல்குந்தா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்