×

எதில் பேய்த்தனமாக இருக்க வேண்டும்?

நன்றி குங்குமம் ஆன்மிகம் குலசேகர ஆழ்வாரின் பிரபந்தம் பெருமாள் திருமொழி.பெருமாளை அறியாதார் என்ற சொல் வைணவத்தில் உண்டு.பெருமாள் என்பது குலசேகரப் பெருமாள். ஆழ்வாரைத் தெரிந்துகொண்டால்தான், பெருமாளை நம்மாலே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். பெருமாள் என்றால் வைணவ மரபிலே ராமனைக் குறிக்கும். திருவரங்கநாதனுக்கு பெரிய பெருமாள் என்று பேர். பெரிய பெரிய பெருமாள் என்று சொன்னால், நரசிம்மரைக் குறிக்கும்.இப்படி ஒரு மரபு வைணவத்தில் உண்டு ராமானுஜர் குலசேகர ஆழ்வார் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் ஒரு கிளியைப் பார்த்து, ‘‘இங்கே வா, கிளியே, உனக்கு இன்னமுதம் நான் தருவேன். நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? திருவரங்கம் பாடவந்த சீர்பெருமாள் குலசேகர ஆழ்வாரை நீ சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் உனக்கு நான் இனிய அமுதத்தைத் தருவேன்.’’‘இன்னமுதம் ஊட்டு கேன் இங்கேவா பைங்கிளியேதென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமான் – பொன்னஞ்சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோன் எங்கள்குலசே கரனென்றே கூறு’’திருவரங்கநாதனைப் பெருமாள் என்று இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் திருவரங்கநாதனைப் பாடிய குலசேகர ஆழ்வாரை சீர்பெருமாள் என்று குறிப்பிடும் அழகைப் பார்க்க வேண்டும்.“பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே’’ என்பது குலசேகர ஆழ்வாரின் பாசுரத்தில் ஒரு வரி.இந்த ஒரே ஒரு தொடரை நாம் விளங்கி கொண்டுவிட்டால் போதும் குலசேகர ஆழ்வாரின் பக்தியை நாம் விளங்கிக்கொண்டவர்களாக ஆவோம்.“பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே”- மூன்று பதங்கள் இருக்கின்றன. பேயனாய் என்று ஒரு பதம்.ஒழிந்தேன் என்று ஒரு பதம்.எம்பிரானுக்கே என்று ஒரு பதம்.இந்த 3 பதங்களையும் தனித்தனியாகவும் இணைத்தும் நாம் ஆராய்ந்தால் இந்த வாக்கியத்தின் முழுப் பொருளையும் தெரிந்து கொள்ள முடியும்.பேயனாய்…பேயன் என்று இதில் ஆழ்வார் தன்னைத்தான் குறிப்பிட்டுக் கொள்கின்றார்.பேய் என்றால் என்ன பொருள்?எது ஒன்றையும் பிடித்துக்கொண்டால் விடாதது பேய். விரைவு என்று ஒரு பொருள் உண்டு. வண்டியை விரைவாக ஓட்டுகின்ற போது பேய் மாதிரி ஓட்டுகிறான் என்பார்கள். அதிகமாகச் சாப்பிட்டால், ‘‘என்ன, பேய் மாதிரி சாப்பிடுகிறான்” என்பார்கள். தூங்காமல் வேலை செய்தால் என்ன பேய் மாதிரி வேலை செய்கிறாய் என்பார்கள். தொடர்ந்து தூங்கினால் இது என்ன பேய்த் தூக்கம் என்பார்கள். பேய் நம்மை ஏற்றுக் கொள்வதில்லை. நாம் பேயை ஏற்றுக்கொள்வதில்லை. நம்மிடையே எத்தனை பேய்கள் உண்டுபணத்தைத் தவிர வேறொன்றும் நினைக் காமல் உலகத்தின் அத்தனை அம்சமும் பணம்தான் என்று பணத்தைத் துரத்திப்பிடிக்கும் வெறிகொண்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களை பணப்பேய் என்று சொல்லுகின்றோம்.அதைப்போல ஆழ்வார் பகவான் மீது பேய் போல பக்திகொண்டு இருக்கின்றார். அவனைத் தவிர வேறு எந்த சிந்தனையும் அவரிடம் இல்லை. ஆனால், உலகியலில் உள்ளவர்கள், இப்படி ஒட்டாமல் இருப்பவர்களைப் பித்தன், பேயன் என்றுதான் அழைப்பார்கள். அதை ஆழ்வாரும்ஏற்றுக் கொள்ளுகின்றார். அதனால்தான் மிகவும் எச்சரிக்கையோடு இந்தப் பாசுரத்தைத் தொடங்குகின்றார்.பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்பேயனே எவர்க்கும் இது பேசி என்?ஆயனே!  அரங்கா என்று அழைக்கின்றேன்பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கேஆழ்வாரைப் பொறுத்தவரை யாரைப் பார்த்தாலும் பேயர்களாகவே தோன்றுகிறது. அப்படிச் சொல்லியவர் அடுத்த வரியில் யார் என்னைப் பார்த்தாலும் பேயன் என்றுதான் நினைத்துக்கொள்வார்கள் என்கிறார். இதில் இன்னுமொரு நுட்பத்தைப் பார்க்க வேண்டும். அடுத்த வார்த்தைப் பாருங்கள். ‘‘இது பேசி என்?’’இது தீரக்கூடிய பஞ்சாயத்து இல்லை? இதைப் பேசி என்ன ஆகப்போகிறது. என்னை அவர்கள் பித்தன் என்று நினைக்கிறார்கள். நான் அவர்களைப் பித்தன் என்று நினைக்கின்றேன். அவர்களும் என்னை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நானும் அவர்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதனால் இதை மேற்கொண்டு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். என்னைப் பொறுத்தவரை நான் பேயன்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்ற முடியாதவற்றைக் குறித்து வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை. வெறும் வாதப் பிரதிவாதங்களில் என்ன பலன் இருக்கமுடியும்?அவரவர்கள் அனுபவமும் அவரவர்கள் உணர்வுகளும் அவரவர்களுக்கு. எனவே, நான் பேயன்தான் என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உலகத்தவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளுகின்றார்.இது சைவத்திலும் உண்டுமூத்த திருவந்தாதி பாடிய காரைக்கால் அம்மையார் தன்னை பேய்த்தன்மையோடு மாற்றிக் கொள்ளுகின்றார். பேய் உடம்பு தனக்கு வேண்டும் என்று சொல்லுகின்றார். திருவாலங்காட்டில் சிவபெருமான் நடனமாடுவதைக் கண்டு காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகும். இப்பதிகங்களில் புனிதவதி என்று தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் காரைக்கால் பேய் என்றே அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.செடித்தலைக் காரைக்கால் பேய்செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே”என்று இந்த அடைவுப்பாடல் குறிப்பிடுகிறது. உலகத்தோடு சேராதது பேய். அது தனி வாழ்வு. அதைப்போலத் தன்னுடைய வாழ்வும் விடாப்பிடியாக வேறொரு வஸ்துவை விடாது பிடித்துக் கொண்டிருப்பதால் பேய்த்தன்மை உடையதாக இருக்கிறது. உலகில் மூன்று தன்மை உடையவர்கள் இருக்கிறார்கள். உலகத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களை ஆழ்வார் உண்டியே உடையே என்று உகந்து ஓடும் மண்டலத் தாரோடு கூடுவது இல்லை என்கிறார்.இன்னொரு வகையினர் இருக்கின்றார்கள்அவர்கள் உலகத்தையும் மதிப்பார்கள். இறைவனையும் மதிப்பார்கள். உலக சுகங்களைத் தள்ளமாட்டார்கள். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வதுபோல ஒரு கையால் இறைவனைப் பிடித்துக் கொண்டு, ஒரு கையால் உலகியலைப் பிடித்துக்கொண்டு ஒரு கட்டத்தில் உலகியலை விட்டுவிட்டு, இரு கைகளாலும் இறைவனை பிடித்துக்கொண்டு கரை ஏறுபவர்கள்.மூன்றாவது வகை உண்டுகிருஷ்ணனைத் தவிர வேறுஎதுவும் தெரியாது. எங்கு பார்த்தாலும் அவர் களுக்கு இறைவன் காட்சிதான். பக்திதான். நம்மாழ்வாரும் அப்படித்தான். உலகியலில் இருந்து மாறுபட்டு இருந்ததால் மாறன் என்று பெயர். ஆண்டாள் நிலையும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான். தொண்டரடிப் பொடியாழ்வார் நிலையும் மற்றொன்றும் வேண்டா மனமே என்கின்ற நிலைதான். திருப்பாணாழ்வார் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று வேறொன்றையும் நினைக்காதவர்.அதைப்போலத்தான் குலசேகராழ்வார். தன்னை பேயனாய், உலகத்தில் இருந்து மாறுபட்ட சிந்தனையை உடையவனாய், செயலை உடையவனாய், மனதை உடையவனாய் என்று கருதிக்கொண்டு பேசுகிறார். பேய்களுக்கு இன்னொரு பேய் பிடிக்கும். பணத்துக்குப் பணம் பிடிக்கும். நிலத்துக்கு நிலம் பிடிக்கும். ஆழ்வார்களைப் போன்றவர்கள் பகவானை, பேய் போலப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அப்படியானால் பகவான் பேயா என்ற ஒரு கேள்வி எழும். ஆழ்வார்கள் பகவானைப் பல இடங்களில் பேயனாகவும் பித்தனாகவும் பாடியிருக்கிறார்கள். பேய்ச்சி முலையுண்ட பித்தனே என்று பாடியிருக்கின்றார்கள். பேயிடைக்கிருந்து வந்து மற்று அவள் தன் பெருமுலைச் சுவைத்திட என்று பாடியிருக்கின்றார்கள் ஆழ்வார்கள்.இப்படி எம்பெருமானை ஆழ்வார்கள் பேயனாகச் சொல்வது வழக்கம். ஒரே குறிக்கோளோடு இருந்தால் அது பேய்த்தன்மை. அது மட்டும் இல்லை பேய்த்தன்மை என்பது ஒரு வெறித் தன்மை. அது ஒருவிதமான ஒரே விஷய ஆழ்ந்த நம்பிக்கை. ஆழ்வார் பேயனாய் ஒழிந்தேன் என்று சொல்லுகிறாரே, இவர் அப்படித்தான் இருந்தாரா என்றால், ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் என்னதான் வஞ்சிக்களத்திலே ஆட்சிசெய்தாலும் அவர் எண்ணமெல்லாம் திருவரங்கனை எப்பொழுது சேவிப்பது என்பதில்தான் இருந்தது.“தினே தினே ரங்க யாத்திரை.” என்று அதில்தான் குறியாக இருந்தார்.அதைப்போலவே அவர் ராமாயணக் கதையைக் கேட்பது அவருடைய அன்றாட நிகழ்ச்சி. ஆயினும் அதிலும் அவர் ஒரு பேய்த் தன்மையைக் காட்டினார். கரதூஷண வதத்தின்பொழுது ராமனுக்குத் துணைபோவதாகச் சொல்லி தன்னுடைய படையை திரட்டச் சொன்னதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.அதனால் தன்னைப் பேயனே என்கின்றார். இவரை உலகியலில் திருப்புவதற்காக அமைச்சர்கள், இவரோடு சல்லாபம் செய்து கொண்டிருந்த பாகவதர்கள் திருடிவிட்டார்கள் என்று கோள் சொன்னபோது,பாகவதர்கள் திருடமாட்டார்கள்திருடக் கூடியவர்கள் பாகவதர்களாக இருக்க மாட்டார்கள். – என்று உறுதியோடு ஒரு காரியத்தைச் செய்கின்றார்.ஒரு குடத்தில் விஷப் பாம்பை விட்டு, ‘‘பாகவதர்கள் தவறு செய்தால் என்னைக் கடிக்கட்டும்’’ என்று சங்கல்பம் செய்துகொண்டு கையை விடுகின்றார்.ஆரம் கெட பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கேவாரம் கொடு குடப் பாம்பில் கை இட்டவன், மாற்றலரைவீரம் கெடுத்த செங்கோல் கொல்லிக் காவலன் வில்லவர்கோன்,சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியேஎன்று மணக்கால் நம்பி என்கிற ஆசாரியர் அருளிச்செய்கிறார். அடுத்த வார்த்தை ஒழிந்தேன்ஒழிந்தேன் என்றது மீளாத நிலை அடைந்தேன். அதற்கே அற்றுத்தீர்ந்தேன். இந்தப் பதத்தை அருளாளர்கள் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். உன்னோடு உள்ள உறவு ஒழிக்க ஒழியாது என்கின்ற ஆண்டாளின் பாசுரத்தைக் கவனத்தில் கொள்ளலாம். ஏதேனும் ஒரு இடத்திற்கு வந்து அங்கேயே முழுமையாக நிற்கும் நிலை இது. சஞ்சலம் இல்லாத தன்மை. ஆழ்வார்கள் என்றாலே எம்பெருமானுக்கு அற்றுத் தீர்ந்தவர்கள். எம்பெருமான் அழகிலும் குணத்திலும் படிந்து மீளமுடியாதவர்கள். அந்த உறுதிப்பாடு குலசேகர ஆழ்வாருக்கு இருந்தது. பேயனாகி ஒழிந்தேன் என்றால் யாருக்கு ஒழிந்து போனார் என்கின்ற ஒரு கேள்வி வருகிறதல்லவா. அதற்கான விடைதான் எம்பிரானுக்கே ஒழிந்து போனார். இதிலுள்ள ஏகாரம் அற்புதமானது.கீதையிலே 18வது அத்தியாயத்தில் இந்த வார்த்தையை மாம் ஏகம் என்று கண்ணன் பயன்படுத்துகின்றான். ஏகம் (என்) ஒருவனையே.ஒருவன் – அருமையான சொல்அந்த ஒருவன், உயர்வற உயர்நலம் உடையவன் – நாராயணனே நமக்கே பறை தருவான் என்ற வேத வாக்கியத்தின் (யேகோகோ வை நாராயண ஆஸீத் 🙂 அமைப்பு அப்படியே இங்கே சொல்லப்படுகிறது.உலகும் உயிரும் படைத்து மற்றுயாருமில்லா அன்றுதேவர் உலகோடு உயிர் படைத்தான்நீடு போல் குருகூர் ஆதிப்பிரான்நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே – நம்மாழ்வார்இந்த முழுமையான நம்பிக்கையை குலசேகராழ்வார் காட்டுகின்றார். பிரான் என்கின்ற சொல் அருமையான சொல். பிரான் என்றால் உபகாரம் செய்பவன். “எம்பிரானுக்கே” என்றால், உபகாரம் செய்யும் எம்பெருமானுக்கு ஆட்பட்ட வன் என்று பொருள். அதனால் குலசேகராழ்வார் அடைந்த லாபம் என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். பெருமாளுக்கே மாமனார் ஆனார். மற்ற விஷயங்களில் பேய்த்தனமாக இருப்பதை விட்டுவிட்டு எம்பிரான் விஷயத்தில் பேய்த்தனமாக இருக்க வேண்டும் என்பது ஆழ்வார் கருத்து.இனி எதில் பேய்த்தனமாக இருப்பது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.தொகுப்பு: பாரதிநாதன்

The post எதில் பேய்த்தனமாக இருக்க வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Anmigam Kulasekara Azhwar ,Perumal ,Vaishnava ,
× RELATED சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி...