×

மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை

கார்த்திகை ஐயப்பனுக்கு உகந்த மாதம். இம்மாதம் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். தன் வளர்ப்பு தாயின் தீராத தலைவலியினை போக்க புலிப்பால் கொண்டு வர காட்டிற்கு சென்ற மணிகண்டன் அங்கு தன்னை வழி மறித்த மகிஷி அரக்கியை வதம் செய்தான். மகிஷியால் துன்புற்ற தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, புலிகளாக மாறி, மணிகண்டனுடன் நாடு திரும்பினர். புலிகள் சூழ, ஒரு புலியின் மேல் அமர்ந்து வந்த மணிகண்டனைக் கண்ட அனைவரும் அவனின் தெய்வீக சக்தியினை உணர்ந்து கொண்டனர். அந்த தருணத்தில் மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, ‘நான் எய்த அம்பு விழும் இடத்தில் எனக்குக் கோவில் கட்டுங்கள்’ என்று தந்தையிடம் சொன்னார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் சபரிமலை என்று வரலாறு கூறுகிறது. கோயில் அமைப்பு பதினெட்டுப் படிகளின் மேல் ஏறிச் சென்றால், உயரமான இடத்தில், கிழக்கு நோக்கிய நிலையில் ஐயப்பன் சந்நதி இருக்கிறது. கருவறையில் ஐயப்பன், சந்நதி முத்திரையோடு குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். கோயில் வளாகத்தில், கன்னிமூல கணபதி, நாகராஜன் மற்றும் அம்மன் அவர்களின் சந்நதிகளும் உள்ளன. ஆலயம் ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் மட்டுமே வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நாட்களில் அதிகாலை 4 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடை திறந்திருக்கும். கார்த்திகை மாதம் மட்டும் முதல் தேதியில் இருந்து 41 நாட்கள் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜையின் நிறைவு நாளில் தங்கத்தால் ஆன உடை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தை மாதம் மகர விளக்கு பூஜை, சித்திரை விஷு ஆகிய தினங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மண்டல விரதம் சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது நடைமுறையாகும். மணிகண்டனை புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய அவரின் தாய் மற்றும் மந்திரி இருவரும் 41 நாட்கள் உடல் நலத்தால் பாதிக்கப்பட்டனர். ஐயப்பனின் தெய்வீக சக்தியினை அறிந்து அவரிடம் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அதனை நினைவுபடுத்தும் வகையில், ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது. பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றமடைந்தது. விரதம் இருக்கும் முறை சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உள்ளன. அதை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் வரை விரதமிருக்க வேண்டும். விரத தொடக்க நாளில் ருத்திராட்சம் அல்லது துளசி மணிகளால் செய்யப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். விரத நாட்களில் மாமிச உணவு, மதுபானங்கள், புகையிலை பயன்படுத்தக்கூடாது. மேலும் அநாகரிகமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். தலை முடி மற்றும் முகத்தில் வளரும் தாடி, மீசையை திருத்தம் செய்யக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்படும் வரை, தினமும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும். கருப்பு, நீலம் அல்லது குங்குமப்பூ நிறத்திலான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வயதில் மூத்த ஐயப்ப பக்தரின் வழிகாட்டுதலுடன், இருமுடி கட்டிச் சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்ப வேண்டும். சபரிமலைக்கு புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இருமுடி கட்டி , பருத்தித் துணி பையில் இறைவனுக்குப் படைப்பதற்கான பொருட்களை வைத்திருப்பார்கள். இந்தப் பையைத்தான் ‘பள்ளிக்கட்டு’ அல்லது ‘இருமுடி’ என்று  சொல்கின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு,  சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். சபரிமலைக்கு முதல்  முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் குங்குமப்பூ நிறம் கொண்ட  இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல வண்ண  இருமுடிகளைப்  பயன்படுத்துகின்றனர்.ஐயப்பன் சிலை சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும்  ஐயப்பன் சிலை, 1950-ம் ஆண்டில் நடைபெற்ற தீ விபத்தில் சேதம் அடைந்தது.  அதனைத் தொடர்ந்து ‘சிலையை யார் செய்ய வேண்டும்?’ என்று தேவப்பிரசன்ன  குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நதி முன்பாகச் சீட்டுப் போட்டுப்  பார்க்கப்பட்டது. அதில், தமிழகத்தை சேர்ந்த இருவரின் பெயர்கள் வந்தன.  அவர்கள் இருவரும் அதனை ஏற்று, கும்பகோணம், சுவாமிமலையை சேர்ந்த சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன்  சிலை உருவாக்கப்பட்டது. தற்போது அந்தச் சிலையே  வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது. சபரிமலை செல்ல… தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதற்குப் பல வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், குமுளி மற்றும் செங்கோட்டை வழியாக சுமார் 166 கிலோமீட்டர் பயணித்தும் பம்பையை அடையலாம். இதற்கு பஸ் வசதியுள்ளது. பம்பையில் இருந்து நான்கு கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டும். எரிமேலி வரை சென்று, அங்கிருந்து 45 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையிலும் நடந்து செல்லலாம். …

The post மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை appeared first on Dinakaran.

Tags : Karthic ,Iyappan ,
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை...