×

அருணகிரிநாதரின் அருட்பதம் போற்றி

அருணகிரிநாதரின் குருபூஜை – 12.7.2022 செவ்வாய்க்கிழமை, மூல நட்சத்திரம்.`ஒன்றே பலவாய், பலவே ஒன்றாய்’ இருக்கும் தத்துவத்தைக் காட்டும் ஒரு தலம் – திருவண்ணாமலை. ஊரின் பெயரும் திருவண்ணாமலை. மலையின் பெயரும் திருவண்ணாமலை. இறைவனின் பெயரும் திருவண்ணாமலையார். ஒன்றே பலவாக இருப்பதற்கு இத்தலமே சாட்சி என்பார் சொல்வேந்தர் சு.கி.சிவம் அவர்கள். ஏராளமான ஞானிகளை தன் கைத்தலத்தே ண்டுள்ளதால்தான், குருநமசிவாயர் இத்தலத்தை, ‘‘ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் அண்ணாமலை” என்று அருளினார். ஞானியர் பூமியான இங்குதான், சங்கத்தமிழ் வாழ, சரணகமலாலயத்தின் கடவுளின் புகழைப்பாட, பதினைந்தாம் நூற்றாண்டில் அவதரித்தார் நம் அருணகிரிநாதர். எந்தத் தவறு செய்தவரும் மனமாரத் திருந்தி, உணர்ந்து வருந்தினால் மன்னிப்பும் மறுவாழ்வும் உண்டு என்ற வகையில், அருணகிரிநாதரின் அருள் வாழ்வு, இங்குள்ள ஆறுமுகனின் அருளால்தான் அரும்பியது. இளமைக் காலத்தில் இன்பத் துறையில் இவர் எளியரானதால், தொழுநோய் வந்துவிட்டது. தன் தவறை உணர்ந்து உயிரைவிட அண்ணாமலைக் கோபுரத்தின் மீதேறி, குதிக்கும் தறுவாயில் அருள்திருமுருகன் இவரைத் தடுத்தாட்கொண்டு, `இனி என் புகழைப் பாடு’ என்று அருளினார். அப்போது அருணகிரிநாதர், கல்வியறிவு இல்லாதவன் நான்.‘‘ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறிபேணா ஈனனை வீணனை ஏடு ஏழு எழுதா முழு ஏழை” ஆகிய நான் எப்படிப் பாடுவேன்? என்று கேட்க, முருகன் இவரின் நாவில் தன் ஞானவேலால் `ஓம்’ என்கின்ற மந்திரத்தை எழுதி பாடச் சொன்னார். அப்போது, தித்திக்கும் `முத்தைத்தரு’ எனத் தொடங்கும் திருப்புகழைப் பாடியருளினார்.எல்லா நூலுக்கும் அதனதன் ஆசிரியர்கள்தான் பெயர் சூட்டுவர். ஆனால், திருப்புகழுக்கு மட்டும் முருகனே பெயர் சூட்டினார். எல்லா திருப்புகழ்ப் பாடல்களையும் அருணகிரிநாதர் பாடினார். ஆனால், ‘‘பக்கரைவி சித்ரமணி” என்று தொடங்குகிற திருப்புகழ் பாடலில், ‘‘திருப்புகழ் செப்ப” என்பது வரைக்கும் முருகன் பாடினார். மீதிப் பாதியை மட்டும் அருணகிரிநாதர் பாடினார். இதில்தான் `திருப்புகழ்’ என்று முருகனே பெயர் வைத்த தன்மை வெளிப்படுகிறது. நால்வரால் பாடல் பெற்றால் எப்படி சிவதலங்களுக்குச் சிறப்போ, ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டால் திவ்ய தேசங்கள் எப்படி அதிக திவ்யமாய்த் திகழ்கின்றனவோ, அதைப்போல அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற ஆறுமுகனின் திருத்தலங்கள் மிகவும் அருள் வாய்ந்தவையாகும். அவ்வகையில், மகாநதிகள் இருந்த இடத்திலே இல்லாமல் நிலத்திலே ஓடி பயிர்களுக்கு நலஞ்செய்வது போல், முருகன் இருக்கும் தலங்கள் தோறும் சென்று பாடியருளினார் அருணகிரிநாதர். அப்போது, திருச்செந்தூர் முருகன் இவருக்கு `நடன கோலம்’ காட்டினார். திருவாவினன்குடி முருகன் இவருடைய தித்திக்கும் திருப்புகழில் மகிழ்ந்து ஜபமாலை தந்தருளினார். இவ்வளவு அருள்பொதிந்தது திருப்புகழ். இதை நாம் பாடினால் என்ன நடக்கும் என்பதை, திருப்புகழைக் கற்க திருப்புகழைக் கேட்க திருப்புகழை நித்தம் ஜெபிக்க முக்தி எளிதாகும்” என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.இதுமட்டுமின்றி, இதைப் படிப்பவர்கள் துன்பங்கள் யாவும் தொலையும். இன்பங்கள் ஓங்கும் என்பதை, ‘‘இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்” என்று சொல்லும் அருணகிரி வள்ளல், கோபம் கொண்டு நம்மைப் பகைத்து நிற்கின்றவர்களுக்கும் நம்மை எள்ளி நகைப்பவர்களுக்கும் இழிமொழி சொல்லிப் பழிப்பவர்களுக்கும் திருப்புகழானது நெருப்பாக நின்று நிலைகுலைக்கும் என்பதை, ‘‘சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் உயிர்க்கும் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் இத்தகைய சிறப்புமிக்க திருப்புகழ்கள் மொத்தம் பதினாராயிரம் பாடியிருந்தாலும்‘‘திருப்புகழைச் சிறிது அடியேனும்” என்ற அடியில், தான் பாடியது சிறிதுதான் என்று பணிவுடன் கூறி ‘‘பணியுமாம் என்றும் பெருமை” என்ற மறைமொழிக்கிணங்க நிறைமொழி மாந்தராய் நம் மனத்தில் நிற்கிறார்.இத்தகு பணிவின் சிகரம், படைத்த படைப்புக்கள் கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, வேல் மயில் விருத்தங்கள், கந்தர் அலங்காரம் போன்றவையும் ஆகும். இதில் கந்தர் அலங்காரத்தில் நம் தலையெழுத்தை அழிக்கும் அழிப்பான் (ரப்பர்) ஒன்றுண்டு. அது முருகனின் திருவடி என்று குறிப்பிட்டுள்ளார். அத்திருவடி தன் தலைமீது பட்டு பிரம்மனின் கையெழுத்து அழிந்து விட்டது என்பதை, ‘‘இங்கு அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமீது அயன் கையெழுத்தே” என்று அருளினார். எனினும் அந்த முருகனின் திருவடி நம் அனைவருடைய தலைமீதும் எப்படிப் படும்? எப்போது நம் தலையெழுத்து அழியும்? என்ற ஏக்கங்கள் நமக்கு எள்ளளவும் வேண்டியதில்லை. அதற்கும் வழி அவரிடத்திலேயே உண்டு.முருகனின் திருவடி தலையெழுத்தை அழிக்கும் எனில் அவரின் திருவடிபட்ட எந்தவொரு பொருளும் அருள்பெற்ற தன்மையால் நம் தலையெழுத்தைக் கட்டாயமாக அழிக்குமல்லவா? அப்படி முருகனின் திருவடிபட்ட பொருட்கள் மொத்தம் மூன்று. ஒன்று மயில். இன்னொன்று தேவர்களின் தலை. மற்றொன்று அருணகிரிநாதரின் அருட்பாடல்கள். இதனை, ‘‘தாவடி ஓட்டும் மயிலிலும் தேவர் தலையிலும் எந்தன் பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ” என்று இவரே பாடியிருக்கிறார். மயிலும் தேவர்களின் தலையும் நம் தலைமீது பட வாய்ப்பில்லை. ஆனால், அருணகிரிநாதரின் அருட்பாடல்கள் நம் தலைமீது படமுடியும். இவருடைய பனுவல்களைத் தலைமீது வைத்துக் கொண்டாடி, வாயாரப் பாடி மகிழ்ந்தால் நம் தலையெழுத்து மாறும் என்பதில் எந்த மாற்றமுமில்லை.மேலும், அருணகிரிநாதரை போல், விசாலப் பார்வை நமக்கு எப்போதும் வேண்டும். ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைப்போர் ஒரு தெய்வத்தை மட்டும் சிக்கெனப் பிடிக்க வேண்டும். அதற்காக மற்ற தெய்வங்களை மதிக்காமல் இருக்கக்கூடாது. அவ்வகையில், அருணகிரிநாதர் மற்ற எல்லா தெய்வங்களையும் மதித்துப் பாடுவார். நிறைவில் முருகனை மட்டுமே வணங்குவார். இது அவருடைய மரபாகும். `எல்லாவற்றையும் மதி; ஒன்றையே துதி’ என்று வாழ்ந்தவர் இவர்.இவரை, `அருணகிரி வள்ளல்’ என்று குறிப்பிடுவர். ஆம், இவர்தான் வள்ளன்மையாக நமக்கு பல நன்மைகளைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, வில்லிபாரதம் என்ற நூல் எழுவதற்கு இவர்தான் விழுமிய காரணம். தலைக் கனத்தால் புலவர்களை வாதுக்கு அழைத்து, காதுகளை அறுத்துவந்த வில்லிபுத்தூராரை `கந்தர் அந்தாதி’ பாடி குறிப்பாக,‘‘திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதாதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தாதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்துதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே” – என்ற தகர வர்க்கத்திலான தங்கப்பாடலைப் பாடி, வில்லிபுத்தூராரை மடக்கி, வில்லிபாரதம் பாடுமாறு பணித்தவர் அருணகிரிநாதரே என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.அருணகிரியார் கிளி வடிவமெடுத்து பாடிய ஒரு இலக்கியம் கந்தர் அனுபூதி. இது ஞான மார்க்கத்தின் நிறைகுடம். பக்திமார்க்கத்தில் திழைக்கும் பக்தர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு. சில இறைவனின் கையில் கிளி இருப்பதைக் காண்கிறோம். நம் குறைகளை ஆண்டவனிடம் சொல்லும்போது கேட்டுக்கொண்டு, `சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ மறுபடியும் இறைவனிடம் சொல்லி நினைவூட்டுவது போலே, கிளி வடிவம் எடுத்து அருணகிரிநாதர் பாடிய அனுபூதியை நாம் இறைவனிடம் மனமுருகிப் பாடினால் நம்முடைய குறைகள் இருமுறை இறைவனிடத்தில் சொல்லப்பட்டு நிறைகளாக மாறும் என்பது நிஜம். அதனால்தான் அருணகிரியாரை, ‘‘கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி சொன்ன எந்தை” என்று துதித்தாரோ தாயுமானார்.நெஞ்சக்கல் நெகிழ்ந்துருகி மகிழ்ந்திருக்க, முருகனின் தஞ்சப்பாதத்தின் தண்ணருள் திழைத்திருக்க, அருணகிரிநாதரின் செஞ்சொற் புணைமாலைகளே நமக்குத் துணை செய்யும்.வழிகாட்டும் வள்ளல் அருணகிரிநாதரின் வனச மலரடிகளை வந்திப்போம். கௌமார சமயத்தின் கௌரவமாக விளங்கும் அருணகிரிநாதரை முப்போதும் சிந்திப்போம்.சிவ.சதீஸ்குமார்…

The post அருணகிரிநாதரின் அருட்பதம் போற்றி appeared first on Dinakaran.

Tags : Arunagirinath ,Mula Nakshatra ,
× RELATED திருப்புகழில் தெய்வங்கள்