×

சபரிமலை யாத்திரை கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

ஹரிக்கும், ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். சாஸ்தா, கலியுக வரதன், மணிகண்டன், தர்ம சாஸ்தா என பல பெயர் களில்  நாம் ஐயப்பரை வழிபடுகிறோம். ஆனந்த மயமான ஐயப்பன், தன்னலமற்ற குணத்தைக் கொண்டவர். தன்னிடம் வந்து மனதார வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டிய வரத்தை அளிப்பவர் சபரிமலைநாதன். எதற்காகச் சபரிமலைக்கு செல்வதற்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்று எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்கிறது. சபரிமலை ஐயப்பன் சன்னிதானமானது மலையின் மேல் இருப்பதால், பல துன்பங்களைத் தாண்டி அந்த இறைவனை தரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி செல்லும் வழியில் ஏற்படும் இடர்பாடுகளை நாம் தாங்கிக்கொள்வதற்காக எடுக்கப்படும் பயிற்சிகள்தான் இந்த விரதம். ஒரு மனிதன் தன்னைத்தானே பக்குவப்படுத்திக்கொண்டு ஒழுக்கமாக வாழ்வதற்கு பயிற்சி எடுத்துக் கொள்ளும் காலம் என்பதையும் இது குறிக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்ட பக்தர்கள் எப்படி விரதம் இருப்பது, எதை செய்வது, எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்1) துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி, அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினை இணைத்த மாலையை விரதம் ஆரம்பிக்கும் முன்னர், குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு, தாயை வணங்கி அவர் கைகளால் அணிந்து கொள்ளலாம். இல்லையெனில், குருசுவாமி கைகளால் மாலை அணிந்துகொள்ளலாம். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியால் கட்டிய மாலையை அணிய வேண்டும். துணைமாலையும் அணிய வேண்டும்.2) மாலையணிந்து கொண்டவுடன், குருசாமிக்குத் தங்களால் இயன்ற குருதட்சணையைக் கொடுத்து அடிவணங்கி ஆசிபெற வேண்டும்.3) ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து, குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளைத் தேவவாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.4) விரத காலங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்தநீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். இதனால் உடலும், மனமும், மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.5) தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்துகொண்டு, வாய்விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.6) விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து, பாடல்கள் பாடி அவர்கள் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரண கோஷங்கள் சொல்ல வேண்டும்.7) விரதகாலம் முழுவதும் ஒரு வேளை அளவோடு சைவ உணவருந்தி, இரவில் பால், பழம் போன்ற ஆகாரங்களை உட்கொண்டு உபவாசம் இருத்தல் வேண்டும்.8) சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலத்தில் கருப்பு, நீலம், ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.9) இரவில் படுக்கை, தலையணை போன்ற சுக சவுகரியங்களை தவிர்த்து, தரையில் வெறும் துண்டு, பாய் விரித்து அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும்.10) முறையாக விரதம் இருந்தால், தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில், மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து, புறப்படும் நாளன்று மாலை அணிவதில் தவறேதும் இல்லை.11) குளிக்கும் போது சாதாரணமாக சீகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.12) பக்தர்கள் மாலை தரித்த பிறகு, ஆண்களை ஐய்யப்பா என்றும், பெண்களை மாளிகைப்புரம் என்றும், சிறுவர்களை மணிகண்டன் என்றும், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.13) 48 நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே போற்றத்தக்க உத்தமமான செயலாகும்.14) சபரிமலை பயணத்தில் காலணி அணிந்து கொள்வது என்பது தங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அணிவதில் தவறில்லை.15) மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது “சாமி சரணம்‘’ என்று தொடங்கி, பின்னர் விடைபெறும் போது “சாமி சரணம்‘’ எனச் சொல்ல வேண்டும்.16) இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும்.17) 18 ஆண்டுகள் சபரிமலை செல்லக்கூடிய ஐய்யப்ப பக்தர்கள், தென்னங்கன்று எடுத்துச் செல்வதை (ஒரு சாஸ்திர சம்பிரதாயம்) வழக்கமாக கொண்டுள்ளனர். பசுமை சபரிமலையை உருவாக்குவது ஐயப்ப பக்தர்களின் லட்சியம். ஐயப்பமார்கள் எடுத்துச் செல்லும் தென்னங்கன்றுகளை சபரிமலையில் நடுவது இல்லை. எனவே, 18ம் ஆண்டு சபரிமலை செல்லக்கூடிய ஐயப்பமார்கள் இரு தென்னங்கன்றுகள் வாங்கி அதனை பூஜைசெய்து, ஒன்றினை சபரிமலைக்கும், மற்றொன்றை சபரிமலைக்கு செல்லக்கூடிய நாளில், அந்த ஐயப்பமார்கள் வீட்டிலோ அல்லது அவர்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயத்திலோ நட்டு வைத்து, அதனை அவர்களது குடும்பத்தினர் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்கலாம்.18) தொழிற்சாலைகளில் வேலை செய்யும்போது கடமையைச் சரிவர செய்யும் பொருட்டு ஷூ அணியலாம். இதில் குற்றம் எதுவும் இல்லை.19) மாலை போட்டுக்கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில், வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால், அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையை கழற்றுவது உத்தமம். ஆனால், தாங்கள் வெளியே எங்கேயாவது தங்கியிருந்தால் மாலையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை.20) ஒருமுறை உபயோகித்த இருமுடிப்பை, போர்வை போன்றவைகளை மறுமுறை உபயோகிக்கலாம், அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இரு முடிப்பையை, சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.21) பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருட்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.22) எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.23) ஐயப்பப் பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபட செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தல் அவசியமானது. (உதாரணத்துக்கு குருவாயூரப்பன் சந்நதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல் அமைதியாக வழிபடுதல்)24) சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.25) பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை மற்றவர்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் இடத்திலேயே கொண்டாடுவது  சிறப்பான செயலாகும்.26) சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எவ்வித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோர்க்கும் நன்று.27) இருமுடிக்கு பயன்படுத்தும் தேங்காய்களை அருள்மிகு ஐயப்பன் சந்நதியில் கொடுத்து நெய் அபிஷேகத்திற்கு நெய் எடுத்தபிறகு, அந்த தேங்காய் மூடிகளை கற்பூர ஆழியில் போடுவதற்கு பதிலாக, அன்னதானம் செய்யும் இடங்களில் தரும்பட்சத்தில், ஐயப்ப பக்தர்களின் அன்னதானத்திற்கு பயன்படுத்த தருவது சிறப்பு. ஐயப்பமார்களின் அன்னதானத்திற்கு இந்த தேங்காய் பயன்படுவதால், ஐயப்பமார்களுக்கு உணவளித்த பலன் கிடைக்கும்.கண்டிப்பாக தவிர்க்க‍ வேண்டிய செயல்கள்1) விரதத்தின் போது வீட்டுக்கு விலக்கான பெண்களின் அருகாமையை தவிர்க்க வேண்டும். அவர்கள் கையால் உணவு அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.2) விரத காலங்களில் மது, புகையிலை, சிகரெட் போன்ற பொருட்கள் லாகிரி வஸ்துகளை பயன் படுத்தக்கூடாது.3) பக்தர்கள் பகல் நேரத்தில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.4) இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கத்தில் பங்கேற்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களும், மலைக்குச் சென்று திரும்பும் வரை துக்கம் கேட்கக் கூடாது.5) தவிர்க்க இயலாத அல்லது குடும்பத்தில் ஏதேனும் இறப்பு நடந்து விட்டால், உடன் மாலையைக் கழற்றிவிட வேண்டும்.6) எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.8) விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். மாலை தரித்த வீட்டைத்தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.9) முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள் கன்னி பூஜையை அவசியம் செய்ய வேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னி பூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. ஐயப்பன், அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவது இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ, எப்போது இயலுமோ, வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு சாலையோரத்தில் உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றதை உதவலாம். இல்லையெனில் மலைக்கு செல்லும்போது உடன்வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேளை உணவளிக்கலாம்.10) ஐயப்ப விரதத்தில் மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை. ஐய்யப்ப பூஜை என்ற பெயரில் ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல.11) தான், இத்தனை முறை மலைக்கு சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்வது வேண்டாம்.12) மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதனை அவசியம் தவிர்க்க வேண்டும்.13) களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப் பிடித்தல் ஆகியவைகளை  கட்டாயம் தவிர்க்க வேண்டும்.14) இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுதலும், ஐயப்பபக்தி முறைகளுக்கு புறம்பானது.15) இருமுடி தாங்குபவர்களுக்கு பூ மாலை அணிவித்து அடுத்த நிமிடமே அந்த பூக்கள் மற்றவர்கள் காலில்படுவது விரும்பத்தக்க செயல் அல்ல.16) மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும்.17) சபரிமலை யாத்திரையின் போது கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது தவறானது. பக்தியும், பணிவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்று.18) சபரிமலை யாத்திரையின் போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லாவிதத்திலும் நல்லது.19) பம்பை நதிக்கரையில் ‘பம்பாசத்யா’ எனும் அன்னதானம் செய்யவேண்டும். சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து, அந்த புண்ணிய நதியை அசுத்தப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். மாறாக ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.20) கண்ணாடி பாட்டில்களையும், உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்தில் போட்டு, மற்ற ஐயப்பமார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தை செய்ய கூடாது. மேலும் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.21) சபரிமலை யாத்திரை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த பிறகே மாலையைக் கழற்ற வேண்டும். பம்பையிலோ, நடுவழியிலோ மாலையைக் கழற்றக் கூடாது.22) ஐயப்ப‍ன் வழிபாட்டை ஆவேசத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல் அமைதியாகவும், சாத்வீகமாகவும் இந்த விரதத்தை ஆண்டு தோறும் நாம் கடைபிடித்தால் ஓய்வில்லாமல் வாழும் நமக்கு ஓய்வு, மன அமைதி, ஆத்மபலம், நற்சிந்தனை ஆகியவை கிடைக்கும்.தொகுப்பு: குடந்தை நடேசன்

The post சபரிமலை யாத்திரை கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் appeared first on Dinakaran.

Tags : Ayyappan ,Hari ,Haran ,Shasta ,Kaliyuga Varadhan ,Manikandan ,Dharma Shasta ,Sabarimala ,
× RELATED ரத்தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி