×

மகத்தான புண்ணியங்களை அள்ளித்தரும் மாசி மகம்

மாசி மகம் 17-2-2022மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா “மாசி மகம்” தான். சைவ, வைணவ, அம்பாள், முருகன் என எல்லா தெய்வங்களுக்கும் மாசிமகம் திருவிழா தான். மாசி மகத்தின் சிறப்புக்களை முப்பது முத்துகளாகத் தொகுத்துக் கொடுக்கின்றோம் வாசகர்களான உங்களுக்காக….1. குரு சந்திர யோக நாள்நட்சத்திரங்கள் இருபத்தி ஏழு. ராசிகள் 12. இந்த 27 நட்சத்திரத்தில் 10வது நட்சத்திரம், (கர்ம நட்சத்திரம்) மகம். பதினோராவது ராசி கும்ப ராசி. மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, கும்ப ராசியில் இருந்து சூரியன் சந்திரனை பார்க்கும் காலமே புனிதமான “மாசி மகம்” உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு என்னவென்று சொன்னால், இந்த கும்ப ராசியில் குருபகவானும் இருக்கிறார். குரு, சந்திரனை பார்ப்பதால் மிகப் பெரிய குரு சந்திர யோகம் ஏற்படுகின்றது. கால புருஷனுக்கு 5ஆவது ராசியான சிம்ம ராசி பூர்வபுண்ணிய ராசியாகும். சூரியன் ஆன்மா. சந்திரன் மனம். உடல் என்றும் சொல்வார்கள். இந்த மாசிமகத்தில் நீராடுவதால், நீருக்கு காரணமான சந்திரன் மூலமாக, உடல் தூய்மையும், சூரியன் மூலமாக ஆன்ம தூய்மையும் கிடைக்கிறது. சந்திரன், சிம்ம ராசியில் கேதுபகவானின் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது இந்த மாசி மகம் வருவதால், இந்த நீராட்டம் செய்கின்ற பொழுது நம்முடைய கர்ம வினைகள் தீர்த்து விடுகின்றன.2. நல்வாழ்வைத் தரும் மாசி மகம்மாசிமக காலத்தில் புனித நீராடுவதும், புண்ணிய யாத்திரை செய்வதும், புனித கோயில்களைத் தரிசிப்பதும், பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும். தோஷங்களை நீக்கி, நீடித்த நல் வாழ்வைத் தரும். சைவ ஆலயங்களாக இருந்தாலும், வைணவ ஆலயங்களாக இருந்தாலும், எந்த பெரிய விழாவிலும் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும். வைணவ விழாவில் இதனை “அவபிரதம்” என்று சொல்லுவார்கள்.திருமலையில் கூட பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கர தீர்த்தம் நடைபெறும். சைவத்தில், இதனை தீர்த்தவாரி என்பர். பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழாவின் நிறைவு நாளில் மட்டுமல்லாது வேறு சில நாட்களிலும் தீர்த்தவாரி நடைபெறும். கிரகண காலங்களிலும், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி முதலிய நாட்களிலும் தீர்த்தவாரி விழா நடைபெறும். மாசி மாதத்திற்கு “மாகம்’’ என்று பெயர். மாசி பௌர்ணமி தினத்தன்று மகம் நட்சத்திரம் இணைவதால், மாகம் என்பது மகமாக மாறியது என்பார்கள். “அகம்” என்றால் பாவங்கள் அல்லது மாசுகள். “மா” என்றால் இல்லை என்று பொருள். “பாவங்களை இல்லை” என்று ஆக்கும் நாள் மாசி மகம்.3. மாசி மகமும், மகா மகமும்பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல் என்பது மிக மிகத் தூய்மையானதாகவும், புண்ணியம் ஆனதாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது, குரு பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இவர் சிம்ம ராசிக்கு வருகின்ற பொழுது, குருவும் சந்திரனும் ஒன்றாகச் சேர்வார்கள். இப்போது பார்வைத் தொடர்பு. அப்போது சேர்க்கை தொடர்பு. அப்போது அவர்கள் இருவரையும் சூரியன் கும்ப ராசியில் இருந்து பார்ப்பார். இந்த பௌர்ணமி தினமானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதை “மகாமகப் பெருநாள்” என்று கொண்டாடுகிறோம். மகாமகத்தை பேச்சு வழக்கில் “மாமாங்கம்’’ என்று கூறுகின்றனர்.4. மாசிமகம் கும்பகோணத்தில் ஏன் விசேஷம்?கும்பகோணத்திற்கு மட்டும் அப்படி என்ன ஒரு விசேஷம் என்று கேட்கலாம். ராசிகளில் மாசி மாதத்திற்கு உரிய ராசி கும்ப ராசி. அதிலே, கும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குரு, சிம்ம ராசிக்கு வந்து சந்திரனுடன் சேரும் காலம் தான் மகாமகம். சிம்ம ராசி என்பது கால புருஷனுக்கு 5 ஆவது ராசி(புண்ணிய ராசி). ஐந்தாவது ராசியை திரிகோண ராசி அல்லது கோண ராசி என்று சொல்லுவார்கள். கும்பமும் (கும்பராசியும்) கோணமும் (திரிகோண ராசியான சிம்மம்) சந்திக்கக்கூடிய புனிதமான நாள் என்பதால் கும்பம் +கோணம் இணைந்து கும்பகோணம் ஆகியது. கும்பகோணம் மிகச் சிறந்த புனிதத் தலமாக ஆதிகாலத்திலிருந்து கருதப்படுகிறது. அங்கே மகாமக குளம் இதற்கென்றே உருவாக்கப்பட்டது. மகாமக தீர்த்தம் “அமிர்த தீர்த்தம்” என்று சொல்லப்படுகின்றது. மகாமக தீர்த்தத்தில் நீராடி வணங்கினால் மறுபிறப்பற்ற அமரத்துவம் அடையலாம் என்று புராண நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.5. சோடஷ லிங்கங்கள்16 சிவாலயங்கள் மகாமகக் குளக்கரை சுற்றிலும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சோடஷலிங்க ஆலயங்கள் என்று அழைக்கின்றார்கள். இதில், ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், புரணேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபாகேஸ்வரர், நிருதீஸ் வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ லிங்கங்கள் என அழைக்கப்படும். பிற நகரங்களில் செய்த பாவங்கள் காசியில் தீரும். காசியில் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் தீரும். கும்பகோணத்தில் செய்த பாவங்கள் கும்பகோணத்திலே தீரும். காரணம், கும்பகோணம் மாசிமக சிறப்பால் அத்தனை புனிதம் அடைந்த தலமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் கும்பகோணத்தில் வந்து, மாசிமக நாளில் புனித மடைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.6. எப்படி நீராடுவது?நீராடும் நீரை கங்கையாகக் கருதி குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை ‘சப்த தீர்த்தம்’ என்று சொல்வர். கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, `கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ என்னும் ஸ்லோகத்தை சொல்லி விட்டு குளித்தால் சாதாரண குளியல் கூட புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தை தரும்.7. பலகோடி தீர்த்தங்கள் சேரும் இடம்புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும், பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்கள் தீர சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான், ‘‘கும்பகோணத்தில் அக்னித்திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில், குரு சிம்ம ராசியில் இருக்கும்போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்” என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி, தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன. நிஜத்தில் மாசி மகம் அன்று அறுபத்தி ஆறு கோடி தீர்த்தங்களும் மகா மக குளத்தில் வந்து கலப்பதாக ஐதீகம். இந்த மகாமக குளத்தினை நவ கன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால், இந்த தீர்த்தம் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன. அதே தீர்த்தத்தில் நாமும் நீராட நம் பாவங்கள் போகும் அல்லவா?8. தானம் தர வேண்டும்மகாமகக் குளத்தில் நீராடி, கரையில் உள்ள மண்டபங்களில் தானம் தரவேண்டும் என்று ஆதி நூல்கள் வரையறுத்துச் சொல்லியிருக் கின்றன. மாசி மகத்தில், புனித நீராடி, தானம் தருவது என்பது முக்கியமானது. பொதுவாகவே எந்த புனித நதியில் நீராடினாலும் தானம் தர வேண்டும். புனித நீராடலில் இது ஒரு அங்கமாகும். காலப்போக்கில் வழக்கொழிந்து விட்டது என்றாலும் கூட, இன்றைக்கும் புனித நீராடிவிட்டு வருகின்ற பொழுது, ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பொருளைத் தருவது என்பது இன்னும் சிலரிடமும் இருக்கிறது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் புனித நதிகளில் நீராடுவது இயலாத காரியம் என்று சிலர் நினைக்கலாம். ‘‘உள்ளமே பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலர் சொன்னபடி, தினசரி நம்முடைய நீராட்டத்தை புனித நீராட்டமாக மாற்றிக் கொள்ளலாம். நீரை சப்த நதிகளாக பாவித்து வணங்கி, அந்த நதிகளின் சங்கமமாக கற்பனை செய்துகொண்டு நீராடி வழிபட வேண்டும்.9. தீர்த்தவாரியில் 12 சிவன் கோயில்கள்மாசி மகம் அன்று ஒரே நேரத்தில் 12 சிவாலயங்கலிருந்து ஸ்வாமிகள் புறப்பாடாகி, ஒரே இடத்தில் தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமே யாகும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒரு தனி வரலாறு உண்டு.1. நவகன்னியர் அருள் பாலிக்கும்     இடம் – காசி விஸ்வநாதர் கோயில்2. அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய     இடம் – கும்பேஸ்வரர் கோயில்3. வில்வம் விழுந்த     இடம் – நாகேஸ்வரர் கோயில்4. உறி (சிக்கேசம்) விழுந்த     இடம் – சோமேஸ்வரர் கோயில்5. பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த     இடம் – கௌதமேஸ்வரர் கோயில்6.தேங்காய்(நாரிக்கேளம்) விழுந்த     இடம் – அபிமுகேஸ்வரர் கோயில்7.சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த     இடம் – பாணபுரீஸ்வரர் கோயில்8.புஷ்பங்கள் விழுந்த     இடம் – கம்பட்ட விஸ்வநாதர் கோயில்9.மற்ற உதிரி பாகங்கள் விழுந்த     இடம் – ஏகாம்பரேஸ்வரர் கோயில்10.அமிர்தத் துளிகள் விழுந்த     இடம் – கோடீஸ்வரர் கோயில்(இக்கோயிலின் கிணறு)11. சந்தனம் விழுந்த     இடம் – காளஹஸ்தீஸ்வரர் கோயில்12. அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த     இடம் – அமிர்தகலசநாதர் கோயில்10. பூமியை வராகப் பெருமான் நிலை நிறுத்திய நாள்மாசி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. இதைப்பற்றி வெவ்வேறு புராணங்கள் கூறுகின்றன. வராக பெருமாள் பூமிப் பிராட்டியை மீட்பதற்காக கடலுக்குள் நுழைந்து, ஆற்றலுடன் போரிட்டு, இரண்யாட்சனைக்கொன்று, தன்னுடைய தந்தத்தால் பூமிப் பிராட்டியை தாங்கி பூமியை உத்தாரணம் செய்தார். இதை நம்மாழ்வார் “கோலவராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்” என்று ஒரு அழகான பாசுரத்தில் பாடுகின்றார். ஆண்டாளும், “பாசி தூர்த்தக் கிடந்த பார்மகட்குப் பண்டு ஒரு நாள், மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம், தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்” என்று பாடுகின்றார். இப்படி வராகப்பெருமாள் பூமியை உத்தாரணம் செய்த நாள், மாசிமக நாள் என்று கூறுகின்றார்கள்.11. வருணனின் தோஷம் நீங்கியதுநீரின்றி அமையாது உலகு. வருண பகவான் நீர் தேவதை. நாம் எந்த பூஜை, ஹோமம் போன்ற காரியங்கள் செய்தாலும், முதலில் வருண பகவானைத்தான் ஆவாகனம் செய்வோம். வருண பகவானுக்கு உரிய திசை மேற்கு திசை. ஆண்டாள் வருண பகவானை “ஆழிமழைக் கண்ணா” என்று அழைத்து, “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய வேண்டும்” என்று கட்டளை இடுவதாக திருப்பாவையில் வருகின்றது. இந்த வருண பகவானுக்கு ஒருநாள் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனை நீக்கிக் கொள்வதற்காக இறைவனிடம் சரண் அடைந்தார். இறைவன் அவருடைய பிரம்மஹத்தி தோஷத்தை, மாசி மக நீராட்டத்தின் போது நீக்குவதாக உறுதி அளித்தார். அப்படி வருணனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய நாள் மாசிமக நாள். அன்று நீராடி இறைவனை தரிசனம் செய்ய நம் தோஷங்கள் நீங்கும்.12. தந்தைக்கு உபதேசம் செய்த நன்னாள்முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று சுவாமிமலை. பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசம் செய்ததால் முருகப்பெருமானுக்கு சுவாமிநாதன் என்று பெயர். ஓம்காரமாகிய பிரணவ மந்திரத்திற்கு உயர் பொருளை முருகப் பெருமான் பரமசிவனுக்கு உரைத்த நாள் மாசி மகம் நன்னாள். சிம்மராசியாகிய ஐந்தாவது ராசி புத்திர ராசி. (முருகன்) அது தந்தையாகிய சிவனுக்குரிய ராசி. அங்கு ஞானகாரகனாகிய கேதுவின் மகம் நட்சத்திரத்தில் உயர் ஞான பொருள் உரைத்தது பொருத்தம் தானே.13. மாசி மகமும் திருச்செந்தூரும்அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். சூரபத்மனை ஜெயம் கொண்ட அவருக்கு ஜெயந்தி நாதர் என்று பெயர். அறுபடை வீட்டில் இரண்டாம் தலமான திருச்செந்தூரை ஜெயந்திபுரம் என்றும் அழைப்பார்கள். இங்கே மாசிமக கடல் புனித நீராடல் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் அன்று திருச்செந்தூர் கடலில் நீராடி ஜெயந்திநாதரை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் வெற்றிகள் பல கிடைக்கும் என்பது நம்பிக்கை.14. மாசி மகத்தில் பற்பல உற்சவங்கள்மாசி மகம் ஒட்டி பல்வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்களில் விழா மற்றும் பிரமோற்சவங்கள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, கோவை அருகே காரமடை அரங்கநாதர் கோயில் தேர் உற்சவம், குடந்தை சக்கரபாணி கோயில் தேர் உற்சவம், மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் மற்றும் அழகர்கோயில் கள்ளழகர் முதலிய கோயில்களில் தெப்ப உற்சவம், மதுரையில் திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலைக்கு எழுந்தருளி கஜேந்திர மோட்சம் போன்ற சிறப்புகள் தமிழகமெங்கும் உள்ள கோயிலில் நடைபெறுகின்றன.கோயம்புத்தூருக்கு அருகில் உள்ளது காரமடை. இங்குள்ள காரமடை ரங்கநாதர் ஆலயம் புகழ் பெற்றது. பெருமாள் ரங்கநாதர் என்ற பெயரில் இருந்தாலும், பள்ளிகொண்ட கோலத்தில் இல்லாமல் சிறிய கம்பத்தில் இருக்கின்றார். முகம் மட்டுமே இருக்கிறது. இவர் சுயம்புவாக ஆனவர். இங்கே மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அதன் கடைசி நாளாகிய தேர்த்திருவிழா மாசி மகத்தன்று மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.15. மிகப் பழமையான விழாமாசிமகம், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது என்பதால், மிகப் பழமையான விழா என்று தெரிகிறது. மாசி மாதம், முழு நிலா, மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் சிறப்பான நாள். கடலாடும் விழா என்று பெயர். பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது, இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும், நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். மாசி மகம் அன்று உபவாசமிருந்து, கடலில் நீராடி, தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது என்பது பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற மரபு.16. பாவம் போக்கும் மூன்று தீர்த்தங்கள்புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். சிவபெருமான், 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஈஸ்வரனுக்கு சுவேத ஆரண்யேஸ்வரர் என்று பெயர். அம்மனுக்கு பிரம்ம வித்யாம்பிகை என்று பெயர். வித்தைக்கு அதிபதியான இந்த அம்பிகையை வணங்கி, கல்வி கேள்விகளில் மிகச்சிறந்த புகழை அடையலாம். இங்கு மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது, அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. மாசி மகம் அன்று சூரிய, சந்திரனைப்பார்க்க, அக்னி ராசியான சிம்ம ராசியில் சந்திரன் இருக்கிறார் என்பதால் விசேஷமான தினம். அன்று திருவெண்காட்டில் உள்ள மூன்று தீர்த்தங்களிலும் உள்ள நீரை தலையில் தெளித்துக் கொண்டு அம்பிகையையும், ஈஸ்வரனையும் வழிபடுவதன் மூலமாக சிறந்த பலன்கள் கிடைக்கும்.17. கொடிய தோஷங்கள் போக்கும் மாசி மகம்முற்பிறவிகளில் செய்த கொடிய பாவங்களும், இப்பிறவியில் அறியாமல் செய்யும் பாவங்களும், துன்பங்களை தந்து கொண்டே இருக்கும். மகத்தில் நீராடினால், சென்ற பிறவியில் செய்த பிரம்மஹத்தி தோஷம் எனும் கொலை பாவம், கோயில் சொத்துக்களை திருடிய பாவம், பிறர் சொத்துக்களை கவர்ந்த பாவம், பெண்களை இழிவு படுத்தி சாபத்தை ஏற்படுத்திக் கொண்ட பாவம், நன்றாக வாழும் தம்பதிகளைப் பிரித்த பாவம், ஒன்றாக இருந்த குடும்பத்தை கோள் சொல்லி பிரித்த பாவம் முதலிய மகா பாவங்கள் தீர்ந்துவிடும் என்று சொல்லப்படுகின்றன. எனவே சஞ்சித (பழைய) வினைகள் தீர மாசிமக நீராட்டமும், வழிபாடும், தானங்களும் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.18. எமன் அவதரித்த நாள்கால தேவனாகிய எமன் அவதரித்த நாள் மாசி மகம் என்ற ஒரு குறிப்பும் புராண நூல்களில் இருக்கிறது. உலகம் பிரளயத்தில் ஒடுங்கி, லயமான போது கால தேவனாகிய எமனும் அந்த பிரளயத்தில் மறைந்து போனான். மறுபடியும் உலகம் படைக்கப்பட்டது. நீதியை நிலைநாட்டவும், சமதர்மத்தை நிலை நிறுத்தவும் மறுபடியும் காலதேவன் தோற்றுவிக்கப்பட்டான். அப்படி எமன் அவதரித்த நாள் இந்த மாசி மகம் என்பதால், அன்றைய தினம் தெற்கு திசையை நோக்கி வணங்குவதன் மூலமாக பித்ருக்களின் ஆசியும், காலதேவன் ஆசியும் கிடைக்கும்.19. மாசி மகத்தில் திருகோஷ்டியூர் தெப்பம்108 திவ்யதேசங்களில் மிகச் சிறந்த திவ்யதேசம் திருகோஷ்டியூர். “ஓம் நமோ நாராயணாய” எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். ராமானுஜரின் ஐந்து ஆசாரியர்களில் ஒருவரான திருகோஷ்டியூர் நம்பிகள் அவதரித்த இந்தத் திருத்தலத்தில் தான் ராமானுஜர் 18 முறை நம்பிகளிடம் நடந்து, ரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதை ஆசையுடன் கேட்டவர்களுக்கு கூறினார். பெரியாழ்வார், இங்கு தான் கண்ணன் அவதரித்தார் என்று பிள்ளைத் தமிழில் பாடினார். இப்படிப்பட்ட இந்த திருகோஷ்டியூர் திருத்தலத்தில் உள்ள புனித தீர்த்தத்தில் மாசி மகம் அன்று அற்புதமான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.20. பிராத்தனைகள் நிறைவேற விளக்கு ஏற்றும் விழாதெப்பத்திருவிழா அன்று குளக்கரையில் பக்தர்கள் புதிய தீபம் நேர்ந்து கொண்டு ஏற்றுகிறார்கள். என்ன நினைத்துக் கொண்டு தீபம் ஏற்றுகிறார்களோ, அது அடுத்து ஒரு வருடத்தில் நடந்துவிடுகிறது என்பது இங்குள்ள மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. மாசி மகம் அன்று குளக்கரையில் ஏற்றிவைத்த தீபத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட வேண்டும். தங்களுடைய கோரிக்கை நிறைவேறியவுடன் அடுத்து வருகின்ற மாசிமகம் அன்று அந்த விளக்கோடு புதிய விளக்கு ஒன்றையும் இந்த குளக்கரையில் ஏற்ற வேண்டும். புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது, பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூவன். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை `மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.21. தலம், மூர்த்தி, தீர்த்தம்மாசி மாதம் என்றாலே தீர்த்தமாடுதல், தீர்த்தவாரி உற்சவம் என்றுதான் பெயர். அன்று கோயில் உற்சவ மூர்த்திகள் ஏதேனும் ஒரு நீர் நிலைக்கு ஆறோ அல்லது குளமோ அல்லது சமுத்திரமோ வந்து தீர்த்தவாரி உற்சவம் நடக்கும். இதன் மூலமாக அந்தந்த தீர்த்தங்கள் புனிதம் பெறும். ஆன்மிகத்தில் ஒவ்வொரு தலத்தின் முக்கியத்துவத்தை மூன்று விஷயங்களால் அடையாளப்படுத்துவார்கள். ஒன்று அந்தத் தலம். இன்னொன்று அங்கே இருக்கக்கூடிய மூர்த்தி. மூன்றாவதாக அங்குள்ள தீர்த்தத்தின் பெருமை. மூன்றில் தீர்த்தமும் தீர்த்தத்தின் பெருமையும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. அந்த முக்கியத்துவம்தான் மாசிமகத்தில் பூரணமாக வெளிப்படுகிறது.22. நீர் நிலைகளின் தூய்மையை பிரதிபலிப்பது மாசி மகம்ஒவ்வொரு திருத்தலத்தின் மகிமையை விளக்குவது போலவே, ஒவ்வொரு புண்ணிய நதியின் பெருமையையும் விளக்கி பல புராணங்களும் காவியங்களும் நம்முடைய நாட்டில் இயற்றப்பட்டுள்ளன. (உதாரணம்: காவேரி மகாத்மியம்) ஒரு தலத்தைப் பாடுகின்ற பொழுது அங்குள்ள தீர்த்தத்தின் பெருமையை பாடாமல் இருந்ததில்லை. நதிகள் என்பது அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கையுடன் பிண்ணிப் பிணைந்தவை.காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்கண்டதோர் வையை பொருனை நதி – எனமேவிய யாறு பலவோடத் – திருமேனி செழித்த தமிழ்நாடுஎன்று பாரதி பாடியது போல், நதிகளின் ஓட்டத்துடன்தான் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறை செழுமையுடன் அமைந்திருந்தது. ஆற்றையொட்டி கோவில்கள் எழுந்தன. கலைகள் வளர்ந்தன. நாகரீகம் செழித்தன. எனவே மாசி மகம், ஆறாகிய நீர் நிலைகளின் தூய்மை, புனிதம், நன்மை என அனைத்தின் பிரதிபலிப்பான விழாவாக கருதப்படுகிறது.23. புராணங்களில் மாசி மகம்மாசி மகத்தின் பெருமையை விளக்குவதற்கென்றுள்ள புராண நூல் `மாக புராணம்’ ஆகும். மாசி மாதத்தில் நீராடுவதை `மாகஸ்நானம்’ என்று கொண்டாடுவது வழக்கம். இந்த நீராட்டு விழா பற்றிய கதைகளைக் கூறுவது மாக புராணம். புராணங்களில் மிகப் பெரிய புராணம் பாத்ம புராணம். அதில், ஒரு பகுதியாக மாக புராணம் அமைந்திருக்கிறது. இதில், மாசி மகத்தின் சிறப்பையும், மாசி நீராடலின் பெருமையையும், தீர்த்தவாரி பெருமையும், அது ஏன் செய்ய வேண்டும் என்கின்ற சிறப்புகளும், மிக விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மாக புராணம் தமிழில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீர ராம பாண்டியன் என்பவரால் பாடப்பட்டது. இதில் 12 கடவுள் வாழ்த்துப்பாடல்களும், 1412 புராணச் செய்திப் பாடல்களும் உள்ளன. மாசி மாதம் ஒவ்வொரு நாளும், வைகறையில் எழுந்து காவிரி போன்ற புதுப்புனலில் நீராடும்போது இந்த நூல் ஓதப்பட்டதாகத் தெரிகிறது.24. மன்மதனும், மாசி மகமும்மாசி மகத்தில் தான், எத்தனை செய்திகள்! கதைகள்!. ஒவ்வொரு தலத்திற்கும் ஒவ்வொரு செய்தி. ஒவ்வொருகதை. அது புராண நிகழ்ச்சியோடு இணைக்கப்பட்டு விழாவாகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை மணல் மேடு சாலையில் கொற்கை என்ற ஊர் அமைந்துள்ளது. அங்குள்ள சிவபெருமானுக்கு `காமதகன மூர்த்தி’ என்று பெயர். அவர் தம்முடைய தவத்தை கலைத்த மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் என்பது புராணம். அதனால் மனம் வருந்திய ரதிதேவி, தன்னுடைய கணவரை தனக்கு மீண்டும் தர வேண்டும் என்று சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் ரதிதேவிக்கு மன்மதனை திரும்பத்தந்த நாள் மாசி மகம் என்று இங்குள்ள ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றது.25. கருட புராணம் கூறும் செய்திபொதுவாகவே எல்லா நாள்களிலும் கடலில் நீராடக் கூடாது. கடலில் நீராடுவது என்பது ஒரு சுற்றுலா போல் அல்ல. நம்முடைய சாஸ்திர நூல்கள் குறிப்பாக, கருட புராணம், எல்லா நாட்களிலும் கடலில் நீராடுவதை அனுமதிக்கவில்லை. ஆறு குளங்களில் நீராடுவது வேறு. கடலில் நீராடுவது வேறு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, பாதுகாப்பும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், கடல் நீராட்டம் சில நாள்களில் அவசியம் செய்ய வேண்டும். அதில் ஒரு நாள் மாசி மகம். மாசிமாதத்தில் தான் மாசி மகம் பெருவிழா சுவாமி தீர்த்தவாரி. அன்று, கடலில் நீராடுவதால், இருபத்தோரு தலைமுறை பாவங்களும் விலகும். நவகிரக தோஷங்களும் விலகும் என்று சொல்லப்படுகின்றது. அன்று ஒரு நாள் கடலில் நீராடுவதன் மூலமாக வருடம் முழுவதும் காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களில் நீராடிய புண்ணியம் கிடைத்து விடும். காரணம் நம்மைப் படைத்த இறைவன் நீராடிய நீரில் நாம் நீராடுகிறோம் அல்லவா. அந்தப் பெருமை வேறு எந்த நாளுக்கும் கிடைக்காது.26. மாமல்லபுரத்தில் புண்டரீக புஷ்கரணி தெப்ப உற்சவம்மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63-வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம். மாமல்லபுரத்தில், பல்லவ மன்னர்களின் 7-வது அரசனான மல்லேஸ்வரன், தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். ஒரு நாள் திடீரென மல்லேஸ்வரன் அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டான். இதனால் சாபம் பெற்று அங்குள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் முதலை உருவில் வாழ்ந்து வந்தான். அப்போது, 1,000 தாமரை இதழ்களை பறித்து பெருமாளுக்கு படைக்க புண்டரீக மகரிஷி அங்கு சென்றார். இந்த நிலையில் குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மல்லேஸ்வரன், புண்டரீக முனிவரிடம், தன் தவறுக்கு வருந்தி,1000 தாமரை இதழ்களை பறித்துக்கொடுத்து ’ சாப விமோசனம் கேட்டான். அந்த மலரை தலசயன பெருமாளின் பாதங்களில் முனிவர் சாத்தினார். தல சயன பெருமாளின் அருளால் மல்லேஸ்வரன் சாபம் நீங்கப்பெற்று மீண்டும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியைத் தொடங்கினான். இவ்வாறு புகழ் பெற்ற, புண்டரீக புஷ்கரணி தெப்பக் குளத்தில், மாசிமகத்தன்று தலசயன பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.27. ஜகத்தை ஆளும் மகம் எப்படி?பொதுவாக இந்த உலகத்தை சக்திதான் ஆள்கிறது என்று சிவ புராணங்கள் சொல்லுகின்றன. அதாவது, சிவனின் சக்திதான் உமாதேவியார். அதைப் போலவே வைணவ நூல்களும் மகாலட்சுமியின் திருவருள் தான் இந்த உலகத்தை ஆள்கின்றது என்று சொல்கின்றன. மகாலட்சுமியின் கண் அசைவில்தான் இறைவன் இவ்வுலகத்தை பரிபாலனம் செய்கின்றான் என்று வைணவ உரையாசிரியர்கள் கூறுகின்றார்கள். எனவே பெண்களின் சக்தி தான் இந்த உலகத்தை ஆள்கின்றது. இதில் உமாதேவியார் தட்ச பிரஜாபதியின் மகளாக பிறந்து, சிவபெருமானை மணம் முடித்தார். இந்த உலகத்தை ஆளும் சக்தியைப் பெற்றார். அவர் அவதார நட்சத்திரம் மாசி மாதம் மகம் நட்சத்திரம். அதனால் தான் “மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்” என்கின்ற பழமொழி வந்திருக்கலாம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. காரணம், லோகமாதாவே பிறந்த நட்சத்திரம் அல்லவா மாசி மகம்.28. ஞானம் தரும் கேதுவும் மாசி மகமும்ஜோதிட சாஸ்திரத்தில் மகம் நட்சத்திரத்திற்கு உரிய கிரகம் கேது பகவான். கேது பகவான் ஞானத்தை தரவல்லவர். ஞானமூர்த்தி என்று சொல்லுவார்கள். அவர் லக்கினத்துக்கு பன்னிரண்டாம் ராசியில் இருந்தால் மோட்ச பாக்கியத்தைத் தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. நடைமுறையில் அந்தப்பலன்கள் வெவ்வேறு காரணங்களால் மாறுபட்டு இருந்தாலும் கூட, முக்தி நிலை ஆகிய பன்னிரண்டாம் ராசியில், அதாவது மோட்ச ராசியில், மோட்ச காரகனாக கேதுபகவான் தரும் வாய்ப்பு என்ற அடிப்படையில், எடுத்துக்கொள்ளலாம். எனவே, கேதுவுக்குரிய இந்த மகம் நட்சத்திர நாளில் விரதம் இருந்து குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்குவதன் மூலமாக ஒருவன் பேரின்பத்தையும், பேராற்றலையும் பெற முடியும். மாசிமகம் தினத்தன்று உபவாசம் இருக்க வேண்டும். புனித நீர்நிலைகளில் நீராட வேண்டும். இறைவனை வணங்க வேண்டும். இறைவனுக்கு நடக்கின்ற அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். இறைவனுடைய அருள் பிரசாதத்தைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது. அன்றைய தினம் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். எளிய நிலையில் உள்ளவர்களுக்கு பொருள் தானம் செய்ய வேண்டும். போன்ற விதிமுறைகள் மாசி மக விரதத்தை குறித்த நூல்களின் சொல்லப்பட்டிருக்கின்றன.29. அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் பெறலாம்எல்லா மாசுகளும் தண்ணீரில் நீராடுவதால் போய்விடும். அப்படிப்பட்ட தண்ணீருக்கு மாசு வந்தால் அது எங்கே போகும்? வேறு ஒரு தண்ணீரால் போகும். அந்த தண்ணீர் தான் இறைவன். இறைவனுக்கு, தீர்த்தன் என்று ஒரு திருநாமம் உண்டு. எல்லாக் குற்றங்களையும் போக்குகின்ற தண்ணீரின் குற்றத்தைத் தீர்ப்பதால் தீர்த்தன் என்று போற்றப்படுகின்றார். ஒருவன் நற்கதி பெற வேண்டும் என்று சொன்னால், அவன் தூய்மையானவனாக இருக்க வேண்டும். தூய்மை இரண்டு வகைப்படும். ஒன்று உடல் தூய்மை. இன்னொன்று மனத்தூய்மை. உடல் தூய்மை, நீராடுவதால் பெறலாம். மனத்தூய்மை என்பது இறைவனை பக்தியோடு வழிபடுவதன் மூலமாக பெறலாம். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் பெறுவதற்காகவே மாசிமகம் உற்சவம் வருகிறது. அன்று பக்தியோடு புனித நீர்நிலைகளில் நீராடி, இறைவனை வணங்கி அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் பெறலாம்.30. கர்மவினைகளை தீர்த்துவிடுகின்றனமாசி மகம் அன்று நீராடி பிதுர் கடன்கள் செய்வது வழக்கம். மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள் என்பதால் அன்று முன்னோர் வழிபாடு செய்து, அவர்களுடைய ஆசியைப் பெறவேண்டும். புனித தீர்த்தங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் முதலியவை செய்வது பலமடங்கு புண்ணியங்களைத் தரும். பொதுவாக எந்த செயலைச்செய்தாலும் மூன்று முறை செய்யவேண்டும் அப்படிச் செய்தால் அந்த செயல் முழுமை அடைந்ததாகப் பொருள். நாம் குளத்திலோ, ஆற்றிலோ புனித நீராடும் பொழுது மூன்று தரம் மூழ்கி எழ வேண்டும். முதன் முழுக்கில் பாவம் தீரும். இரண்டாம் முழுக்கில் நல் வாழ்வு கிடைக்கும். மூன்றாம் முழுக்கில் நம்முடைய புண்ணியங்கள் பல மடங்காகப் பெருகும். நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி…

The post மகத்தான புண்ணியங்களை அள்ளித்தரும் மாசி மகம் appeared first on Dinakaran.

Tags : Masi Maakam ,Masi Makam ,Maam ,Masi Maam ,Vainava ,Ampha ,
× RELATED மகம்