×

தத்துவம் காட்டும் விநாயகரின் திருவுருவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி 31-8-2022விநாயகர் திருவுருவத்தை; ஔவையார், தாம் பாடிய ‘‘விநாயகர் அகவல்’’ என்னும் திருநூலில், மிகத் தெளிவாக விவரித்துள்ளார். ‘‘பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்; வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்; அஞ்சுகரமும் அங்குர பாசமும்; நெஞ்சிற்குடிகொண்ட நீல மேனியும்’’ கொண்ட கற்பகக் களிறு; மூஷிக வாகனத்தில் எழுந்தருளி அடியார்களை ஆட்கொள்ளும் பாங்கினை, அருளியுள்ளார்.விநாயகரின் திருவுருவத்தில் அமைந்துள்ள அங்க அவயவங்கள், மற்றும் பொருள்கள்; தத்துவரீதியாக எவ்வெவற்றைக் குறிக்கின்றன என்பதை அறிவோம்; விநாயகரின் திருவுருவம் சைவசித்தாந்தம் மற்றும் சிவாகமங்கள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரணவம் ஆகிய ஓங்காரம்; விநாயகர் முதற்கண் வழிபடும் கடவுள் ஆதலின்; அவருக்குரியதாயிற்று. தமக்கு மேலே, வேறொரு தலைவர் இல்லாதவர், என்னும் கருத்துப்பட அமையப் பெற்றது, விநாயகர், என்னும் அவரின் திருநாமம். விநாயகரின் திருவுருவில்; சிவன், விஷ்ணு, பிரமா ஆகிய மும்மூர்த்திகளின் அருட்தன்மைகளும், செயல்களும் பொருந்திக் காணப்படுகின்றன.ஓங்கார வடிவினர் ஞான வடிவினர், ஓங்கார வடிவினர், வேதமந்திர சொரூபி. விநாயகரின் முழுமையான வடிவம் ‘‘ஓம்’’ எனும் பிரணவத்தைக் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பிரணவன் என்பது அவரின் திருநாமம்.‘‘நாத விந்து களாதி நமோ நமவேத மந்திர சொரூபா நமோ நம.’’இவ்வாறு, அருணகிரிநாதர், திருப்புகழில், விநாயகப் பெருமானின் திருவுருவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.விநாயகரின் திருவடிவ அமைப்பு ஆண், பெண் இரண்டும் சேர்ந்ததே. வலது பாகம்: ஆண்; இடது பாகம்: பெண். விநாயகரது திருவுருவத்தில் அமைந்துள்ள நான்கு திருக்கரங்கள் அமரர்கூறு; வேழமுகம் விலங்கின் கூறு; பேழை வயிறும் குறுங்கால்களும்; பூதக் கூறு; என்பன ; உயர்திணை, அஃறிணை என்கின்ற திணைப்பாகுபாடு; மற்றும் ஆண், பெண், என்னும் பால்வேற்றுமை-இவற்றைக் கடந்தவர் என்னும் நிலைப்பாட்டினைக் கொண்டவர் என்பதை உணர்த்துகின்றன. உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும், தன்னுள் அடக்கம் எனச்சுட்டிச் சொல்லாமல் சொல்லும் அற்புத வடிவம் ஆக அமைந்துள்ளமை, நோக்கற்பாலது.விநாயகரின் யானைமுகம், பிரணவ சொரூபி என்பதை உணர்த்துகின்றது. மூன்று கண்கள்; சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முச்சுடரையும் உணர்த்துவதாக உள்ளன.விநாயகரின் இருபெரிய செவிகள் ஆன்மாக்களை ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களின் பாதிப்புக்கள் தாக்காமல், பாதுகாத்து வினை வெப்பத்தைப் போக்கியருள்பவர் என்பதைப் புலப்படுத்துகின்றன.பேழைவயிறு  பிரம்மாண்டங்கள் அனைத்தும் அதனுள் அடக்கம் என்பதைக் குறிக்கின்றது.திருவடிகள் விநாயகருடைய திருவடிகள் ஞானத்தின் நிலைக்களன். வந்த வினையும் வருகின்ற வெவ்வினையையும் வேரறுத்துப் போக்கும், திறத்தன. ஆனையானது தனது காலிலே, அடிவைப் பவனை; முடிமீது ஏற்றும் தன்மையது. அதேபோல, ஆனைமுகக் கடவுளின் அடிதாழ்பவர்களை, அவன் உயர்நிலைக்கு உயர்த்துவான். அத்துடன் மோட்சமும் அளிப்பான்.கும்பம் ஏந்திய கைபடைத்தல் தொழிலையும்; மோதகம் ஏந்திய கை, காத்தல் தொழிலையும்; அங்குசம் ஏந்திய கை, அழித்தல் தொழிலையும்; பாசம் ஏந்திய கை, மறைத்தல் தொழிலையும்; தந்தம் ஏந்திய கை, அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே, விநாயகர் ஐந்தொழில்களையும், தமது ஐந்து கரங்களால் புரிந்து, ஆன்மாக்களுக்குத் திருவருள் பாலிக்கின்றார்.மூன்று சக்திகள்விநாயகர்; இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி என்ற மூன்று சக்திகளை பொழிபவராக உள்ளார்.பாசம்பாசக்கயிற்றால், விநாயகர் உயிர்கள் உய்யும் பொருட்டுச்; சம்சார பந்தங்கள் கட்டிப்போடப்படுகின்றன.அங்குசம்தம்இச்சையாகத் திரிந்தோடும், மதம் பிடித்த நமது பஞ்சப் புலன்களை, இவ்வங்குசம் அடக்கி; மனம்போன போக்கிலே, போகவிடாமல் தடுத்து; நேர் வழியில் செல்லச் செய்கிறது.அட்ச மாலைஇம்மாலையிலுள்ள மணிகள் 56 ஆகும். அவை ஐம்பத்தாறு அட்சரங்களைக் குறிப்பன என்று கருதப்படுகிறது. அட்சரங்களாவன மெய்நூல்கள் வாயிலாக, விநாயகர் நமக்கு மெய்யறிவு புகட்டுகின்றார்.மோதகம்வெளியே மூடியுள்ள மாவுக்குள்ளே, இருக்கின்ற பூரணம் (பயிறு, தேங்காய், சர்க்கரை சேர்ந்த கலவை), மண்டைக்குள் உள்ள மகாபுத்தியைக் குறிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.இரத்தின கும்பம்ஏராளமான பொன் பொருளையும்; இரத்தினங்கள், மணிகள் ஆகியவற்றையும் வரையாது, வாரி வழங்குகின்ற விநாயகரின் அருள் இயல்பைக் குறிக்கிறது.பசு – கோடாரிஇவ் ஆயுதம், மெய்ஞ்ஞான அறிவை மறைக்கும், அஞ்ஞானத்தை, வெட்டி நீக்கும், கருவியாகக் கருதப்படுகிறது.நாகம்நல்லோரைக் காக்கவும், தீயோரைத் தண்டிக்கவும் பயன்படும் கருவி.சூர்ப்பணம்முறம் (சுளகு) போன்ற, அகன்ற காதுகள் எந்நேரமும் அசைந்து கொண்டேயிருப்பது, அடியார்களை; இடர்கள், விக்கினங்கள், அண்ட விடாமல், அவற்றை ஒதுக்கித் தள்ளுவதைக் குறிக்கின்றது.வேழமுகம்(யானைத்தலை) பிரணவத்தைக் குறிக்கிறது.பாம்புவயிற்றைச்சுற்றி, உதரபந்தனமாகப் பாம்பு பயன்படுகிறது. மூலாதாரத்தின் நாயகன், விநாயகன். மூலாதாரத்தில், மூன்றரைச் சுற்றுள்ள பாம்பு வடிவமாகக் குண்டலினி சக்தி உறங்குகின்றது. இதனைக்குறிக்கு முகமாகவே, பாம்பு விநாயகரின் வயிற்றைச் சுற்றி அணியப் பெற்றிருக்கிறது என்று நூல்கள் கூறுகின்றன.ஐந்து கரங்கள்விநாயகருக்கு நான்கு கரங்கள்; அவற்றுடன் தும்பிக்கையும் சேர்ந்து, ஐந்து திருக்கரங்கள் உள்ளன. தம்மை அணுகியவர்களைக் காக்கும் கரம், அபயகரம், பூரணத்திலிருந்து பூரணத்தை (முழுமை) எடுத்தாலும் மீதமாகவுள்ளதும் பூரணமே என்ற மகாவாக்கியத்தின் பொருளை விளக்கும், மோதகத்தை; ஒரு கரத்திலும்; மதம் பிடித்துள்ள யானையை அடக்கும் அங்குசப் படைக்கலத்தை மற்றொரு கரத்திலும்; உயிர்களைப் பற்றியுள்ள பாசம் என்னும் மலங்களை அடக்கும் பாசக் கயிற்றை, இன்னொரு கரத்திலும் தாங்கியும்; உலகின் எந்தமூலை, முடுக்குகளிலிருந்தாலும் தனது அடியவர்களை, நோக்கி, நீட்டிக்காக்கும் ஊறு உணர்ச்சிமிக்க துதிக்கையுமாக; விளங்கும் ஐங்கரன் ஆகக் காட்சியளிப்பவன் பிரணவப் பெருந்தகை.தலைபிறைச்சந்திரனைத் தலையில் தரித்துள்ளார். குற்றங்கள் புரிந்தாரேனும், அதனை உணர்ந்து, தம் திருவடிகளை வணங்கி வழிபடுபவர்களாயின்; அவர்களை மன்னித்து அருள்புரியும், எல்லையற்ற கருணையைக் காட்டுகின்றது.தோற்றம்விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு திருப்பாதம், பூமியையும்; தொந்திவயிறு, நீரையும்; மார்பு, நெருப்பையும்; நெற்றிப்பிறை, காற்றையும்; வளைந்த தந்தம், ஆகாயத்தையும் உணர்த்துகின்றன. விநாயகர் பஞ்ச பூதங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.Dr. குமாரசுவாமி சோமசுந்தரம்

The post தத்துவம் காட்டும் விநாயகரின் திருவுருவம் appeared first on Dinakaran.

Tags : Lord Ganesha ,Vinayagar Chaturthi ,Vinayagar Thiruvuruvatthi ,Auvaiyar ,
× RELATED திங்கள்கிழமை அன்று விநாயகரை...