×

முதல்வராக, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி பிறந்தநாளை கலைஞர் மக்களுக்காக பயன்படுத்தினார்: திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 99ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘வேருக்கு விழா’ ‘முன்னோடிகளின் முதன்மை அரங்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திமுகவின் மூத்த முன்னோடிகள் 1,314 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பிறந்தநாள் கொண்டாடுவது என்பது அந்த பிறந்தநாளுக்குரிய நபர் என்றைக்குப் பிறந்தாரோ அந்த தேதியில் கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் கலைஞரின் பிறந்தநாளை, அதிலும் குறிப்பாக நம்முடைய சேகர்பாபு ஒரு நாள் அல்ல; அதிகபட்சம் அடுத்த பிறந்தநாள் வரும் வரைக்கும் ஒரு ஆண்டு அவர் கொண்டாடுவார். நேற்றைக்கு(நேற்று முன்தினம்) கலைஞருடைய பிறந்தநாள் விழா தொடங்கிவிட்டது. இப்போது‘வேருக்கு விழா’ – அதாவது தலைவர் கலைஞர் நமக்கெல்லாம் வேராக இருந்து, அவர் இன்றைக்கு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்.திமுகவிற்கு வேர்களாக விளங்கிய, இங்கே வீற்றிருக்கும் நம்முடைய முன்னோடிகள் – உங்களுக்கு ஏதோ உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல, உங்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. சென்னையில் இருக்கும் எல்லா மாவட்டத்திலும், அதேபோல தமிழ்நாடு முழுவதும் இருக்கும் எல்லா மட்டத்திலும்-எல்லா பகுதிகளில் இதேபோல நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறப்போகிறது. கலைஞரின் பிறந்தநாள் என்பது ஏதோ பெயருக்குக் கொண்டாடப்படும் விழா அல்ல. கலைஞர் முதல்வராக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி, அவர் பிறந்தநாள் என்பது நாட்டு மக்களுக்காகக் கொண்டாடப்பட்டது. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், ஒவ்வொரு பிறந்தநாளையும் கலைஞர் மக்களுக்காகப் பயன்படுத்தினார். இன்றைக்குக் கை ரிக்‌ஷாக்களை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது. கம்யூனிச சித்தாந்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் மேற்குவங்கம்-கல்கத்தாவில் கூட இன்று கை ரிக்‌ஷா இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கை ரிக்‌ஷா இல்லை என்றால் அதற்குக் காரணம் கலைஞர் அவர்கள்தான். கை ரிக்‌ஷா இழுத்தவர்களுக்கு  சைக்கிள் ரிக்‌ஷாவை இலவசமாக வழங்கியவர் கலைஞர். அதற்காக ஒரு பிறந்தநாளைப் பயன்படுத்தினார். அடுத்து, இந்தியாவிலேயே முதன்முதலில் ஊனமுற்றோர் என்ற சொல்லுக்குப் பதிலாக ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற பெயரைச் சூட்டி, அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை  உதவிகளை, அவர்களுக்கு என்னென்ன அடிப்படைத் தேவை என்பதை அறிந்து – புரிந்து அதற்காக ஒரு பிறந்தநாளை பயன்படுத்தினார்.இப்படி தன்னுடைய பிறந்தநாளைத் தனக்காகக் கொண்டாடாமல் – தன்னுடைய வாழ்விற்காகக் கொண்டாடாமல், நாட்டு மக்களுக்காக  ஏழை, எளியவர்களுக்காகக் கொண்டாடிய தலைவர்தான் நம்முடைய கலைஞர். 1975ல் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்துக் கலைஞர் தீர்மானம் போட்டார்.  தீர்மானம் போட்ட அடுத்த நாள் நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மிசா வந்தது. பலபேர் கைது செய்யப்பட்டார்கள். பல பேர் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அதில் நானும் ஒருவன். இங்கு உட்கார்ந்திருக்கும் தயாநிதி மாறன்-அவருடைய தந்தை என்னுடைய மதிப்பிற்குரிய முரசொலிமாறனும் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். இப்படி பலபேர் சிறையில் இருந்தோம். அந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்தோம். அதை எதிர்த்து அன்று கலைக்கப்பட்ட நம்முடைய ஆட்சி என்பது 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. மீண்டும் 1989ல் ஆட்சிக்கு வந்தோம். 1989ல் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, இரண்டே வருடத்தில் நம்முடைய ஆட்சியைக் கலைத்தார்கள். அது 1991. அதன்பிறகு 1996-ல் மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்தோம். இப்போது ஆறாவது முறையாக 2021ம் ஆண்டு மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எதற்காக நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், இப்படி மேடு பள்ளங்களை பார்த்து வளர்ந்த கழகம் தான், பல சோதனைகளைத் தாண்டி வந்திருக்கும் கழகம்தான் நம்முடைய திமுக. நாங்கள் எல்லாம் இந்த அளவிற்கு வந்ததற்கு யார் காரணம் என்று வெளியில் தெரியாது. அதனால்தான் இந்த வேருக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறோம். அந்த உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, அந்தப் பொற்கிழி பெற வந்திருக்கும் இந்த இயக்கத்தின் முன்னோடிகளின் பாத மலர்களை எல்லாம் தொட்டு என்னுடைய வணக்கத்தை, நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post முதல்வராக, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி பிறந்தநாளை கலைஞர் மக்களுக்காக பயன்படுத்தினார்: திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister of the CM ,Kazhagam ,G.K. Stalin ,Chennai ,Barimunam ,Dizhagam ,Eastern District of Chennai ,
× RELATED சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி