×

திருமணத் தடை விலக்கும் பங்குனி உத்திரம்

முத்துக்கள் முப்பது-பங்குனி உத்திரத் திருநாள் உலகெங்கும் எல்லா ஆலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தப் பங்குனி உத்திரத் திருநாளின் சிறப்பை  பல்வேறு கோணங்களில் “முத்துக்கள் முப்பது” எனும் தொகுப்பாக நாம் காணலாம்.1. பல அதிசயங்கள் உள்ள பங்குனி உத்திரம்மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக சிறப்புக்கள் உண்டு. பன்னிரண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணியத் திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாள். பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. லேசான   குளிர்ச்சியும், இதமான வெப்பமும் நிலவும் மாதம். தமிழ் நூல்கள்,  இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண் டாடப்படும் வசந்த விழாவைப் “பங்குனி விழா” என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன. சிதம்பரத்திற்கு அருகேயுள்ளகொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்று தான் பூக்கும். இப்படி பல அதிசயங்கள் பங்குனி உத்திர நாளுக்கு உண்டு. 2. எல்லா ஆலயங்களிலும் உற்சவம்இந்த நன்னாளில் பற்பல உற்சவங்கள் நடக்கும் . எல்லா முருகன் ஆலயங் களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர், மோகூர் ஆலயங்களில் திருக்கல்யாண வைபவங்கள் சிறப்பாக  நடக்கும். முருகப்பெருமானுக்கு, பங்குனி உத்தரத்தில் பால் காவடி எடுப்பதும், அபிஷேகங்கள் நடப்பதும், மிக விசேஷம். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கிநின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.3. நட்சத்திர பண்டிகைநம்முடைய இந்துப் பண்டிகைகள்   இரண்டு விஷயங்களின் அடிப் படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒன்று திதியின் அடிப்படையில். அப்படி அமைந்த பண்டிகைகள் கோகுலாஷ்டமி, ஸ்ரீராம நவமி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, சித்ரா பௌர்ணமி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் திதியின் அடிப்படையில் அமைந்த பண்டி கைகள். அதைப்போலவே நட்சத்திரங்களை அடிப் படையாகக்கொண்டு சில பண்டிகைகள் உற்சவங்கள் உண்டு. வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம், பங்குனி உத்தரம். இதில் நட்ஷத்திர அடிப்படை உற்சவம் பங்குனி உத்திரம்.4. தெய்வத் திருமண உற்சவங்கள் தமிழ் மாதத்தின் கடைசி மாதத்தில் வருகின்ற மிகச்சிறப்பான ஒரு உற்சவம் தான் பங்குனி உத்திர உற்சவம். இதனுடைய சிறப்புகளில் இன்னுமொன்று. சைவ வைணவ பேதமின்றி எல்லோருக்கும் பொதுவான ஒரு சிறந்த உற்சவமாக இருக்கிறது. சிவாலயங் களிலும், முருகன் ஆலயங்களிலும், பெருமாள் ஆலயங்களிலும் இந்த நாள், உற்சவ நாளாகவோ, திருக்கல்யாண உற்சவ நாளாகவோ கொண்டாடப்படுகிறது.சுமார் 80 சதவீத ஆலயங்களிலே இந்த நாள் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.  5. மங்களங்கள் வாழ்வில் மலரும் பங்குனி உத்திரம்திருத்தலங்களில் நடக்கும் பங்குனி உத்திரத்  திருக்கல்யாண மஹோத்ச வங்களில், நாம் ஏதாவது ஒரு வகையில் கைங்கர்யம் செய்து பங்கு பெற வேண்டும்.கோயிலுக்கு சென்று கண்குளிர தரிசித்தாலும் போதும். மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி பிறக்கும்.மங்களங்கள் வாழ்வில் மலரும். பங்குனி உத்திரவிரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.6. காவடி எடுப்பதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரம் சூரியனும் சந்திரனும் சந்திக்கும் பௌர்ணமி நாளில்தான் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. திருக்கல்யாண உற்ஸவம் தவிர வேறு வகை விழாக்களும் இந்த நன்னாளில் உண்டு. உதாரணமாக  நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் பங்குனி உத்திர உற்சவமும் சிறப்பான உற்சவங்களாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் முருகப் பெருமானுக்கு உரிய சிறப்பான மாதம் அல்லவா. பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். கொங்குநாட்டு மக்கள் காவிரியின் கொடுமுடி தீர்த்தத்தை காவடியில் நிரப்பி, மகுடேஸ்வரரை வழிபட்டு, கால்நடையாக தீர்த்தக் காவடியுடன் பழனிவந்து தண்டாயுதபாணியை வழிபட்டுச் செல்வார்கள். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திர விழா நடைபெற்றாலும், மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி (பழனி)யில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.7. கல்யாண விரதம்பங்குனி  விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய் வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கு விரைவில்  கல்யாணம்  நடக்கும். பங்குனி உத்திரக் கல்யாணத்திருவிழா, பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப் பனைக் குறித்து விரதமிருப்பர். பகற் பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர். 8. திருவரங்க விசேஷம்வைணவ ஆகமத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் தேவதை உண்டு. பங்குனி மாதத்திற்கு உரிய தேவதை- கோவிந்தன். நிறம் -சந்திரன். ஆயுதம்- நான்குவில். திசை -தெற்கு. இந்த அடிப்படையில் ஆகம சாஸ்திரத்தில் பங்குனி உத்திரம், பெருமாள் கோயில்களில் மிக விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது.தெற்குத் திசைக்குரிய மாதம் என்பதால், தென்திசை நோக்கி பள்ளி கொண்ட பெருமாளுக்கு, “பங்குனி உத்திரம்” மிக முக்கிய பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது.9. பாற்கடலும் பங்குனி உத்திரமும்இந்திரன் துர்வாசரின் சாபத்தினால் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழந்தான். மகாலஷ்மி அவனை விட்டு அகன்றாள். பெரியோர்களையும் அவர்கள் ஆசீர்வாதத்தையும் மதிக்கவில்லை என்றால், மகாலஷ்மி அவர் களிடம் இருக்க மாட்டாள். இந்திரன் பட்டம், பதவி,செல்வம் அனைத்தையும் இழந்தான். பாவத்தை எண்ணி வருந்தி முயற்சி செய்தால் மறுபடியும் மகா லட்சுமி வந்து சேர்வாள் அல்லவா? அந்த முயற்சியின் அடிப்படையில் அமைந்த நிகழ்வுதான் பாற்கடலைக்  கடைவது. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற் கடலை கடைந்தனர். ஒரு செயலை உற்சாகமாக செய்கின்றபொழுது, அச்செயலுக்கு தெய்வத்தின் அனுமதியும் உதவியும் கிடைக்கும் என்பதை எடுத்துக் காட்டும் வண்ணம், மகாவிஷ்ணு பாற்கடலை கடைவதற்கு கூர்ம அவதாரம் எடுத்து உதவினார். பாற்கடலைக் கடைந்தபோது பல்வேறு பொருட்கள் தோன்றின. அவைகளில் பலவற்றை தேவர்கள் எடுத்துக்கொண்டனர். அந்த பாற்கடலில் இருந்து மகாலட்சுமியும் அவதரித்தாள். அவள் உதித்த நாள் பங்குனி உத்திரத் திருநாள்.லஷ்மீம் ஷீர ராஜ சமுத்திர தனயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம் தாசி பூத சமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம் ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த பிரமேந்திர கங்காதராம் த்வாம் திரை லோக்ய குடும்பினிம் சரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்  என்ற ஸ்லோகம் இதை விவரிக்கும்.10. திருநாரணன் ஆன பங்குனி உத்திரம்பாற்கடலில் உதித்த மஹாலஷ்மி மஹாவிஷ்ணுவின் மார்பை அடைந்த நாள் பங்குனி உத்திரம். எனவே பங்குனி உத்திரம் மகாலட்சுமியின் அவதார தின மாகவும், மாலவனை மணாளனாக அடைந்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமி இறைவன் திருமார்பில் அமர்ந்து கொண்டதன் காரணமாக வெறும் நாரணனாக இருந்த திருமால், ‘திருநாரணன்’ ஆக மாறிய நாள் பங்குனி உத்திரம்.அன்றிலிருந்து அவன் மார்பை விட்டு மஹாலஷ்மி அகல்வதேயில்லை. இதை நம்மாழ்வார் பாசுரம் விவரிக்கும். பிராட்டி மார்பில் அமர்ந்த பின்னால்தான் மஹாலஷ்மி பெருமாள்  சேர்த்தியில் நம்மாழ்வார் சரணாகதி செய்கிறார்.அகலகில்லேன் இறையும் என்று  அலர்மேல் மங்கை உறை மார்பா நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!  என்னை ஆள்வானே,நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்  திருவேங்கடத்தானே,புகல் ஒன்று இல்லா அடியேன்  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.  11. பெரிய பிராட்டியாரின் அவதாரம் நட்சத்திரம்பங்குனி உத்திர நாள் திருவரங்கத்தில் மிக விசேஷம். காரணம் திருவரங்கத்து  தாயாரான பெரிய பிராட்டியாரின் அவதார நட்சத்திரம் பங்குனி உத்திரம் என்பதால் மிகச் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெருமாள் தாயார் சன்னதிக்கு வந்து பெரிய பிராட்டியாரோடு  ஏக ஆசனத்தில் சேர்த்தி உற்சவம் கண்டருளுகிறார். இந்த சேர்த்தி உற்சவம் சேவிப்பவர்களுக்கு பிராட்டியின் பேரருளும் பெருமானின் பேரருளும் கிடைக்கும். இதை கீழே உள்ள வாழித்திருநாமம் உறுதிப்படுத்தும். பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியேபங்குனியில் உத்திர நாள் பார் உதித்தாள் வாழியேமங்கையர்கள் திலகம் என வந்த செல்வி வாழியேமால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியேஎங்கள் எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியேஇருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியேசெங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியேசீரங்க நாயகியார் திருவடிகள் வாழியேஇதை தினசரி பூஜையில் சொல்ல, வளமான வாழ்வு கிடைக்கும்.12. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி தந்த தினம் தெய்வங்கள் பங்குனி உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான்.13. சங்க இலக்கியங்களில் பங்குனி உத்திரம்பங்குனி உத்திரத் திருநாள் சங்க காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகின்ற விழாவாகும். இதுகுறித்து சங்க இலக்கியங்களில் அதிகமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. பங்குனி உத்திரத் திருநாள் பற்றிய செய்திகள் அகநானூறு, சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணக்கிடைக்கின்றன. பங்குனி முயக்கம் என்று இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.கீழ்க்காணும் சிலப்பதிகாரப் பாடல் வரிகளில், பங்குனி முயக்கமானது மதுரை மாநகரில் வெங்கண் நெடுவேளாகிய காமதேவனின் வில் விழாவுடன் தொடர்புடையது எனக் கூறப்பட்டுள்ளது. இது வைகை ஆற்றங்கரை மணல் பரப்பில் நடந்தது.கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்   வெம் கண் நெடு வேள் வில்விழா காணும்பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் – சிலப். ஊர்காண்.14. அகநானூறு காட்டும் பங்குனி உத்திரம்தமிழக மக்களிடையே மிக பெரியதாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பங்குனி உத்திர விழா. 2000 வருடங்களுக்கு முன்பே இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பக்தர்கள் காவடி எடுப்பதும், நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. அகநானூற்றில்,விறற்போர்ச் சோழர் இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்றுஉருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில்பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் – அகம்.137” பகைவர்களை வென்று அடிக்கின்ற முரசினையும், போர் வெற்றியையும் உடையது சோழனின் உறையூர். அவ்விடத்தே காவிரி பேரியாற்றின் பெரிய கரையில் மணம் கமழும் சோலையில் முருகக்கடவுள் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற தருணமாக உத்திர நட்சத்திரத்தில் நிறைமதியும் கூடிய நன்னாளில் பங்குனி உத்திர விழா நடைபெறும் என்று இவ்விழாவைப் பதிவு செய்கிறது அகநானூறு.சங்க இலக்கியத்தில் திரு முருகாற்றுப்படை முழுவதும் முருகபெருமானின் வழிபாடுகளும் விழாக்களும் சொல்லப்படுகின்றன.15. மூன்று தெய்வங்களும் துணைவியரை அடைந்த நாள்இந்திய சமய மரபில் மூன்று முக்கியக் கடவுள்கள் பிரதானக்  கடவுளாக நாம் கொண்டாடுகின்றோம். அந்த மூன்று கடவுள்களும் மூன்று முக்கிய செயல்களைச் செய்கின்றனர். படைக்கும் தொழிலை நான்முகனும், காக்கும் தொழிலை திருமாலும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக சமய மரபில் இருக்கிறது. இந்த மூவருக்கும்  உரிய நாளாக பங்குனி உத்திரத் திருநாள் இருக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்யும் நான் முகன் கலைமகளை அடைந்ததும், காக்கும் தொழிலைச் செய்யும் மகா விஷ்ணு மகாலட்சுமியை அடைந்ததும், அழிக்கும் தொழிலைச் செய்யும் சிவபெருமான்  பார்வதியை அடைந்ததும், இந்த பங்குனி உத்திர திரு நாளில் தான்.16. சந்திரனும் பங்குனி உத்திரமும்மற்ற தேவர்களுக்கும் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பான நாளாக அமைந்திருப்பதை புராண நிகழ்வுகளில் இருந்து நாம் தெரிந்து கொள் ளலாம். தேவர்களின் தலைவனான இந்திரன் இந்திராணியை அடைந்தது பங்குனி உத்திரத் திருநாளில்தான். அதைப்போலவே சந்திரன் தக்ஷ பிரஜாபதியின் பெண்களான 27 நட்சத்திரங்களையும் மனைவியாக அடைந்தது பங்குனி உத்திரத்தில்தான். வில்வீரன் அர்ஜுனனுக்கு பல்குணன் என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.17. தெய்வானை முருகன் திருமணம்முருகனுக்கு உரிய நட்சத்திரம்  கிருத்திகை நட்சத்திரம். சூரியனுக்கு உரிய இன்னொரு நட்சத்திரமான உத்திர நட்சத்திரமும் முருகனுடைய திருவிழா நட்சத்திரமாகக்  கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் இந்த உத்திர நட்சத்திரத்தில் தான் முருகன் தெய்வானையை திருமணம் புரிந்துகொண்டார். முருகன் தெய்வானை திருமணம் எல்லா முருகன் கோயில் களிலும் பங்குனி உத்திரத் திருநாளன்று நடைபெறுகிறது. அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.18. காஞ்சியில் ஐந்து தாயார்“நகரேஷு காஞ்சி” என்பார்கள். காஞ்சி புரம் பிரசித்தி பெற்ற தலம். அது சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஏற்ற தலம்.. அதனாலேயே காஞ்சி புரம் சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று இரண்டு பகுதியாக இருக்கிறது. விஷ்ணு காஞ்சியில் அத்திகிரி என்று சொல்லப்படும் சிறுமலையில் (சின்ன மாடிதான்) காஞ்சி வரதராஜப் பெருமாள் அருள் தருகிறார்.  நின்ற கோலத்தில் காட்சிதரும் அவருக்கு “பேரருளாளன்” என்று திருநாமம். தியாகமண்டபம் என்று  சொல்லப்படும் இங்கே கேட்ட வரம் தரும் பெருமாளாக வரதராஜப் பெருமாள், “வரதன்” என்ற பெயரோடு இருக்கிறார் இங்குள்ள தாயாருக்கு பெருந்தேவித் தாயார் என்று திருநாமம். பங்குனி உத்தரம் இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று ஒரு நாள் மட்டும் ஐந்து தாயாரோடு பெருமாள் சேர்த்தி உற்சவம் கண்டருளுகிறார். பெருந்தேவித்தாயார், ஸ்ரீதேவி, பூதேவி தாயார், மலையாள நாச்சியார் மற்றும் ஆண்டாள்  ஆகிய ஐந்து தாயாரோடு வரதராஜப் பெருமாள் காட்சி தரும் அருமை இந்த பங்குனி உத்திர நாளுக்கு உரியது. 19. ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்காஞ்சியில் பிரசித்தி பெற்ற நதி கம்பை நதி. சிவபெருமானை பிரிந்த அம்பாள் கம்பை நதிக்கரையில் சிவனை அடைவதற்காக தவம் இருக்கிறார். மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்கிறார். ஒரு நாள் அந்த நதியில்  பெரும் வெள்ளம் வர, வெள்ளம் எங்கே இந்த சிவலிங்கத்தை அடித்துச் சென்றுவிடுமோ என்று நினைத்த அம்பாள் சிவலிங்கத்தைக் கட்டி அணைத்துக்கொள்கிறாள். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. இத்தலத்தின் இறைவி ஏலவார்குழலி அம்மையார்.சிவபெருமான் அம்பாள் அன்புக்கு ஆட்பட்டு திருக்காட்சி தந்து அம்பாள் கரம் பிடிக்கிறார். இந்தத்  திருக்கல்யாண உற்சவம் காஞ்சி ஏகாம்ப ரேஸ்வரர் கோயிலில் நடைபெறுகிறது. காஞ்சியில் அம்பாள் – ஏகாம்ப ரேஸ்வரர் திருமணவிழா நடைபெறும்போது, வேண்டிக்கொண்டு அதே மண்டபத்தில் சிலர்  சுவாமியின் முன் திருக்கல்யாணம் செய்து கொள்ளுகின்றனர். 20. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் பங்குனி உத்திரம்.திருமண வைபவத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்கு முக்கியமானது. மீனாட்சியை கன்னிகாதானம் செய்துகொடுப்பதுபோல் உள்ள சிற்பமோ (ஓவியமோ) பிரசித்தி பெற்றது. எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெறும். மதுரை சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்திரத்தில் மணந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவபார்வதி திருமணக் கோலங் களில் ஏதேனும் ஒன்றை தரிசித்தாலும், அல்லது வைபவங்களில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று வாழலாம்.. 21. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவில்லி புத்தூருக்கு மிகப்பெரிய ஏற்றம். இங்கே பெரியாழ்வார் திருமகளாய், ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார், பெருமாளையே திருமணம் செய்துகொள்வேன் என்ற உறுதியோடு இருந்தார்.வானிடைவாழும் அவ் வானவர்க்குமறையவர் வேள்வியில் வகுத்த அவிகானிடைத் திரிவதோர் நரி புகுந்துகடப்பதும் மோப்பதும் செய்வதொப்பஊனிடையாழி சங்கு உத்தமர்க்கென்றுஉன்னித்தெழுந்த என்தடமுலைகள்“மானிடவர்க்கென்று பேச்சுப்படில்வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!” – என்று வைராக்கியத்தோடு இருந்த ஆண்டாள், தன் மனம் விரும்பியபடியே, கண்ணனையே மணாளனாக அடைந்த நாள் பங்குனி உத்திரம். இந்த பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.22. இன்னும் பல தெய்வத் திருமணங்கள்பங்குனி உத்திரத் திருநாளில் இன்னும்பல தெய்வத் திருமண வைபவங்கள் புராணங்களில் உண்டு. காமதேவனான மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டான்.  ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாள் இந்த நாள். தமிழ் முனிவரான அகத்திய மாமுனிவர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்ட நாள் பங்குனி உத்திர நாள். சுவாமி ஐயப்பன் பூரணை புஷ்கலா தேவியரை  திருமணம் செய்துகொண்ட நாளாகவும் பங்குனி உத்திர நன்னாள் கருதப்படுகிறது.23. திருமணத் தடை விலக திருமழபாடிசைவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருமழபாடி. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை. தல விருட்சமாக பனை மரம் உள்ளது. ‘‘பொன்னார் மேனியனே” என்று வாய் குளிர அழைத்து “மழபாடியுள் மாணிக்கமே” என்று இந்த திருத்தல இறைவனை போற்றுகிறது தேவாரப் பாடல். இங்கு நந்திதேவருக்கு மிகப்பெரிய சிறப்பு. சிலாத முனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். நந்தி என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. ஜோதிட ரீதியாக நந்தி யோகம் என்று ஒரு யோகத்தைச் சொல்வார்கள். இது உண்மையில் அவயோகம். உதாரணமாக சிலருக்கு திருமணம் தடைப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதற்கு காரணமாக இந்த நந்தி யோகம் விளங்கும். இந்தத்  தடை நீங்கிவிட்டால் அவர்களுக்கு மிக எளிதாக திருமணம்  நடந்துவிடும்.இதற்கு பிராயச்சித்தமாக திருமழபாடியில் பங்குனி உத்திர நன்னாளில் நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் நடைபெறு கின்ற திருமணம் கண்டு வணங்கினால் அவர்களுக்கு இந்த ஜாதகத் தடைகள் விலகும் என்ற நம்பிக்கை உண்டு என்பதால், திருமணத்தடை உள்ளவர்கள், இந்த திருத்தலத்திற்கு வந்து, நந்தியின் திருமணத்தைச்  சேவிப்பார்கள். அக்காரணத்தில்தான் இப்பகுதியில் ‘‘நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்” என்ற சொல் வழக்கும் நிலவி வருகிறது . அன்றைய நாளில் திருவையாற்று இறைவன் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளுவதும் திருவையாற்றில் நடை பெறும் சப்தஸ்தான விழாவிற்கு இங்கிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்வதும் மரபாக இருந்து வருகின்றது. 24. பங்குனி உத்திரத்தில் தீர்த்தவாரி உற்சவம்பங்குனி மாதத்தில் பல கோயில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரமோற்சவம் என்பது தொடர் நிகழ்ச்சியாக குறைந்தபட்சம் பத்து நாட்கள் நடைபெறுகின்ற பெருவிழா. இப்பெருவிழாவின் நிறைவு நாள் தீர்த்தவாரி என்று சொல்வார்கள். எம்பெருமான் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளத்திலோ ஆற்றிலோ தீர்த்தவாரி கண்டு அருள்வார். பங்குனி உத்திரத்தில் சில கோயில்களில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகின்றது. கர்நாடகாவிலுள்ள மேலக்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் பங்குனி பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அதில் வைரமுடி சேவை விழா ஆறாம் நாளான பங்குனி உத்திரத்தில் இரவு நடைபெறும்.25. பங்குனியில் மாவிளக்கு,திருவிளக்கு பூஜைபங்குனி உத்திர நாளில் திருமணத்தடை உள்ளவர்கள் திருவிளக்கு பூஜைகள் நடத்தலாம். மாவிளக்கு போட்டு, குல தெய்வத்தையும் தங்கள் இஷ்ட தெய்வத்தையும் வணங்க, திருமணத் தடைகள் விலகும். விளக்கில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் இருக்கிறார்கள் என்பது வைணவ நம்பிக்கை. அதைப் போலவே பார்வதியும் பரமசிவனும் இருக்கிறார்கள் என்பது சைவர்களின் நம்பிக்கை. எப்படி இருந்தாலும், திருவிளக்கு ஏற்றி  பூஜை செய்வதன் மூலமாக, வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு “திருமகள் போன்ற மருமகள்” அல்லது “திருமால் போன்ற மருமகன்” கிடைப்பார் என்கிற நம்பிக்கை உண்டு. அதனால் இந்த பங்குனி உத்திர நன்னாளில் பல இடங்களில் சிறப்பு திருவிளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.26. ராமாயணத்தில் பங்குனி உத்திரம்ராமாயணத்திற்கும் பங்குனி உத்திரத்திற்கும் தொடர்பு உண்டு. மிதிலா நகரில் சீதையை ராமன் சந்திக்கிறான். கம்பன் இதை அழகாக வர்ணிக்கிறான்.எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்றுஉண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிடஅண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.”(பாலகாண்டம்-மிதிலைக் காட்சிப் படலம்-35) அப்படியே ஒருவர் இதயத்தில் ஒருவர் மாறிக் குடிபோயினர். பிறகு சிவதனுசு ஒடித்து திருமண பந்தத்தை உறுதிசெய்து கொள்கின்றான் ராமன். திருமணத்திற்கு ஜனகர் நாள் குறிக்கிறார். (பொதுவாக திருமண நாள் பெண் வீட்டார்தான் குறிக்க வேண்டும் என்கின்ற குறிப்பும் இதில் இருக்கிறது.) அப்படி அவர் குறித்த நாள் தான் பங்குனி உத்திர நாள். அன்று நான்கு திருமணங்கள் நடைபெறுகின்றன. சீதைக்கும் ராமனுக்கும், லட்சுமணனுக்கும் ஊர்மிளைக்கும், பரதனுக்கும் மாண்டவிக்கும் சத்ருக்கனனுக்கும் சுருதி கீர்த்திக்கும் திருமண வைபவம் நடைபெறுகின்றது. எனவே இந்த நல்ல நாளை நினைப்பவர்களுக்கு ராமபிரானின் பூரணமான அனுக்கிரகம் கிடைக்கும்.27. திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி அவதரித்த நாள்பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் பூரம். இந்த பூரமும் மகாலட்சுமிக்கு உரிய நட்சத்திரம்தான். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் பூமா தேவிக்கு உரிய நட்சத்திரம் மற்றும் ஆண்டாளுக்கு உரிய  நட்சத்திரம். இந்தப் பூர நட்சத்திரத்தில் சீர்காழிக்கு அருகே திருவாலியில் கல்யாண அரங்கநாத சுவாமிக்கு திருமண வைபவம் நடைபெறுகின்றது. அன்றைய இரவு வேதராஜபுரம் (திருமணங்கொல்லை) என்கின்ற ஊரில் திருவேடுபறி உற்சவம் நடைபெறுகின்றது. அந்த உற்சவத்தின் அடியாகவே பெரிய திருமொழி என்கின்ற அழகிய தமிழ்ப் பிரபந்தம் பிறக்கிறது. எனவே திருமங்கையாழ்வாரின் முதல் பிரபந்தம் அவதரித்த நாள்.28. கணவன் மனைவி ஒற்றுமைக்கு பங்குனி உத்திரம்திருவரங்கத்தில் ‘‘ஆதி பிரம்மோற்சவம்” என்று சொல்லப்படுகின்ற உற்சவம் பங்குனியில் நடைபெறும். அப்பொழுது பெருமாளுக்கும் பிராட்டிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அதில் ஒரு சுவாரஸ்யம் என்ன என்று சொன்னால், பெரிய பெருமாளின் நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம். சந்திரனுக்கு உரியது. பெரிய பிராட்டியாரின் நட்சத்திரம் உத்திர நட்சத்திரம். சூரியனுக்கு உரியது. சூரியனை தந்தை என்றும் (பெருமாள் என்றும்), சந்திரனைத் தாய் என்றும், அதாவது பிராட்டி என்றும் கூறும் மரபு உண்டு.இங்கே இருவர் இதயமும் மாறியது போலவே இருவர் நட்சத்திரமும் மாறி இருப்பதையும் நாம் கவனித்தால், பங்குனி உத்திரத்தின் சிறப்பை தெரிந்துகொள்ள முடியும். கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இந்த சிறப்பு  மிகவும் முக்கியம் என்பதால் பங்குனி உத்திர நன்னாளில் தம்பதிகள் இந்த சேர்த்தி உற்சவத்தை அவசியம் சேவிக்க வேண்டும். 29. ராமானுஜரின் மூன்று நூல்கள் அவதரித்த நாள்திருவரங்கத்தில் பங்குனி உத்திர நாளுக்கு இன்னும் ஒரு விசேஷம் உண்டு. இறைவனை அடைவதற்கு மிக எளிய வழி அவன் திருவடிகளில் சரணம் அடைவதுதான். சகல வேதத்தின் சாரமாக சரணாகதி சொல்லப்படுகிறது. அந்த சரணாகதியை எப்படிச் செய்யவேண்டும் என்று சொன்னால், நேரடியாக பெருமாளின் திருவடிகளில் செய்வது உசிதமல்ல. பிராட்டியும் பெருமாளும் சேர்ந்து இருக்கக்கூடிய சேர்த்தியில் இந்த சரணாகதி செய்வதுதான் பலிக்கும் என்பது நம்பிக்கை.  தாயார் சந்நதியை சேவித்து விட்டுத்தான் பெருமாள் சந்நதியைச்  சேவிக்க வேண்டும் என்கின்ற வைணவ மரபு உண்டு. இதை உலகுக்கு உணர்த்த எண்ணிய ராமானுஜர், திருவரங்கத்தில், பெரிய பிராட்டியார் பெரிய பெருமாளும் சேர்ந்து இருக்கக்கூடிய ஒரே நாளாகிய பங்குனி உத்திர நாளில்,  உலக மக்களைக் காக்கும் பொருட்டு சரணாகதி செய்தார்.மூன்று கத்யங்களை(கத்யதிரயம்) அருளிச் செய்தார். அவர் செய்த அந்த சரணாகதியே சரணாகதி கத்யம் என்கின்ற நூலாகக் கொண்டாடுகிறோம். அந்த சரணாகதி பலித்தது. எனவே பங்குனி உத்திர நாளில் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கக்கூடிய திருக்கல்யாண தினத்தில் செய்யப்படுகின்ற எந்தக் கோரிக்கையும் உடனடியாக நிறைவேற்றப்படும். 30. கண்வ ரிஷிக்கு காட்சி தந்த பங்குனி உத்திரம்108 திவ்யதேசங்களில் சோழ நாட்டின் தலைவாசலில் இருக்கும் திவ்யதேசம் திருச்சித்ரகூடம். இரண்டு ராஜாக்கள் இருக்கும் திருக்கோயில் என்று இந்தக்  கோயிலைச் சொல்வார்கள். ஒருபக்கம் கோவிந்தராஜன். இன்னொரு பக்கம் நடராஜன். கோவிந்தராஜரைச்   சேவிக்க வேண்டி “கண்வ ரிஷி ” என்கின்ற முனிவர் தவம் இருந்தார். அவருக்கு பெருமாள் காட்சி தந்த நாள், பங்குனி உத்திர நாள். கிருதயுகத்தில், விஜய வருஷத்திலே, பங்குனி மாதம் திங்கட்கிழமை, விடிகாலையில், இந்த காட்சி கணவருக்கு கிடைத்ததாகச் சித்திரகூட புராணம் கூறுகிறது. எனவே பங்குனி உத்திரம் தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருக்கல்யாண உற்சவமாக வெகு விசேஷமாகக்  கொண்டாடப்படுகிறது. இப்படி பற்பல பெருமைகள் நிறைந்த பங்குனி உத்திர நன்னாளில், நாமும் அருகே உள்ள ஆலயத்திற்கு சென்று இறைவனின் திருக்கல்யாண வைபவத்தை கண்டு பிறவிப்பேற்றினை அடைவோம்.ஸ்ரீராம்…

The post திருமணத் தடை விலக்கும் பங்குனி உத்திரம் appeared first on Dinakaran.

Tags : Thirty-Bankuni Utrad Day of Pearls ,Bankuni Utrad Day ,Bankuni ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு பயிற்சி