×

பாவங்கள் இலைகள் போல உதிரும்

மார்க்கத்தின் ஐந்து தூண்களுள் ஒன்று தொழுகை. குர்ஆனிலும் நபி மொழிகளிலும் தொழுகையின் முக்கியத்துவம் பற்றிச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அபூதர் எனும் நபித்தோழர் கூறுகிறார்: ‘‘அது குளிர்காலம். மரத்திலிருந்து இலைகள் எல்லாம் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபிகளார் வெளியே கிளம்பினார். ஒரு மரத்தின் இரண்டு கிளைகளைக் கையில் எடுத்தார். அந்தக் கிளை களிலிருந்து இலைகள் உதிர்ந்துகொண்டிருந்தன. அப்பொழுது நபிகளார், என்னை அழைத்து, ‘‘ஒருவர் இறைவனின் திருவருளையும் இறைவனின் உவப்பையும் எதிர்பார்த்தவராக தொழுகையை நிறைவேற்றுகிறார் எனில், இந்த மரக்கிளைகளில் இருந்து இலைகள் உதிர்வதுபோல் அவனுடைய பாவங்கள் உதிர்ந்துவிடும்’’ என்று கூறினார்.தொழுகையின் பயன்களைப் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நபிகளார் இவ்வாறு கூறினார். ‘‘ஒருவர் அழகிய முறையில் அங்கசுத்தி (உளு தண்ணீரால் முகம், கை, கால்களைத் தூய்மையாக்குதல்) செய்கிறார். பிறகு பயபக்தியுடனும் சிந்தனையைச் சிதறவிடாமலும் தொழுகையை நிறைவேற்றுகிறார் எனில் அவர் சுவனம் செல்வார்.’’ரபீஆ எனும் நபித்தோழருக்கு ஓர் ஆசை. ‘நாம் இந்த உலகில் நபிகளாருடன் இணைந்து வாழ்கிறோம். அவருடனேயே இருக்கிறோம்; அவருடனேயே தொழுகிறோம்; அவருடனேயே பயணிக்கிறோம். ஆனால் மறுமையில்?’ ஆனால், ‘அவர் இறைத்தூதர், நாம் சாதாரண மனிதர். சொர்க்கத்திலும் நபிகளாருடன் நாம் இருக்க முடியுமா?’ எனும் எண்ணமும் அவரை ஆட்டிப் படைத்தது. இதைப் பற்றி நபிகளாரிடமே கேட்டு விடலாமே என்று நினைத்தார். ஒரு பயணத்தின் போது அதற்கான வாய்ப்பு வந்தது. இரவு நேரத்தில் ரபீஆ நபிகளாருடன் தங்கினார். தண்ணீர் கொண்டு வருதல், தொழுகைக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பணிவிடைகளையெல்லாம் செய்தார். அப்போது நபிகளாரே ரபீஆவின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் போல், ‘‘ரபீஆவே, ஏதேனும் கேளுங்கள்’’ என்றார்.உடனே ரபீஆ, ‘‘இந்த உலகில் தங்களுடன் நான் இருப்பதுபோல் சொர்க்கத்திலும் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்’’ என்றார். ‘‘இதைத் தவிர வேறு எதையாவது கேள்’’ என்றார், நபிகளார். ‘‘நான் கேட்பது இதை மட்டும்தான்’’ என்றார். ‘‘அப்படியானால் ஒன்று செய். உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் உன்னால் முடிந்த அளவு அதிகமாக தொழுகையை நிறைவேற்று. அதன்மூலம் எனக்கு உதவி செய்’’ என்றார், நபிகளார்.இறைத்தூதரை நேசிக்கிறோம் என்று நம்மிலும் பலர் வாயளவில் கூறத்தான் செய்கிறோம். அதே சமயம் தொழுகையில் எவ்வளவு அலட்சி யமாக இருக்கிறோம்! உண்மையிலேயே நாம் இறைத்தூதரை நேசிப்பவர்களாய் இருந்தால், சுவனத் தோப்புகளில் நாமும் நபிகளாருடன் இருக்க வேண்டும் என்றால் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்போமாக!– சிராஜுல் ஹஸன்இந்த வாரச் சிந்தனை ‘திண்ணமாக இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். அவர்கள் எத்தகையவர்கள் எனில்… தொழுகைகளைப் பேணுபவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள்தாம் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகள் ஆவர். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்’’ (குர்ஆன்22:12)….

The post பாவங்கள் இலைகள் போல உதிரும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை;...