கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவல் அதிகரிப்பால் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றன. இதனால் காத்திருக்கும் நோயாளிகளுக்கு ஸிரோ டிலே வார்டு மற்றும் ஆக்சிஜன் வசதி கொண்ட பேருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் நேற்றிரவு முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் முதல் அலையில் சென்னைக்கு அடுத்ததாக கோவையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தொற்றை வேகமாக கட்டுப்படுத்தி கோவை முன்மாதிரி மாவட்டமாக திகழ்ந்தது. ஆனால் கொரோனா 2ம் அலையில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தலைநகர் சென்னையில் தினசரி தொற்று 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஒரேநாளில் 4,734 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒருவார காலமாக கோவையில் தொற்று எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.