×

பாரதிராஜா, பாக்யராஜுக்கு மணிமண்டபம், சிலை: தமிழ் திரையுலக அமைப்புகள் அறிவிப்பு

 

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களும், நடிகர்களுமான பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோர், கடந்த ஜூன் மாதங்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அவர்களின் திரைப்பட சாதனைகளை பாராட்டி கவுரவிக்கும் வகையில், ‘ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்’ என்ற நிகழ்ச்சி, வரும் 16ம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது.

இதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.இதுகுறித்து நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.எம்.தமிழ்குமரன், நாசர், ஆர்.கே.செல்வமணி, டி.சிவா, ஆர்.வி.உதயகுமார் முன்னிலையில் நடந்தது.

அப்போது ஆர்.கே.செல்வமணி பேசியதாவது: தலைமுறைகளை கடந்து தமிழ் திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோருக்கு அவரவர் சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டி, அவர்களின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. வரும் 16ம் தேதி நடக்கும் ‘ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சிவராஜ்குமார், ரிஷப் ஷெட்டி, வி.ரவிச்சந்திரன், மம்மூட்டி, மோகன்லால், ஜாக்கி ஷெராப், போனி கபூர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் எல்.முருகன், சுரேஷ் கோபி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். பாரதிராஜா, கே.பாக்யராஜ் பற்றிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவர்களின் திரைப்படங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. அவர்களின் படங்களில் இருந்து 20 பாடல்களை தேர்வு செய்து, மேடையில் நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் பொறுப்பை பார்த்திபன் ஏற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bharatiraja ,Manimandapam ,Bhagyaraj ,Tamil ,Chennai ,K. Bagyaraj ,Chennai Kalaivanar Arena ,Tamil Filmmakers Association ,
× RELATED இயக்குனர்கள் ஏமாற்றினார்கள்: யாஷிகா ஆனந்த் கசப்பான அனுபவம்