×

மேன்மைகளை அள்ளித்தரும் மாசி மகம்

மாசி மகம் 17-2-2022மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா “மாசி மகம்” தான். சைவ, வைணவ, அம்பாள், முருகன் என எல்லா தெய்வங்களுக்கும் மாசிமகம் திருவிழா தான். மாசி மகத்தின் சிறப்புக்களை முப்பது முத்துகளாகத் தொகுத்துக் கொடுக்கின்றோம் வாசகர்களான உங்களுக்காக….குரு சந்திர யோக நாள்நட்சத்திரங்கள் இருபத்தி ஏழு. ராசிகள் 12. இந்த 27 நட்சத்திரத்தில் 10வது நட்சத்திரம், (கர்ம நட்சத்திரம்) மகம். பதினோராவது ராசி கும்ப ராசி. மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, கும்ப ராசியில் இருந்து சூரியன் சந்திரனை பார்க்கும் காலமே புனிதமான “மாசி மகம்” உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு என்னவென்று சொன்னால், இந்த கும்ப ராசியில் குருபகவானும் இருக்கிறார். குரு, சந்திரனை பார்ப்பதால் மிகப் பெரிய குரு சந்திர யோகம் ஏற்படுகின்றது. கால புருஷனுக்கு 5ஆவது ராசியான சிம்ம ராசி பூர்வபுண்ணிய ராசியாகும். சூரியன் ஆன்மா. சந்திரன் மனம். உடல் என்றும் சொல்வார்கள். இந்த மாசிமகத்தில் நீராடுவதால், நீருக்குக் காரணமான சந்திரன் மூலமாக, உடல் தூய்மையும், சூரியன் மூலமாக ஆன்ம தூய்மையும் கிடைக்கிறது. சந்திரன், சிம்ம ராசியில் கேதுபகவானின் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது இந்த மாசி மகம் வருவதால், இந்த நீராட்டம் செய்கின்ற பொழுது நம்முடைய கர்ம வினைகள் தீர்ந்து விடுகின்றன.நல்வாழ்வைத் தரும் மாசி மகம்மாசிமக காலத்தில் புனித நீராடுவதும், புண்ணிய யாத்திரை செய்வதும், புனித கோயில்களைத் தரிசிப்பதும், பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும். தோஷங்களை நீக்கி, நீடித்த நல் வாழ்வைத் தரும். சைவ ஆலயங்களாக இருந்தாலும், வைணவ ஆலயங்களாக இருந்தாலும், எந்த பெரிய விழாவிலும் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும். வைணவ விழாவில் இதனை “அவபிரதம்” என்று சொல்லுவார்கள். திருமலையில் கூட பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கர தீர்த்தம் நடைபெறும். சைவத்தில், இதனை தீர்த்தவாரி என்பர். பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழாவின் நிறைவு நாளில் மட்டுமல்லாது வேறு சில நாட்களிலும் தீர்த்தவாரி நடைபெறும். கிரகண காலங்களிலும், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி முதலிய நாட்களிலும் தீர்த்தவாரி விழா நடைபெறும். மாசி மாதத்திற்கு “மாகம்’’ என்று பெயர். மாசி பௌர்ணமி தினத்தன்று மகம் நட்சத்திரம் இணைவதால், மாகம் என்பது மகமாக மாறியது என்பார்கள். “அகம்” என்றால் பாவங்கள் அல்லது மாசுகள். “மா” என்றால் இல்லை என்று பொருள். “பாவங்களை இல்லை” என்று ஆக்கும் நாள் மாசி மகம்.மாசி மகமும், மகா மகமும்பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல் என்பது மிக மிகத் தூய்மையானதாகவும், புண்ணியம் ஆனதாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது, குருபகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இவர் சிம்மராசிக்கு வருகின்ற பொழுது, குருவும் சந்திரனும் ஒன்றாகச் சேர்வார்கள். இப்போது பார்வைத் தொடர்பு. அப்போது சேர்க்கைத் தொடர்பு. அப்போது அவர்கள் இருவரையும் சூரியன் கும்பராசியில் இருந்து பார்ப்பார். இந்த பௌர்ணமி தினமானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதை “மகாமகப் பெருநாள்” என்று கொண்டாடுகிறோம். மகாமகத்தை பேச்சு வழக்கில் “மாமாங்கம்’’ என்று கூறுகின்றனர். மாசிமகம் கும்பகோணத்தில் ஏன் விசேஷம்?கும்பகோணத்திற்கு மட்டும் அப்படி என்ன ஒரு விசேஷம் என்று கேட்கலாம். ராசிகளில் மாசிமாதத்திற்கு உரிய ராசி கும்பராசி. அதிலே, கும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குரு, சிம்ம ராசிக்கு வந்து சந்திரனுடன் சேரும் காலம்தான் மகாமகம். சிம்ம ராசி என்பது கால புருஷனுக்கு 5 ஆவது ராசி(புண்ணிய ராசி). ஐந்தாவது ராசியை திரிகோண ராசி அல்லது கோண ராசி என்று சொல்லுவார்கள். கும்பமும் (கும்பராசியும்) கோணமும் (திரிகோண ராசியான சிம்மம்) சந்திக்கக்கூடிய புனிதமான நாள் என்பதால் கும்பம் +கோணம் இணைந்து கும்பகோணம் ஆகியது. கும்பகோணம் மிகச் சிறந்த புனிதத் தலமாக ஆதிகாலத்திலிருந்து கருதப்படுகிறது. அங்கே மகாமக குளம் இதற்கென்றே உருவாக்கப்பட்டது. மகாமக தீர்த்தம் “அமிர்த தீர்த்தம்” என்று சொல்லப்படுகின்றது. மகாமக தீர்த்தத்தில் நீராடி வணங்கினால் மறுபிறப்பற்ற அமரத்துவம் அடையலாம் என்று புராண நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. சோடஷ லிங்கங்கள்16 சிவாலயங்கள் மகாமகக் குளக்கரை சுற்றிலும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சோடஷலிங்க ஆலயங்கள் என்று அழைக்கின்றார்கள். இதில், ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், புரணேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபாகேஸ்வரர், நிருதீஸ் வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ லிங்கங்கள் என அழைக்கப்படும். பிற நகரங்களில் செய்த பாவங்கள் காசியில் தீரும். காசியில் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் தீரும். கும்பகோணத்தில் செய்த பாவங்கள் கும்பகோணத்திலே தீரும். காரணம், கும்பகோணம் மாசிமக சிறப்பால் அத்தனை புனிதம் அடைந்த தலமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியநதிகளும் கும்பகோணத்தில் வந்து, மாசிமக நாளில் புனித மடைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. எப்படி நீராடுவது?நீராடும் நீரை கங்கையாகக் கருதி குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை ‘சப்த தீர்த்தம்’ என்று சொல்வர். கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, `கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ என்னும் ஸ்லோகத்தை சொல்லிவிட்டு குளித்தால் சாதாரண குளியல் கூட புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தை தரும். பலகோடி தீர்த்தங்கள் சேரும் இடம்புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும், பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்கள் தீர சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான், ‘‘கும்பகோணத்தில் அக்னித்திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில், குரு சிம்மராசியில் இருக்கும்போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்” என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி, தங்கள் பாவங்களைப் போக்கிக்கொண்டன. நிஜத்தில் மாசி மகம் அன்று அறுபத்தி ஆறு கோடி தீர்த்தங்களும் மகா மக குளத்தில் வந்து கலப்பதாக ஐதீகம். இந்த மகாமக குளத்தினை நவ கன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால், இந்த தீர்த்தம் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன. அதே தீர்த்தத்தில் நாமும் நீராட நம் பாவங்கள் போகும் அல்லவா? தானம் தர வேண்டும்மகாமகக் குளத்தில் நீராடி, கரையில் உள்ள மண்டபங்களில் தானம் தரவேண்டும் என்று ஆதி நூல்கள் வரையறுத்துச் சொல்லியிருக் கின்றன. மாசி மகத்தில், புனித நீராடி, தானம் தருவது என்பது முக்கியமானது. பொதுவாகவே எந்த புனிதநதியில் நீராடி னாலும் தானம் தர வேண்டும். புனித நீராடலில் இது ஒரு அங்கமாகும். காலப்போக்கில் வழக்கொழிந்துவிட்டது என்றாலும் கூட, இன்றைக்கும் புனித நீராடிவிட்டு வருகின்ற பொழுது, ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பொருளைத் தருவது என்பது இன்னும் சிலரிடமும் இருக்கிறது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் புனிதநதிகளில் நீராடுவது இயலாத காரியம் என்று சிலர் நினைக்கலாம். ‘‘உள்ளமே பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலர் சொன்னபடி, தினசரி நம்முடைய நீராட்டத்தை புனித நீராட்டமாக மாற்றிக்கொள்ளலாம். நீரை சப்த நதிகளாக பாவித்து வணங்கி, அந்த நதிகளின் சங்கமமாக கற்பனை செய்துகொண்டு நீராடி வழிபட வேண்டும். தீர்த்தவாரியில் 12 சிவன் கோயில்கள்மாசி மகம் அன்று ஒரே நேரத்தில் 12 சிவாலயங்கலிருந்து ஸ்வாமிகள் புறப்பாடாகி, ஒரே இடத்தில் தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமே யாகும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒரு தனி வரலாறு உண்டு.1. நவகன்னியர் அருள் பாலிக்கும்     இடம் – காசி விஸ்வநாதர் கோயில்2. அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய     இடம் – கும்பேஸ்வரர் கோயில்3. வில்வம் விழுந்த     இடம் – நாகேஸ்வரர் கோயில்4. உறி (சிக்கேசம்) விழுந்த     இடம் – சோமேஸ்வரர் கோயில்5. பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த     இடம் – கௌதமேஸ்வரர் கோயில்6.தேங்காய் (நாரிக் கேளம்) விழுந்த     இடம் – அபிமுகேஸ்வரர் கோயில்7.சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த     இடம் – பாணபுரீஸ்வரர் கோயில்8.புஷ்பங்கள் விழுந்த     இடம் – கம்பட்ட விஸ்வநாதர் கோயில்9.மற்ற உதிரி பாகங்கள் விழுந்த     இடம் – ஏகாம்பரேஸ்வரர் கோயில்10.அமிர்தத் துளிகள் விழுந்த     இடம் – கோடீஸ்வரர் கோயில்(இக்கோயிலின் கிணறு)11. சந்தனம் விழுந்த     இடம் – காளஹஸ்தீஸ்வரர் கோயில்12. அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த     இடம் – அமிர்தகலசநாதர் கோயில்பூமியை வராகப்பெருமான் நிலை நிறுத்திய நாள்மாசி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. இதைப்பற்றி வெவ்வேறு புராணங்கள் கூறுகின்றன. வராகப் பெருமாள் பூமிப் பிராட்டியை மீட்பதற்காக கடலுக்குள் நுழைந்து, ஆற்றலுடன் போரிட்டு, இரண்யாட்சனைக்கொன்று, தன்னுடைய தந்தத்தால் பூமிப் பிராட்டியை தாங்கி பூமியை உத்தாரணம் செய்தார். இதை நம்மாழ்வார் “கோலவராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்” என்று ஒரு அழகான பாசுரத்தில் பாடுகின்றார். ஆண்டாளும், “பாசி தூர்த்தக் கிடந்த பார்மகட்குப் பண்டு ஒரு நாள், மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம், தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்” என்று பாடுகின்றார். இப்படி வராகப் பெருமாள் பூமியை உத்தாரணம் செய்த நாள், மாசிமக நாள் என்று கூறுகின்றார்கள். வருணனின் தோஷம் நீங்கியதுநீரின்றி அமையாது உலகு. வருண பகவான் நீர் தேவதை. நாம் எந்த பூஜை, ஹோமம் போன்ற காரியங்கள் செய்தாலும், முதலில் வருண பகவானைத்தான் ஆவாகனம் செய்வோம். வருண பகவானுக்கு உரிய திசை மேற்கு திசை. ஆண்டாள் வருண பகவானை “ஆழிமழைக் கண்ணா” என்று அழைத்து, “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய வேண்டும்” என்று கட்டளையிடுவதாக திருப்பாவையில் வருகின்றது. இந்த வருண பகவானுக்கு ஒருநாள் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனை நீக்கிக் கொள்வதற்காக இறைவனிடம் சரண் அடைந்தார். இறைவன் அவருடைய பிரம்மஹத்தி தோஷத்தை, மாசிமக நீராட்டத்தின் போது நீக்குவதாக உறுதி அளித்தார். அப்படி வருணனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய நாள் மாசிமக நாள். அன்று நீராடி இறைவனை தரிசனம் செய்ய நம் தோஷங்கள் நீங்கும். தந்தைக்கு உபதேசம் செய்த நன்னாள்முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று சுவாமிமலை. பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசம் செய்ததால் முருகப்பெருமானுக்கு சுவாமிநாதன் என்று பெயர். ஓம்காரமாகிய பிரணவ மந்திரத்திற்கு உயர் பொருளை முருகப்பெருமான் பரமசிவனுக்கு உரைத்த நாள் மாசி மகம் நன்னாள். சிம்மராசியாகிய ஐந்தாவது ராசி புத்திர ராசி. (முருகன்) அது தந்தையாகிய சிவனுக்குரிய ராசி. அங்கு ஞானகாரகனாகிய கேதுவின் மகம் நட்சத்திரத்தில் உயர் ஞான பொருள் உரைத்தது பொருத்தம்தானே. மாசி மகமும் திருச்செந்தூரும்அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். சூரபத்மனை ஜெயம் கொண்ட அவருக்கு ஜெயந்தி நாதர் என்று பெயர். அறுபடை வீட்டில் இரண்டாம் தலமான திருச்செந்தூரை ஜெயந்திபுரம் என்றும் அழைப்பார்கள். இங்கே மாசிமக கடல் புனித நீராடல் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் அன்று திருச்செந்தூர் கடலில் நீராடி ஜெயந்திநாதரை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் வெற்றி கள் பல கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாசி மகத்தில் பற்பல உற்சவங்கள்மாசி மகம் ஒட்டி பல்வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்களில் விழா மற்றும் பிரமோற்சவங்கள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, கோவை அருகே காரமடை அரங்கநாதர் கோயில் தேர் உற்சவம், குடந்தை சக்கரபாணி கோயில் தேர் உற்சவம், மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் மற்றும் அழகர்கோயில் கள்ளழகர் முதலிய கோயில்களில் தெப்ப உற்சவம், மதுரையில் திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலைக்கு எழுந்தருளி கஜேந்திர மோட்சம் போன்ற சிறப்புகள் தமிழகமெங்கும் உள்ள கோயிலில் நடைபெறுகின்றன.கோயம்புத்தூருக்கு அருகில் உள்ளது காரமடை. இங்குள்ள காரமடை ரங்கநாதர் ஆலயம் புகழ் பெற்றது. பெருமாள் ரங்கநாதர் என்ற பெயரில் இருந்தாலும், பள்ளிகொண்ட கோலத்தில் இல்லாமல் சிறிய கம்பத்தில் இருக்கின்றார். முகம் மட்டுமே இருக்கிறது. இவர் சுயம்புவாக ஆனவர். இங்கே மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அதன் கடைசி நாளாகிய தேர்த்திருவிழா மாசி மகத்தன்று மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. மிகப் பழமையான விழாமாசிமகம், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது என்பதால், மிகப் பழமையான விழா என்று தெரிகிறது. மாசி மாதம், முழு நிலா, மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் சிறப்பான நாள். கடலாடும் விழா என்று பெயர். பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது, இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும், நன்னாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். மாசிமகம் அன்று உபவாசமிருந்து, கடலில் நீராடி, தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது என்பது பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற மரபு.எஸ். கோகுலாச்சாரி…

The post மேன்மைகளை அள்ளித்தரும் மாசி மகம் appeared first on Dinakaran.

Tags : Masi ,Makam ,Masi Magam ,Saiva ,Vaishnava ,Ambal ,
× RELATED வித்தியாசமான வழிபாடுகள்