×

நீங்காத செல்வம் அருளும் அங்காரக சதுர்த்தி

நம் நாட்டில் பலரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். இந்த சதுர்த்தி திதி செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அதற்கு இன்னும் கூடுதல் சிறப்பு உண்டு. அப்படி வருகின்ற நாளை ‘‘அங்காரக சதுர்த்தி” என்று விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். அங்காரகன் பூமித்தாயின் வளர்ப்புப் பிள்ளை. பரத்வாச முனிவருக்கும், துருத்தி என்னும் தேவலோக பெண்ணுக்கும் பிறந்த புதல்வன் செவ்வாய். ஜோதிடத்தில் செவ்வாய்க்கு பல காரகத்துவங்கள் உண்டு. சகோதரகாரகன் என்றும், பூமிகாரகன் என்றும், பெண்களுக்கு கணவனைக் குறிப்பிடுகின்ற களத்திரகாரகன் என்றும் சொல்வார்கள். இதுதவிர வீரம், கர்வம், முன் கோபம், ஆத்திரம், ஆணவம், முரட்டுத்தனம், வீண் சண்டை, வாக்குவாதம்.  அகம்பாவம், ஆதிக்கம் செலுத்தும் எண்ணம், உணர்ச்சி வசப்படுதல், ராணுவம், காவல்துறை விளையாட்டு வீரர், பொறியாளர், அறுவை சிகிச்சை, விவசாயம் என அடுக்கடுக்கான காரகங்கள் உண்டு. இவை அனைத்தும் நல்லவிதமாக அமைய, அவர் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். இல்லாதவர்க்கு ஒரு பிரார்த்தனை வாய்ப்பாக அமைந்தது அங்காரக சதுர்த்தி.அங்காரகனுக்கும் சதுர்த்திக்கும் என்ன தொடர்பு என்பதற்கு ஒரு சம்பவம் உண்டு. பூமிதேவியால் வளர்க்கப்பட்ட செவ்வாய், தன் தந்தை பரத்வாசரிடம், தன்னுடைய வெற்றிக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வழி கேட்கிறார். பரத்வாசர் விநாயக மந்திரத்தை உபதேசித்துத் தவம் செய்யச் சொல்கிறார். செவ்வாயும் விநாயகரை நினைத்து தவம் செய்ய, மாசி மாத தேய்பிறை சதுர்த்தி அன்று இரவு விநாயகர் தோன்றி, செவ்வாய்க்கு அருள்பாலித்தார். நவகிரக பதவியையும் தந்தார் என்று ஒரு கதை உண்டு.அங்காரகன் தனக்குரிய சங்கடங்களைப் போக்கிக் கொண்டு, வெற்றியையும் பதவியையும் அடைந்த திதி  “சதுர்த்தி திதி” என்பதால் அங்காரக சதுர்த்தியில் விநாயகரை வேண்டியவர்களுக்கு இகபர நலன்கள் ஏராளமாகக் கிடைக்கும். விநாயகப் பெருமான் ஞானத்தைத் தரவல்லவர். செவ்வாய்க்கிழமையன்று விநாயகரை வணங்குகின்றவர்களுக்குக் கல்வியும் ஞானமும் கட்டாயம் கிடைக்கும். ஆசைகள் குறைந்து கச்சிதமாக வாழும் வழி பிறக்கும். தேவைகள் குறையும் பொழுது நிம்மதி கிடைக்கும். அதேநேரத்தில் ஆசைப்பட்ட செல்வமும் அங்காரக சதுர்த்தி விரதம் தரும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அதாவது கோடீஸ்வர யோகம் தரும் என்கிறார்கள். அப்படித் தந்த செல்வங்களும் நிலைபெற்ற செல்வங்களாக நிலைத்து நிற்கும்.பெண்கள் இந்த விரதத்தை செய்கின்ற பொழுது, செவ்வாய் தோஷங்களால் ஏற்படும் திருமணத்தடை விலகி, விரைவில் திருமணம் கைகூடும். பொதுவாக செவ்வாய், கேது இணைவு பெற்றவர்கள் ஜாதகத்தில் திருமண தாமதம், அல்லது திருமண முறிவு வாய்ப்பு போன்ற சூழல்கள் உண்டாகும். பொதுவாகவே, செவ்வாய், கேது சேர்க்கை அல்லது பார்வையை சன்னியாசி யோகம் என்று கூடச் சொல்லுவார்கள். செவ்வாய்க்கு உரிய செவ்வாய்க் கிழமையில், கேது பகவானுக்கு உரிய விநாயகப் பெருமானை, சதுர்த்தி நாளில் வணங்குவதன் மூலமாக, இந்த செவ்வாய் கேது சேர்க்கையால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் நீங்கி தீமைகள் அனைத்தும் ஓடிவிடும்.அங்காரக சதுர்த்தி, இந்த மாதத்தில்தான் வரும் என்று சொல்ல முடியாது. ஆண்டின் 365 நாட்களில் ஏதேனும் சில நாட்கள், இந்த சதுர்த்தி திதியும் செவ்வாய்க் கிழமையும் இணைந்து வரும். அதனைக் குறித்து வைத்துக்கொண்டு, அந்த நாளில் அங்காரக சதுர்த்தி விரதம் இருந்து, விநாயகரையும் செவ்வாய் கிரகத்துக்கு உரித்தான முருகப் பெருமானையும் வணங்குவதன் மூலமாக அனேக நன்மைகளைப் பெறலாம். கணேச காயத்திரி மந்திரம் சொல்லலாம்.ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹிதந்நோ  தந்தி ப்ரசோதயாத் ’முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். அவன் நம்மை, அனைத்துச் செயல்களிலும் வெற்றி பெறச் செய்வானாக என்பது இதன் பொருள். விநாயகப் பெருமானை மற்ற மந்திரங்கள், அர்ச் சனைகள் முதலியவற்றை செய்து, பூஜையின் முடிவில், கற்பூரதீபம் காட்டும்போது, கணேச காயத்திரியை சொல்லலாம். அதோடு செவ்வாய் காயத்ரி மந்திரமும் அன்றைய தினம் ஜபம் செய்யலாம்.

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹிதந்நோ பெளம ப்ரசோதயாத்

வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் தேவனை அறிந்து கொள்வோம். தடைகளை அகற்றும் அவனை நோக்கி தியானம் செய்வோம். பலம் பொருந்திய அவன் நம்மைக் காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருள்.- விருச்சிகன்…

The post நீங்காத செல்வம் அருளும் அங்காரக சதுர்த்தி appeared first on Dinakaran.

Tags : Angaraka Chaturthi ,Chaturthi Vrat ,Chaturthi ,Tithi ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா