×

திருவசனம் அருளப்பட்ட தருணம்

இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். பெரும் வணிகராக இருந்தாலும் அவருடைய மனம் தனிமையை நாடி இறைதியானத்தில் ஈடுபடவே விரும்பியது.மக்கா நகருக்கு அருகே ஒரு மலை. அந்த மலையில் ஒரு குகை. ‘ஹிரா குகை’ என்று அதை வரலாறு குறிப்பிடுகிறது. நபிகளார், வாரக் கணக்கில் அந்தக் குகையில் தங்கி இறைதியானத்தில் ஈடுபடுவார். சில நேரம் அவருடைய அன்பு மனைவி கதீஜா, நபிகளாருக்குத் தேவையான உணவையும் நீரையும் கொண்டுவந்து கொடுப்பார்.அது புனித ரமலான் மாதம். ஹிரா குகையில் ஆழ்ந்த தியானத்தில் அண்ணலார்(ஸல்) ஈடுபட்டிருந்தபோது திடீரென அவர் எதிரே தகதகவென ஒரு பேரொளி..வானவர் தலைவர் ஜிப்ரீல் இறைவனின் திருச்செய்திகளுடன் அங்கே திருவருகைபுரிந்தார். அண்ணலாரைப் பார்த்து, “ஓதுவீராக” என்றார்.எதிர்பாராத இந்த நிகழ்வால் மனத்தில் அச்சமும் நடுக்கமும் தோன்ற, நபிகளார் “எனக்கு ஓதத் தெரியாதே” என்றார். ஜிப்ரீல் அவரை இறுகக் கட்டியணைத்து, “ஓதுவீராக” என்றார். அப்போதும் அண்ணலார், “எனக்கு ஓதத் தெரியாதே” என்றார். மீண்டும் வானவர் தலைவர், நபிகளாரைக் கட்டியணைத்து “ஓதுவீராக” என்றார். நபிகளாரும் “எனக்கு ஓதத் தெரியாதே” என்றார்.மூன்றாவது முறையாக மிக இறுக்கமாகக் கட்டியணைத்த  ஜிப்ரீல், பிறகு அவரை விட்டுவிட்டு, “ஓதுவீராக” என்றார். இப்போது நபிகளார், “எதை ஓதுவது?” என்று கேட்டார். உடனே வானவர் தலைவர், இறைவன் அருளிச்செய்த வேத வசனங்களை மொழிந்தார்.“ஓதுவீராக! (நபியே)படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு. (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். ஓதுவீராக. உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக்கொடுத்தான்; மனிதனுக்கு – அவன் அறியாதிருந்தவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்தான்.”(குர்ஆன் 96:1-5)திருக்குர்ஆனின் 96ஆம் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 1-5 வசனங்கள்தாம் முதன் முதலாக நபிகளாருக்கு அருளப்பட்ட வேத வசனங்கள் ஆகும்.இதற்குப் பிறகு அடுத்த 23 ஆண்டுகள், தேவைக்கும் சூழலுக்கும் ஏற்பச் சிறுகச் சிறுக வேத வசனங்கள் அருளப்பட்டுக் கொண்டிருந்தன.திருவசனம் அருளப்பட்ட இந்த நிகழ்வு புனித ரமலான் மாதத்தில்தான் நடந்தது. அதனால்தான் இந்த மாதம் முழுக்க நோன்பு நோற்கிறோம்.- சிராஜுல்ஹஸன்…

The post திருவசனம் அருளப்பட்ட தருணம் appeared first on Dinakaran.

Tags : Thiruvasanam ,God ,PBUH ,
× RELATED இதயம் காணும் இறைவன்