×

சொன்னாரே!… செஞ்சாரா?… முதன் முதலாக அமைச்சர் அந்தஸ்தை பெற்ற தொகுதியை அம்பேல் என விட்ட எம்எல்ஏ: வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏ, அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தொகுதி உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏவாக ஓ.எஸ்.மணியன் உள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.வி.ராஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன ஓஸ்.எஸ்.மணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை  அமைச்சர் ஆனார். இதனால் அமைச்சர் அந்தஸ்து இல்லாத தொகுதி முதன் முதலாக அமைச்சர்  தொகுதி என அந்தஸ்தை பெற்றது.வேதாரண்யம் தொகுதியில் பெரும்பாலும் மக்களின் எதிர்பார்ப்பாக உப்பள தொழிற்சாலை இருந்து வருகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உப்பை மூலப்பொருளாக கொண்டு காஸ்டிக் சோடா தொழிற்சாலை  தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் அது ஏட்டு அளவிலேயே இன்றளவும் உள்ளது. இதற்கான எந்தவிதமான பணியும் இதுவரை தொடங்கப்படவில்லை. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதேபோல் முல்லைப் பூவை சாகுபடியை நம்பி 10 ஆயிரம் விவசாய குடும்பத்தினர் உள்ளனர். இந்த முல்லைப் பூவை மூலப்பொருளாக கொண்டு சென்ட் தொழிற்சாலை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தொழிற்சாலை இதுவரை தொடங்கப்படவில்லை. வேட்டைக்காரணிருப்பு பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகபெரிய நெல் சேமிப்பு கிடங்காக ரூ.164 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நெல் சேமிப்பு கிடங்கு கடந்த கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்தது. நெல் சேமிப்பு குடோன் தற்போது மீண்டும் புதுப்பிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.வேதாரண்யம் பகுதியில் 20 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். ஒரு துறைமுகம் கூட கட்டிக் கொடுக்கப்பட வில்லை. அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிமாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி சீசன் காலத்தில் படகுகளை நிறுத்துவதற்கு ஒரு சிறிய துறைமுகம் கட்டப்படவில்லை. தேர்தலின் போது ஓட்டு கேட்க வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் தொகுதி பிரச்னை குறித்து மீனவர்கள், விவசாயிகள் சார்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. வெற்றி பெற்றதும் கோரிக்கைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனது மட்டுமல்லாமல் அமைச்சராகவும் இருக்கிறார். ஆனால் அவர் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. முதன் முதலாக அமைச்சர்  தொகுதி என அந்தஸ்தை பெற்ற தொகுதி எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்கின்றனர் ெதாகுதி மக்கள்.‘தொகுதியில் குடிநீர் பிரச்னை தீர்த்து வைக்காத அமைச்சர்’திமுக விவசாய சங்க மாநில துணை செயலாளர் எஸ்.கே.வேதரத்தினம் கூறும்போது, ‘வேதாரண்யம் தொகுதியில் தென்னடார், சிறுதலைக்காடு, கடினல்வயல், கோடியக்கரை, கோடியக்காடு, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மக்களின் முக்கிய பிரச்னையான குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதியெல்லாம் 5 வருடமாக காற்றில் பறக்கவிட்ட கதையாகத்தான் இருந்து வருகிறது. திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம்தான் இன்னமும் தொகுதி மக்களுக்கு கொஞ்சம் கைகொடுக்கிறது. அமைச்சர் தொகுதியான வேதாரண்யத்தில் மாங்கூழ் தயார் செய்யும் தொழிற்சாலையும் கொண்டு வர ஒரு துளி கூட முயற்சி எடுக்கவில்லை’ என்றார்.‘100 கோடியில் வேதாஆயத்த ஆடை பூங்கா துவங்கப்பட்டுள்ளது’அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, ‘சுதந்திரம் அடைந்ததிலிருந்து வேதாரண்யம் தொகுதியில் இதுவரை செய்யமுடியாத பணிகளை இந்த 5 ஆண்டு காலத்தில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். வேலைவாய்ப்புக்கு என்று தொழிற்சாலை இல்லாத இந்த தொகுதியில் வேதாஆயத்த ஆடை பூங்கா என ரூ.100 கோடியில் துவங்கப்பட்டு தற்போது முதல் கட்டமாக 500 பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆயத்த ஆடை பூங்காவில் 25,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். துறைமுகம் இல்லாத வேதாரண்யம் தொகுதியில் வெள்ளப்பள்ளம் ஆறுகாட்டுத்துறை ஆகிய இரண்டு மீனவ கிராமங்களில் ரூ.250 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது’ என்றார்….

The post சொன்னாரே!… செஞ்சாரா?… முதன் முதலாக அமைச்சர் அந்தஸ்தை பெற்ற தொகுதியை அம்பேல் என விட்ட எம்எல்ஏ: வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏ, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் appeared first on Dinakaran.

Tags : Senjara ,MLA ,Ambel ,Vedaranyam Constituency ,Minister ,O. S. Manian ,Nagai District ,2016 assembly ,OS Manian ,OS ,Manian ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்