×

ராகு-கேது இரண்டும் தலைகீழாகத்தான் சுற்றுவார்களா? அதற்கான காரணம் என்ன?

?தற்போது நடைபெற உள்ள ராகு – கேது பெயர்ச்சியில் ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடம் பெயர்வதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் ராகு-கேது இரண்டும் தலைகீழாகத்தான் சுற்றுவார்களா, அதற்கான காரணம் என்ன? இதற்கு என தனியாக ஏதேனும் கதைகள் உண்டா. – ஆர். விஸ்வநாத், முகப்பேர்.தேவர்களை வரிசையாக அமரவைத்து தன்வந்திரி பகவான் அமிர்தத்தை வழங்கி வரும்போது தேவர்களின் வரிசையில் இடையில் புகுந்த அசுரன் ஒருவனும் அமிர்தத்தை பெற்று அருந்தி விடுகிறான். தேவர்களின் வரிசையில் இருந்த சூரியனும் சந்திரனும் அசுரனைக் காட்டிக் கொடுக்க கோபம் கொண்ட மகாவிஷ்ணு அசுரனின் தலையை கொய்து விடுகிறார். அமிர்தத்தை உண்டிருந்ததால் அசுரனுக்கு மரணம் சம்பவிக்கவில்லை. தனியாகச் சென்ற தலைப்பகுதிக்கு பாம்பின் உடம்பும், உடம்புப் பகுதிக்கு பாம்பின் தலையுமாக இரு உடல்கள் அந்த அசுரனுக்குக் கிடைக்கின்றன. மனிதனின் தலையையும், பாம்பின் உடம் பினையும் கொண்ட உருவம் ராகு என்றும் மனித உடம்பு, பாம்பின் தலையைக் கொண்டிருக்கும் உருவம் கேது என்றும் பெயர் பெற்று நவகிரஹங்களில் இடம்பிடித்ததாகவும் சூரியனும், சந்திரனும் அசுரனைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் இந்த ராகுவும், கேதுவும் சூரியனையும், சந்திரனையும் விழுங்கச் செல்வதாகவும் அவ்வாறு அவர்கள் விழுங்கும் காலமே கிரகணம் என்றும் இவர்கள் அசுர குணம் கொண்டவர்கள் என்பதால் தலைகீழாக சுற்றுகின்றன என்றும் ஒரு கதை உண்டு. ஜோதிடம் என்ற அறிவியல் கூறும் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. ராகு, கேது ஆகிய இந்த இருவரையும் ‘சாயா கிரஹம்’ என்று சமஸ்கிருத ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதன் நேரடி மொழிபெயர்ப்பாக தமிழில் இவற்றை நிழல் கிரஹங்கள் என்று அழைக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பழங்காலத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத ஜோதிட நூல்களில் இந்த இருவரைப் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை. உண்மைக்கோள்கள் என்று சொல்லப்படுகின்ற சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இந்த ஏழினைப் பற்றி மட்டுமே ஜோதிட நூல்கள் பேசுகின்றன. கிரஹணங்களைப் பற்றிய ஆராய்ச்சியின் வளர்ச்சியிலும் வேத மந்திரங்களின் அடிப்படையிலும் பின் நாளில் ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்கள் இருப்பதாக ஜோதிட அறிஞர்கள் நம்பத் தொடங்கினர். இவர்களது கண்களுக்கு இந்த இரண்டும் புகைசூழ்ந்த மண்டலமாக தென்பட்டதால் (தூம்ர வர்ணம்) நிழலாக பாவித்தனர். இவை இரண்டும் நிலப்பரப்பினைக் கொண்ட உண்மைக் கோள்கள் அல்ல, புகை மண்டலமான நிலப்பரப்பற்ற நிழற்கோள்கள் என்று அறிவித்தனர். நிழல் என்பது ஒரு ஒளி மண்டலத்தில் ஏதோ ஒரு பொருள் குறிக்கிடுவதால் அந்த ஒளியானது மறைக்கப்பட்டு உருவாகின்ற கருமையான பிம்பம் ஆகும். ஆனால் இந்த இரண்டும் எந்த ஒரு பொருளின் பிம்பமும் அல்ல. அதே போன்று நிழல் என்பது அது சார்ந்த பொருளை பின்தொடர்ந்து வருவது. ஆனால் இவை இரண்டும் யாரையும் பின்தொடர்வதும் இல்லை. உண்மையில் இவை இரண்டும் ஒரே இடத்தில் நிற்கக்கூடிய புகை மண்டலமான பகுதிகள். இவற்றை வெட்டும் புள்ளிகள் என்று ஜோதிட அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். ஒரே இடத்தில் நிற்கக் கூடிய புள்ளிகள் என்றால் பிறகு ராகு – கேது பெயர்ச்சி என்பது பொய்யா, இன்ன ராசியிலிருந்து இன்ன ராசிக்கு இடம் பெயர்கிறார்கள் என்று சொல்கிறார்களே அது தவறா என்ற கேள்வி எழலாம். இதே கேள்வி சூரியனுக்கும் பொருந்தும். அறிவியல் ரீதியாக சூரியன் என்பது ஒரு மிகப்பெரிய விண்மீன் என்று பாடத்தில் படிக்கிறோம். அது ஒரே இடத்தில் நின்று சுழன்று கொண்டிருக்கும் மிகப்பெரிய நெருப்புக் கோளம் என்றும் படிக்கிறோம். ஆனால், மாதா மாதம் சூரியனின் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. அப்படியென்றால் இதில் எது உண்மை என்ற ஐயம் நமக்கு உதிக்கிறது. உண்மையில் நாம் படிக்கின்ற இந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள இந்த அண்டத்தை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்துப் பார்க்கிறோம். இந்த அண்டம் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த அண்டத்தின் மத்தியில் சூரியன் உள்ளதால் இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டலத்தில் இடம் பிடிக்கிறது. ராகு, கேது ஆகிய இந்த இரண்டும் தொலைதூரத்தில் ஒரே இடத்தில் நிற்கின்ற வெட்டும் புள்ளிகள் என்பதாலும், சுழலுகின்ற இந்த அண்டத்தினூடே நமது பூமியும் சுற்றி வருவதாலும் பூமியில் வசிக்கின்ற நம் கண்களுக்கு அவை பின்னோக்கி செல்வதாக தென்படுகிறது. ஓடுகின்ற ரயிலில் பயணிக்கின்ற நம் கண்களுக்கு அருகில் நிற்கின்ற ரயில் பின்நோக்கி செல்வதாகத் தோன்றுகிறது அல்லவா… அதுபோலத்தான் இதுவும். ராகு – கேது வக்ர கதியில் அதாவது பின்னோக்கி சுற்றுவதாக நம் கண்களுக்கு புலப்படுகிறது. இந்த அண்டமும் சுழலுவதால் அந்தந்த காலகட்டத்தில் எந்த ராசி மண்டலம் இந்த புள்ளிகளுக்கு நேராக வருகிறதோ, அதில் இந்த நிழற்கோள்கள் வந்து அமர்வதாக நாம் கணக்கில் கொண்டு பலன் காண்கிறோம். உண்மையில் ராகு-கேது ஆகிய இருவரும் தலைகீழாக சுற்றுவதில்லை. அவை ஒரே இடத்தில் நிற்கின்றன. நாம் வசிக்கும் பூமியும் இந்த அண்டமும்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. வண்டியில் செல்பவனின் கண்களுக்கு ஓரிடத்தில் நிற்பவன் பின்னோக்கிச் செல்வதாகத் தெரிவது போலத்தான் ராகு-கேது பின்னோக்கிச் சுழலுவதாகத் தெரிகிறது. இது கதையல்ல, ஜோதிட அறிவியல் சொல்லும் உண்மை.?இந்த ராகு-கேது பெயர்ச்சிக்கு ஒரு ஜோதிடர் சுப்ரமணிய ஸ்வாமிக்கு பரிகாரம் செய்யச் சொல்கிறார். மற்றொருவர் துர்கைக்கு விளக்கேற்ற வேண்டும் என்றும், இன்னொருவர் சிவபெருமானை வழிபட வேண்டும் என்றும் ஒவ்வொரு விதமாக பரிகாரம் சொல்கிறார்கள். இப்படி ஒரே ராசிக்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாக பரிகாரம் சொன்னால் நாங்கள் எதை நம்புவது? யார் சொல்வதை பின்பற்றுவது? தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.- ராம. சுப்ரமணியன், அம்பத்தூர். ஜூரம் வந்துவிட்டது என்று மருத்துவரிடம் செல்கிறீர்கள். ஒரு மருத்துவர் ‘டோலோ’என்ற மாத்திரையை எழுதித் தருவார். மற்றொருவர் ‘கால்பால்’ என்றும் இன்னொருவர் ‘குரோசின்’ சாப்பிடுங்கள் என்றும் பரிந்துரைப்பார்கள். மருத்துவருக்கு மருத்துவர் ஒரே நோய்க்கு வெவ்வேறு மருந்துகளை எழுதித் தருகிறார்கள் என்று கருதுவது தவறு. இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் ‘பாராசிட்டமால்’ என்று அச்சடித்திருப்பதைக் காண முடியும். பாராசிட்டமால் என்பது மருந்தின் பெயர். அடிப்படையில் ‘அசிட்டமினோஃபின்’ என்ற வேதிப்பொருள் இந்த மருந்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன் (C8%H9NO2) என்று நமது அண்டத்தில் கலந்துள்ள காற்றில் உள்ள மூலக்கூறுகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து இந்த வேதிப்பொருளை உருவாக்குகிறார்கள். நாம் மேலே கண்ட டோலோ, கால்பால், குரோசின் போன்றவை ஒவ்வொரு மருந்து கம்பெனியும் தாங்கள் தயாரித்த மாத்திரைகளுக்கு வைத்துக்கொண்ட பெயர்கள். அவ்வளவுதான். அடிப்படையில் இந்த மாத்திரைகள் அனைத்தும் ஒன்றுதான். இவ்வாறே ஒவ்வொரு ஜோதிடரும் கஷ்டம் என்று வருபவர்களுக்கு பரிகாரம் சொல்லும்போது இறைசக்தியை நாடுங்கள் என்று சொல்கிறார். ஜுரத்திற்கான மாத்திரைகளின் அடிப்படையில் எவ்வாறு பாராசிட்டமால் என்ற ஒரே மருந்து இருக்கிறதோ, அவ்வாறே பரிகாரங்களின் அடிப்படையில் இறைவன் என்ற ஒரே சக்தியைத்தான் பரிந்துரைக்கிறார்கள். அது வெவ்வேறு பெயர்களில் வேண்டுமானால் அழைக்கப்படலாம். அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான். இதுபோன்ற ராகு-கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சி காலத்தில் மட்டுமல்ல, சாதாரணமாக ஜாதகம் பார்க்கச் செல்லும்போதுகூட உங்கள் தசாபுக்தியின் அடிப்படையில் பலனைச் சொல்லும்போது ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமான கோயிலுக்குச் செல்லுமாறு சொல்வார்கள். அதற்காக அவர்கள் சொல்லும் பலன்களைத் தவறு என்று கருத முடியாது. அவர்களுடைய நோக்கம் உங்களுடைய கஷ்டம் தீர்ந்து நீங்கள் நலம் அடைய வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்திற்காக அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளே நீங்கள் சொல்லும் சுப்ரமணியர், துர்கை, சிவபெருமான் ஆகியன. அவர்கள் சொல்ல வருவது நீங்கள் இறைசக்தியை நம்பினால் மட்டுமே பிரச்னையில் இருந்து விடுபட இயலும் என்பதே. சுப்ரமணியர் ஆலயத்திற்கு பதிலாக விநாயகப் பெருமானின் கோயிலுக்குச் செல்வதைத் தவறு என்று எந்த ஒரு ஜோதிடரும் சொல்ல மாட்டார்கள். மருத்துவருக்கு மருத்துவர் ஒரே நோய்க்கு எவ்வாறு வெவ்வேறு மருந்தின் பெயர்களை பரிந்துரைக்கிறார்களோ, அந்தப் பரிந்துரையிலும் நாம் எவ்வாறு குற்றம் காண இயலாதோ, அவ்வாறே ஜோதிடருக்கு ஜோதிடர் வெவ்வேறு தெய்வங்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். இதில் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள் என்று சொல்லப்படும் கருத்து ஏற்புடையது அல்ல. குடும்ப மருத்துவர் என்று ஒருவரை வைத்திருப்பது போல ஒரே மனிதரை குடும்ப ஜோதிடராக வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் மட்டும் உங்கள் ஜாதகத்திற்கான பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு அவர் சொல்லும் பரிகாரங்களைச் செய்து வாருங்கள். நிச்சயமாக பலன் அடைவீர்கள்.திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா…

The post ராகு-கேது இரண்டும் தலைகீழாகத்தான் சுற்றுவார்களா? அதற்கான காரணம் என்ன? appeared first on Dinakaran.

Tags : Raku-Kedu ,Raku ,Kedu Bhasi ,Mesha ,Rishabha Rishapa ,Kedu ,Vrishaksha ,Raku-Kedi ,
× RELATED பிரசித்தி பெற்ற குன்றத்தூர்...