×

அனுமன் கண்ட அம்மன்

குரங்கணி, தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது குரங்கணி கிராமம். இங்கு கோயில் கொண்டு அருள்கிறாள் முத்துமாலையம்மன். சீதாதேவியின் ஆபரணமே இந்த அம்மன் என்று சொல்லப்படுகிறது. ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி, தனது முத்துமாலையை ராமபிரான் கண்டு வரவேண்டும், தான் கடத்தி செல்லப்படும் வழிப்பாதையைப்தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை எடுத்துப்போட்டார். அதோடு தனது ஆத்ம சக்தியையும் சேர்த்தே எடுத்துப்போட்டார். இலங்கைக்கு ராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு நந்தவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தது சீதாதேவியின் மாயைதான் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, சீதாதேவிதான் இந்த முத்துமாலையம்மன் என்றும் நம்பப்படுகிறது. ராமபிரானோடு கானகத்தில் இருந்த சீதாதேவியை, ராவணன் புஷ்பக விமானத்தில் பர்ணசாலையோடு பெயர்த்து எடுத்து, வான்வழியாக இலங்கைக்குக் கொண்டு சென்றான். செல்லும் வழியில் சீதாதேவி, ராமபிரானுக்கு அடையாளம் தெரியவேண்டி, தமது ஆபரணங்களை வான்வழியே கீழே போடுகிறாள். சீதாதேவியின் முத்துமாலை தாமிரபரணிக் கரையில் விழுந்தது. அந்த மாலை ஜோதி பிழம்பாய் மாறி, கோடிச் சூரியனாய் பிரகாசித்தது. சில காலங்களுக்குப்பிறகு அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர் கண்ணில் அந்த முத்துமாலை பட்டது. அதை எடுத்த அவர், வீட்டிற்குக்கொண்டு செல்ல நினைத்தார். ஆனால், சற்று யோசித்த அவர் விஷயம் வெளியே தெரிந்தால், அரண்மனை காவலர்கள் அதனைப் பறித்துச்சென்று விடுவார்கள். அதோடு கண்டெடுத்த உடனே ஏன் தரவில்லை என்று தண்டனையும் கொடுத்துவிடுவார்கள் என்று எண்ணி, அந்த முத்துமாலையை ஒரு மண் தாழிக்குள் வைத்து மூடி, அதைக்குழிதோண்டி மறைத்து வைத்தார். பின்பொரு சமயம், பெய்த மழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டோட, மண்ணில் உருண்டோடி மேலே வந்தது மண்தாழி. அதை லிங்கம் என்பவரும், அவரது தம்பிகளும் கண்டனர். அது ஏதோ மந்திரித்து வைத்த தாழி போல் தெரிகிறது என்று பயந்த அவர்கள், அதைத் தொடாமல் வீட்டுக்குச் சென்றனர். அன்று இரவு அவர்கள், கனவில் அம்பாள் தோன்றி, ‘அந்த தாழியில் முத்துமாலை இருக்கிறது. அதை யாரும் அபகரித்து விடக்கூடாது. ஆகவே, அந்த தாழியை கொண்டு வந்து அதன்மேல் எனக்கு பீடம் அமைத்து, கோயில் கட்டி வழிபட்டுவந்தால், நீங்கள் கேட்டதை தந்து, உங்கள் வாழ்வை வளமாக்குவேன்’ என்றாள். விழித்தெழுந்த சகோதரர்கள், தம் ஒவ்வொருவருக்கும் தோன்றிய ஒரே கனவைப்பற்றி பேசிக்கொண்டனர். பின்னர் கனவுப்படி செயல்பட சென்றனர். தாழியைக்கண்ட இடத்தில் அது இல்லை. திகைப்புற்றனர்.சற்றுதூரத்தில் தாமிரபரணி கரையோரம் ஓரிடத்தில் குரங்கு ஒன்று தாழி புதைந்து இருந்த இடத்தை உற்றுநோக்கி பார்த்துக்கொண்டிருந்தது. அதனருகே சென்ற லிங்கமும் அவரது தம்பிமார்களும், ஆஞ்சநேயா என அழைத்து இருகரம் கூப்பி வணங்கி தாழியைக்காட்டு என்றனர். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, குரங்கு தன் கரங்களால் மண்ணைக்கிளறிவிட்டு அங்கிருந்து அகன்றது. அந்த  இடத்தில், லிங்கம் பார்த்தபோது தாழி தென்பட்டது. அதனை எடுத்த அவர்கள், தாமிரபரணி கரையில் முத்துமாலை இருந்த தாழி கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் தாழியை குழிதோண்டிப்புதைத்து, அதன் மேல் மண்பீடம் கட்டி முத்துமாலைக்காக அம்மன் வந்ததால், “முத்துமாலை அம்மன்’’ என்றே நாமம் இட்டு வணங்கி வந்தனர். குரங்கு வந்து காட்டியதால் இது சீதாதேவியின் அம்சம்தான் என்று எண்ணினர். லிங்கம் மற்றும் அவரது தம்பிமார்கள் வழி வந்த இரண்டாவது தலைமுறையினர். மண்ணால் அம்மனுக்கு உருவம் (ஓட்டுருவம்) கொடுத்து வழிபட்டு வந்தனர். கோயில் எடுத்துக்கட்டப்பட்டது. இதையடுத்து நவாப் ஆட்சி செய்த காலத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக, அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதிகாரி, கோவிலுக்கு குதிரையில் வந்தார். அவ்வூரை சேர்ந்த நான்கு சகோதரர்கள் தடுத்தனர். அப்போது, அந்த அதிகாரி ‘‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடு கிறேன், அது பதில் சத்தம் தருமா?’’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர்.உடனே ‘முத்துமாலை அம்மன்… முத்துமாலை அம்மன்’ என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி. ‘‘என்ன?’’ என்ற சத்தம் இடிபோன்ற ஒலி கோயில் கருவறையில் இருந்து கேட்டது. சத்தத்தை கேட்ட உடன், அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். குதிரைகளும் மயங்கி விழுந்தன. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன், ‘தாயே மன்னித்து விடு’ என்று கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வேண்டி நின்றனர்.உடனே, அம்மன் அருள் வந்து ஆடும் நபர், அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும், அதிகாரிக்கும் குதிரைகளுக்கும் சுய உணர்வு வந்தது. இந்த சம்பவத்தின் நினைவாக கோயில் இடிக்காமல் காக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் இரண்டு மண் குதிரைகள் செய்து வைக்க அதிகாரி தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோயிலில் பெரிய சுவாமி சந்நதியில் காணலாம். 1957-ல் அம்மனுக்கு மண்டபம், கோபுரம் மற்றும் கோட்டை மதிலுடன் கோயில் கட்டினார்கள். மகாகும்பாபிஷேகமும் நடந்தது. அப்போது, ஓட்டுருவத்தில் இருந்த அம்மன் சிற்பம் அகற்றப்பட்டு, கல்லால் ஆன அம்மன் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு, தினசரி அம்மனுக்கு இரு வேளை பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. கோயிலில் தாமிரபரணி ஆற்றங்கரையை நோக்கியும், ஒரு வாசல் இருக்கிறது. அம்மனுக்கு இடதுபுறம் நாராயணர், ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். சீதா தேவியே முத்துமாலையம்மன் வடிவில் இங்கு அருள்பாலிக்கிறாள் என்று கூறுகின்றனர். ராவணனை ராமபிரான் வெல்வதற்குத் துணையாக நின்றது மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கடையம் வழியாக அணிஅணியாக வந்த  வானரப்படைகள். குரங்குகள் இங்கு அணிவகுத்ததால், குரங்கணி என்றானது. முத்துமாலை அம்மன் கோயிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால், பாவ விமோசனம் கிடைக்கும். இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், ஆனி மாதம் நடைபெறும் பெருந்திருவிழாவே முதன்மையானது ஆகும். அப்போது முத்துமாலை அம்மனுக்குச் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்பட்டு, அன்று முத்துமாலை அம்மன் திருவீதி உலா வருவாள். அந்த அழகை காணக்கண்கோடி வேண்டும்.தொகுப்பு: சு. இளங் கலைமாறன்

The post அனுமன் கண்ட அம்மன் appeared first on Dinakaran.

Tags : Anuman ,Amman ,Monarangani, Thuthukukududuthukudi District ,Aeral ,Monkey Village ,Muthumalayamman ,Sitadeevi ,
× RELATED வாழ்வில் வளம் சேர்க்கும் “ராம நவமி’’