×

நாகதோஷம் போக்கும் நாகநாதர்

தெய்வத் தமிழ் திருநாட்டில் சித்தத்தை சிவன்பால் வைத்த சீலர்கள் வாழ்ந்தனர். ஈசனும், அவர்தம் ஆபரணங்களும் அது உணர்த்தும் தத்துவங்களையும் கோயில்களில் சிலைகளாக செதுக்கி வைத்தனர். முனிகளும், ரிஷிகளும் அத்தலத்திற்கு விரைந்து சென்று சிலைக்குள் சிவ சாந்நித்தியத்தை பொதித்தனர். யுகம் தோறும் சிவச்சாரலில் அந்தத் தலம் நனைந்தது. ஈசனும் உவகையோடு பக்தனை அருகே அழைத்தான். தாம் யாரென உணர்த்தினான். அறிந்தோ, அறியாமலோ தலத்தை நெருங்கியவர்களை தம் அருட்கணைகளால் ஆற்றுப்படுத்தினான். அதில், நாகம் எனும் ஈசனின் ஆபரணத்திற்கென்றே ஒரு தலம் அமைந்து, தானும் அதில் நாகத்தோடு அமர்ந்து அருளின் சிகரம் ஏறினான். அப்படிப்பட்ட ஒரு தலமே பேரையூர் நாகநாதர் ஆலயம்.சைவமும், தமிழும் ஓங்க அயராது உழைத்த பாண்டியர் குலத்தோன்றல் சுவேத கேது என்பான் தன் தவ வலிமையால் உருவான தலமே பேரையூர். சிவனின் சீரருள் பெற்று கங்கைக்கு நிகரான தீர்த்தம் சூழ எழில் கொஞ்சும் சிவத்தலம் பேரையூர். பங்குனி மாதம் மீன லக்ன காலத்தில் இங்கு அமைந்துள்ள சுனையிலிருந்து பேரநாதம் எழுகிறது. இதன் ஒலியமைப்பின் நீட்சியை உணர்ந்தவர்கள் பேராஸ் நாதம் என்றழைத்தனர். பின்னாளில் பேரையூர் என சுருங்கி மருவியது.சாதாரணமாக குண்டலினி எனும் உயிர் சக்தியின் அம்சமாக நாகத்தை சொல்வர். இது சகல உயிர்களின் ஆதாரபீடமான யோக மையத்தில் மூலாதாரத்தில் கனன்றபடி இருக்கும். இந்த நாகம் மேலேறும்போது விழிப்புணர்வு பெற்று ஒரு ஜீவன் ஞானமடைகிறது. இதையே ஈசனின் அம்சமாகவும், ஆபரணங்களாகவும் ரிஷிகளும், ஞானிகளும் ஏற்றம் கொடுத்துப் பேசினர். அந்த அரிய விஷயங்கள் பாமரருக்கும் புரியும் விதமாக உயிர்சக்தியின் மையமாகவே பேரையூர் நாகநாதர் தலம் விளங்குகிறதென்றால் மிகையில்லை. பூலோகம், புவர்லோகம்… என்று பேசும் பழமையான நூல்கள் நாகலோகம் என்றும் ஓர் உலகத்தை பேசுகின்றன. இந்த பூலோகமான பூமியில் ஒருநாகலோகமெனில் அது பேரையூரே ஆகும். கோயிலின் வாயிலிலும், மதிற்சுவர்களிலும் நந்தி பகவான் எழுந்தருளிவிப்பார். இங்கோ நாகர்சிலைகள் படமெடுத்து நிமிர்ந்து கூரிய பார்வை கொண்டு பார்க்கும்போது சிலிர்க்கின்றன.   இந்த அருந்தலத்தை பேரேஸ்வரம் என்றும் செண்பகவனம் என்றும் அழைப்பர். சுயம்பு லிங்கமாக விரித்த நாகமோடு நாகநாதர் எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறார். இத்தனை நாக சக்திகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் கம்பீரத்தோடு வீற்றிருக்கிறார். யோகம் வளர்க்கும் இந்த நாயகர் இகலோகமான நம் வாழ்க்கையில் வேண்டுவன யாவையும் கேட்காமலேயே அருள்கிறார். சிவனின் சத்திய அம்சம் எத்தனை ரகசியங்களை தமக்குள் கொண்டிருக்கிறது எனும் பிரமிப்பு நாகநாதரை தரிசிக்கும்போது உணரமுடியும். தலம் முழுவதிற்குமாக ஒரு ஊற்றுக் கண்போல நாகநாதர் விளங்குகிறார். கோயிலைச் சுற்றிலும் ஊனக் கண்களால் உணர முடியாத ஒரு துடிப்பும், ஆழ்மனம் வரை பாயும் ஒரு சக்தியின் ஓட்டத்தையும் நம்மால் இச் சந்நதியில் உணர முடியும். எங்கு காணினும் சக்தியடா… எனும்போலவே இத்தலத்தில் எங்கு காணினும் நாக சக்தியால் சிலிர்த்து பரவியிருக்கிறது. முக்கிய நாகர் சிலைக்கு  பால் அபிஷேகம் செய்யும்போது உடலில் நீலநிறம் காட்டுவது அதிசயத்திலும் அதிசயம்.உடல் விதிர்த்தலோடு அம்மன் சந்நதிக்கும் நகர்கிறோம். அம்பாளின் இணையற்ற நாமம் பிரஹதாம்பாள். அருள் பொங்கும் திருக்கண் களைக் காண நம் அகம் முழுதும் ஆனந்தம் நிறைகிறது. இந்தக் கோயிலின் தீர்த்தமும் நாகதீர்த்தம்தான். புண்ணிய புஷ்கரிணி என்றும் அழைப்பர். நாகநாதஸ்வாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனி கொடி மரம் இங்குள்ளது. பொதுவாக நவகிரகங்கள் திசைக்கு ஒன்றாக அமைந்திருப்பதைதான் அனைத்து தலங்களிலும் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு மட்டும் நவகிரகங்கள் அனைத்தும் சூரியனை நோக்கி அமைந்துள்ளது வித்தியாசமாக உள்ளது.இந்த தலத்தின் பிரதான விஷயமே நாத ஒலி எழும் சுனைதான். சுற்றிலும் நாகர்கள் படமெடுத்து காக்க என்றும் வற்றாத சுனைக்குள் நாகநாதரே அருவமாக வீற்றிருக்கிறார். நீர்ச்சுழியலோடு வரும் தென்றல் காற்றே ஒரு பாம்பு மூச்சு விடுவது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணி மாளாத அளவுக்கு இந்த சிலைகளை யார் பிரதிஷ்டை செய்தது என்று பார்க்கும்போது ஆச்சரியத்தில் விழி விரிகிறது. ஆமாம், ராகு தோஷத்தால் அவதிப்படுவோர், ஒருவருடைய ஜாதகத்தில் ராகுவின் நிலை வலிமையற்று உள்ளோர், அது தவிர ராகுவின் பாதிப்பால் குழந்தை பாக்கியம் இல்லாது தவிப்போர், திருமணம் வேண்டி காத்திருந்தோர் என வாழ்க்கையில் பல்வேறு அடிப்படை பிரச்னை களால் சிக்குண்டோர் பரிகாரமாக பிரதிஷ்டை செய்த சிலைகளே அவை.எப்படி இந்தப் பரிகாரத்தை செய்வது?ராகு தோஷம் எனும் நாக தோஷம் உள்ளவர்கள் முன்னரே கோயிலைத் தொடர்பு கொண்டு சிறிய சிலையாக நாகரை செதுக்கி வைத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டால் போதும். அவர்கள் சிலை செதுக்கி உள்ளுக்குள் இருக்கும் சுனையில் வைத்து விடுவார்கள். சாதாரண கற்சிலையாக இருந்தது சுனையிலுள்ள நாகநாதரின் அண்மையாலும், காந்தத்தோடு இருந்த இரும்பு நாலாவட்டத்தில் காந்தமாக மாறுவது போன்று கற்சிலையாக இருந்தது இப்போது நாகநாதராக இறைச் சாந்நித்தியத்தோடு விளங்குகிறது. இதற்கு ஓரிரவு போதும். பரிகாரக் காரர்கள் மறுநாள் கோயிலுக்குச் சென்று எதிரிலுள்ள பிணிதீர்க்கும் திருக்குளத்தில் நீராடிவிட்டு தான் அணிந்து வந்த துணிகளை பின்புறமாக சுற்றி குளத்தின் அருகிலேயே எறிந்து விடவேண்டும். புதுத் துணி உடுத்தி கோயிலுக்குள் சென்று சிவலிங்கத்திருமேனியில் காட்சி தரும் ஈசனையும், தல நாயகர் நாகநாதரையும் தரிசித்து உங்களுக்குரிய சிறிய சிலையை எடுத்துக் கொண்டு கோயிலுக்குள்ளேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதாவது உங்களுக்குள் குறைந்திருக்கும் ராகுவின் சக்தியை அல்லது ராகுவின் எதிர் வினையால் பாதிக்கப்பட்டிருப்பின் இது சமமாக்கும். நாக சக்தி உங்களுக்குள் சமநிலை அடைந்து சீராகும். கிட்டத்தட்ட நாகலோகத்திற்குள் சென்று நாகருக்கென்று ஒரு கோயில் அமைப்பது போன்று இது பொருள்படும். கோயில் வாயிலிலேயே நாகர்சிலையை செதுக்கி வைத்துள்ளனர். அல்லது முன்னரே சுனையில் நாகர்சிலையை வைத்துவிட்டு மறுநாள் சென்று பரிகார முறைகளை மேற்கொள்ளலாம். ஆனால், மறக்காது பரிகாரக்காரர்கள் மட்டும் கோயிலின் எதிரிலுள்ள குளத்தில் நீராடிவிட்டுத்தான் செல்ல வேண்டும். பரிகாரம் செய்தோர்கள் வெகுவிரைவில் திரும்ப வந்து எண்ணிய காரியம் நிறைவேறியது என்று கண்களில் நீர் தளும்ப நன்றியோடு ஈசனின் முன்பு நிற்கிறார்கள். பரிகாரம் தாண்டி வழிபாடு செய்வோரும் நிச்சயம் பார்க்க வேண்டிய தலம் இது.புதுக்கோட்டை- திருமயம் தேசிய நெடுஞ் சாலையில் நமணசமுத்திரத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.ராகவேந்திரன்…

The post நாகதோஷம் போக்கும் நாகநாதர் appeared first on Dinakaran.

Tags : Naganathar ,Nagatosha ,Thirunath ,Siddha ,Lord Shiva ,Eesan ,
× RELATED தஞ்சை அருகே நாகநாதர் கோயிலில் 12...