டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் திறமையான இளைஞன் அஸ்வின் விஸ்வநாதன், தவறான சகவாசத்தால் போதை பொருட்களை பயன்படுத்தி, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். அவரது படிப்பு கெடுகிறது. பிறகு ஒரு இளம் பெண்ணின் கொலைக்குற்றத்தில் சிக்குகிறார். இதையடுத்து என்ன நடக்கிறது என்பது, எதிர்பாராத கிளைமாக்ஸ்.
இன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான, போதையில் இருந்து மீள்வதற்கான விழிப்புணர்வு கதையை எழுதி இயக்கி வழக்கறிஞராக நடித்துள்ள ஆர்.வெங்கட்டரமணனுக்கு பாராட்டுகள். அஸ்வின் விஸ்வநாதன் இயல்பாக நடித்துள்ளார். போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கான அவரது போராட்டம் கண்கலங்க வைக்கிறது. மற்றும் ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரிகரன், யோகேஷ், டி.ராஜேந்திரன் நன்கு நடித்துள்ளனர்.
கந்தசாமி கோபாலின் ஒளிப்பதிவும், மீரா லால் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறிப்பிடத்தக்கவை. எடிட்டர் திஸ்யன் சாரதி கச்சிதமாக தொகுத்துள்ளார். ‘அப்பா வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆர்.வெங்கட்டரமணன் எழுதி இயக்கியுள்ளார். போதை பொருள் கலாச்சாரத்தால் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது? அவர்களின் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லி பதற வைத்திருக்கிறார். மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
