×

குழந்தை வரமருளும் குலசேகரநாதர்

காருகுறிச்சி தலத்தின் ஈசான மூலையிலும், தாமிரபரணி ஆற்றின் தென்கரையிலும், பச்சைப்பட்டு விரித்தாற்போல் பூத்துக் குலுங்கும் நெல்வயல்களின் மத்தியிலும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீகுலசேகரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. நாலாபுறமும் உயர்ந்த திருமதில் சூழ கிழக்குப் பார்த்த வண்ணம் கோயில் உள்ளது. கிழக்குப் பக்கமாக பிரதான வாசல் இருந்தபோதிலும், மேலப்பெருங்கரை ஸ்ரீ வைகுண்டம், மழவராயநத்தம், வேடநத்தம், பாலாமடை, கருவேலங்குளம் ஆகிய தலங்களின் சிவாலயங்களைப் போல் இங்கும் வயல்வெளிகள் இருப்பதால் பிரதான வாசலாக பக்தப் பெருமக்கள் தெற்கு வாசலையே தொன்று தொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். தெற்குப் பக்கவாசல் சாலக்கோபுர அமைப்புடன் விளங்குகிறது. உள்சுற்று முழுவதும் வாசமலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்காவனமாக செழித்துக் காணப்படுகிறது. வசந்த மண்டபம், முகமண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் பிற்காலப் பாண்டியர் கால கலை அம்சத்தில் கற்றளியாக கோயில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மகாமண்டப வடபுறம் ஆனந்தக் கூத்தனான நடராஜர், சிவகாமி அம்மன் சந்நதி உள்ளது. அர்த்த மண்டப வாசலில் விநாயகர், சுப்பிரமணியர் விக்ரகங்கள் உள்ளன. கருவறை மூலவராக, லிங்கேஸ்வர மூர்த்தியாக அருள்மிகு குலசேகரநாதர் சாந்நித்தியமிக்க தெய்வமாக எழுந்தருளியுள்ளார். இந்த பரமனுக்கு வம்ச விருத்தீஸ்வரர் என்ற சிறப்புப் பெயரை சுற்றுவட்டார மக்கள் எல்லோரும் சூட்டி அன்போடு அழைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு செவிவழிச் செய்தியாக ஒரு வரலாற்றுச் சம்பவம் பக்தியில் உணர்வுப் பூர்வமாய் நம்பப்பட்டு வருகிறது.அதாவது, முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ஒரு சிற்றரசனுக்கும், அவனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியே பிரிந்து வாழ்ந்திருந்தனர். அந்த வேளையில் மன நிம்மதி இழந்து நிதி நிர்வாகத்தில் நாட்டமின்றி ஒவ்வொரு ஊராக அலைந்து, மனஅமைதி வேண்டி ஓடிக் கொண்டிருந்தான் அம்மன்னன். அந்த வேளையில்தான், இத்திருக்கோயில் பரமனை கண் குளிர தரிசித்து அகம் குளிர்ந்தான். சாந்நித்தியமிக்க தெய்வம் இங்கு எழுந்தருளியிருப்பதை மனப்பூர்வமாக அனுபவித்து உணர்ந்தான். அதே வேளையில், அவனை விட்டு பிரிந்து வாழ்ந்த மனைவியும் ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து மனம் மாறினாள். மறுபடியும் கணவனுடன் மகிழ்வோடு கூடினாள். இனிய இல்லறம் நடத்திய தன் பலனாக அடுத்த ஆண்டில் அம்மன்னனுக்கு வாரிசு ஒன்று பிறந்து, அவன் குலம் தழைப்பதற்கு வழி ஏற்பட்டது. அதனால், நன்றிப் பெருக்கோடு குலசேகர நாதருக்கு அம்மன்னன் பல திருப்பணிகள் செய்து முடித்தான். மன்னன் வழியைப் பின்பற்றி நாட்டு மக்களும் இந்தப் பரம் பொருளையே முழுமுதல் கடவுளாக, சந்தான பாக்கியம் தந்தருளும் நாயகனாக தரிசித்து மகிழ்ந்தனர். இந்த வரலாற்று சம்பவத்தோடு தொடர்பு உள்ள மாதிாி, தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற்காகவும், மனமொத்த தம்பதியராய் வாழவும், ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்தில், துவாதசி, திரயோதசி திதிகளில் பக்தர்கள் சூழ துளசி விவாக உற்சவம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. துளசி விவாகம்: தசாவதார மூர்த்தியான ஸ்ரீகிருஷ்ணரை நெல்லி மரத்திலும், அம்பாளை துளசிச் செடியிலும் முதலில் ஆவாஹணம் செய்து வைப்பர். அலங்காரப் பிரியரான ஸ்ரீ கிருஷ்ணரை கண்குளிர, அகங்குளிர சர்வ அலங்காரத்திலும், வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் வசந்த மண்டபத்தில் இவ்விழா நடைபெறும். இந்த மகத்துவமிக்க துளசி விவாகம் குறித்து புராண ஐதீகமாக வேத விற்பன்னர் நாராயண சர்மா கூறுவதாவது; ஒரு சமயம் துவாரகாபுரியில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் சத்யபாமா வெகு சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் அருகே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தாள். அவ்வேளையில் நாரதர் அங்கே வீணையுடன் உள்ளே சாதாரணமாக பிரவேசித்தார். அவரைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி சத்யபாமாவுக்கு. தாமதிக்காமல் அவரிடம் தனது மனதில் பலகாலமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் தீர்வுக்காக அவரை நோக்கினாள். அவளது உள்ளக் குறிப்பை உணர்ந்த நாரதரும், அவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாா். அந்நேரம் தன் உள்ளக்கிடக்கையை அவரிடம் மெதுவாக விவரிக்க ஆரம்பித்தாள் சத்யபாமா. “அதாவது சதாசர்வ காலமும் ஸ்ரீகிருஷ்ணரை விட்டு அகலாத வரம் தனக்கு கிட்ட, தான் செய்ய வேண்டிய காரியம் யாது” என வினவி அவரது முகம் பார்த்து நின்றாள். அதற்கு உடனே தெளிவான பதில் தரும் விதமாக நாரதரும், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை எவருக்கேனும் தத்துக் கொடுக்கச் சொன்னார். இதைக் கேட்ட சத்யபாமா சற்றும் தாமதிக்காமல் நாரதருக்கே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை தத்துக் கொடுத்தார். சிறிது நேரம் பேச்சில் கழிந்தது. பின்னர், சத்யபாமா நாரதரைப் பார்த்து, தனது கணவரை மறுபடியும் திருப்பித் தருமாறு பணிவோடு கேட்டாள். அந்த கோரிக்கையை ஏற்க நாரதர் மறுத்தார்.இதனால், அதிர்ச்சியுற்று திகைத்து நின்றாள் சத்யபாமா. பின் அவளது கவலையை நீக்க நாரதரே தாமதிக்காமல் வழியும் சொன்னார். அதன்படி சத்யபாமாவின் எடைக்கு நிகராக துளசிச் செடியை துலாபார காணிக்கையாக தரச் சொன்னார். அதன்படி, துளசிச் செடியை துலாபார காணிக்கை தந்து ஸ்ரீகிருஷ்ணரை திரும்ப நாரதரிடமிருந்து பெற்றுக் கொண்டாள், சத்யபாமா. இந்த தத்துக் கொடுக்கும் சம்பவத்திற்கு முன் ஜென்ம சம்பவம் ஒன்றை இப்போது அவருக்கு நாரதர் விவரித்தார். அதாவது, முன் பிறவியில் தேவசர்மா என்ற ராஜாவின் மகளாக சத்யபாமா பிறந்திருந்தாள். அவ்வேளையில் அவளது பெயர் குணவதி என ராஜா பெயர் சூட்டி மகிழ்ந்திருந்தார். அந்த வேளையில், அந்தப்புற நந்தவனத்தில் துளசிச் செடியை பிருந்தாவனம் போல் செழிப்பாக வளர்த்து, திருமாலை மணக்க வேண்டி அவள் தியானத்தில் ஈடுபட்டாள். நாளடைவில் அவளது பக்திக்கு இரங்கிய திருமால் காட்சியளித்து மறு ஜென்மத்தில் சத்யபாமாவாக பிறவியெடுத்து தன்னை மணாளனாக அடையவரம் அளித்தார். இத்தகைய மகத்துவமிக்க துளசியின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டவே இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக இத்தலத்தில் நடத்தப்படுகிறது. காருகுறிச்சி எனும் இத்தலம் சேரன்மகாேதவி வழியாக திருநெல்ேவலி – பாபநாசம் செல்லும் சாலையில் 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.மீனாட்சி ரவிசேகர்…

The post குழந்தை வரமருளும் குலசேகரநாதர் appeared first on Dinakaran.

Tags : Kulasekaranath ,Karukurichi Talam ,Tamiraparani ,Sri Sivakami ,
× RELATED உளவுத்துறை ரிப்போர்ட், ரூ.4 கோடி...