×

உளவுத்துறை ரிப்போர்ட், ரூ.4 கோடி பறிமுதல் என அடுத்தடுத்து சறுக்கல்: தாமிரபரணி நகரத்தில் மூழ்கும் தாமரை; டெபாசிட்டுக்கு திண்டாடும் பாஜ

நெல்லை: உளவுத்துறை ரிப்போர்ட், பறக்கும் படை நடவடிக்கைகளால் நெல்லை மக்களவைத் தேர்தல் ரேசில் பாஜ பின்னடைவை சந்தித்துள்ளது. தாமிரபரணியில் தாமரை மலரும் என்ற அக்கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் கனவு நிறைவேறுதற்கான வாய்ப்புகள் குறைந்ததால் அக்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடக்கிறது. வேட்பாளர்கள் ஒருபுறம் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தாலும், இன்னொரு புறம் பணப்பட்டுவாடா செய்து, எப்படியாவது தேர்தலில் வென்றிட வேண்டும் என உள்ளடி வேலைகளிலும் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.

இதைத்தடுக்க வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அரசியல் கட்சியினரிடம் இருந்து மாறி மாறி பண பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி, ரூ.22 கோடியை பறிமுதல் செய்துள்ளது. பறக்கும் படை தமிழகம் முழுவதும் நடத்திய சோதனையில் ரூ.88 கோடி ரொக்க பணத்தை கைப்பற்றி உள்ளது. மொத்த பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் என இதுவரை ரூ.208 கோடி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையே மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஒன்றிய உளவுத்துறையின் ரிப்போர்ட் பாஜவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்ட அந்த சர்வே முடிவுகள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதில் தமிழகத்தில் பாஜ பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்பதும், பிரபலமாக அறியப்படும் பாஜ தலைவர்கள் போட்டியிடும் கோவை, கன்னியாகுமரி, நெல்லை, வடசென்னை, நாமக்கல் ஆகிய தொகுதிகளில் பாஜ மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதும் அந்த ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளதால் பாஜவினர் கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற மூன்று பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு அந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக நெல்லையில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது. இதுதொடர்பாக அந்த பணத்திற்கும், எனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சியினரின் வாக்குறுதிகளை அறிந்து ஓட்டுப்போடுபவர்களின் எண்ணிக்கையை விட பணத்திற்காக ஓட்டுப்போடுபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால்தான் கட்சிகள் தங்களை ஒரு பெரிய கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கி, பின்னர் பணப்பட்டுவாடா செய்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்று வருகின்றன. வட மாநிலங்களில் பாஜ மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் ஒரு கட்சி. ஆனால் தமிழக மக்களிடையே அந்த அரசியல் எடுபடாது என்பதால் ஊழலை ஒழிப்போம் என அக்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.

தற்போது அக்கட்சி தமிழகத்தில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதை அறிந்தவுடன் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததன் விளைவாக, அக்கட்சியினர் வருமான வரித்துறையின் பிடிக்குள் சிக்கி உள்ளனர். இதனால் தாமிரபரணியில் தாமரை மலரும் என்ற பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் கனவு பலிக்க வாய்ப்பு இல்லை என அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர். அதுபோல் ஓடும் தண்ணீரில் தாமரை மலராது என்பதால் அறிவியல் ரீதியாகவும் தாமரை தாமிரபரணியில் மலராது என்றும் சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* நயினார் நாகேந்திரன் மீது வழக்கு
பாஜ வேட்பாளர் நயினார்நாகேந்திரன் நேற்று முன்தினம் பணகுடி அருகேயுள்ள இருக்கன்துறை மற்றும் கண்ணன்குளம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேலாக நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் பழவூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜ நிர்வாகிகள் உட்பட 25 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளவுத்துறை ரிப்போர்ட், ரூ.4 கோடி பறிமுதல் என அடுத்தடுத்து சறுக்கல்: தாமிரபரணி நகரத்தில் மூழ்கும் தாமரை; டெபாசிட்டுக்கு திண்டாடும் பாஜ appeared first on Dinakaran.

Tags : Intelligence ,Tamiraparani ,Dindatum ,Baja ,Nellai ,BJP ,Nellai Lok Sabha election ,Nayanar Nagendran ,Thamirabarani ,Lok Sabha ,Elections ,Dindatum Baja ,Dinakaran ,
× RELATED மலேசியா வழியாக சென்னைக்கு...