×

மணலி குடோனில் ரூ3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்: 2 சகோதரர்களுக்கு வலை

திருவொற்றியூர்: மணலியில் ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து, அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ3 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள், சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, 2 சகோதரர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மணலி அருகே சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெருவில் ஒரு தனியார் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக நள்ளிரவில் சைதாப்பேட்டை வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் உதவி வனச்சரக பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் அலுவலர் ராஜேஷ் மற்றும் 10 பேர் கொண்ட தனிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தனியார் குடோன் பூட்டியிருந்ததால், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் டெல்லி கணேஷ் உதவியுடன், பூட்டை உடைத்து தனிப்படையினர் உள்ளே சென்று சோதனை செய்தனர். அங்கு ரூ3 கோடி மதிப்பிலான சுமார் 3 டன் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், அங்கு அய்யனார், பரிவார குதிரை, விநாயகர், யாழி உள்ளிட்ட பல்வேறு பழங்கால சிலைகளும் இருந்தன. அவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த தனியார் குடோன் சென்னை மாதவரம், கேகேஆர் நகரை சேர்ந்த வெங்கடேசன்-உமாதேவி ஆகியோருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. மேலும், இவர்களிடம் இருந்து சென்னை மண்ணடி, சையது தெருவைச் சேர்ந்த முகமது, அவரது சகோதரர் செய்யது ஆகிய இருவரும் குடோனை வாடகைக்கு எடுத்துள்ளனர்.பின்னர் கட்டிட உரிமையாளர்களுக்கு தெரியாமல், அந்த குடோனில் கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் மற்றும் பழங்கால சிலைகளை பாதுகாத்து, வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று அதிகளவில் பணம் சம்பாதிக்க 2 சகோதரர்களும் திட்டமிட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து வனச்சரக அதிகாரிகள் மண்ணடிக்கு சென்று 2 சகோதரர்களையும் தேடினர். அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளை அண்ணாநகரில் வனச்சரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 2 சகோதரர்களையும் தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்….

The post மணலி குடோனில் ரூ3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்: 2 சகோதரர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Manali Kudon ,Thiruvotreur ,Sand ,
× RELATED மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு...