×

தீராத நோய்களிலிருந்து விடுபட யோகினி ஏகாதசி

யோகினி ஏகாதசி 4.8.2021அழகாபுரி குபேரனுடைய நாடு. செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் தினம்தோறும் மிக விரிவாக பூஜை செய்து வருவான். அதற்காக மானசரோவர் என்கின்ற ஒரு ஏரியில் மலர்களைப் பறித்து வரச் செய்வான். அதற்கென்று ஒரு சேவகன் இருந்தான். அந்தச் சேவகனுக்கு ஹேமமாலி என்று பெயர்.தினந்தோறும் குபேரன் பூஜைக்காக மானசரோவர் ஏரி சென்று மலர்களைப் பறித்து வருவதுதான் அவன் வேலை.தன்னுடைய பூஜைக்கு மலர்களைப் பறித்து வருகின்ற சேவகன் மீது மிகுந்த பிரியத்தோடு இருந்தான். அவனுக்கு விசாலாட்சி என்கின்ற அழகான மனைவி இருந்தாள். பெயருக்கு ஏற்றதுபோல அவள் அழகானவள். விசாலமான கண்களை உடையவள். தன்னுடைய மனைவியிடத்திலே அளவு கடந்த காதலை வைத்திருந்தான். பல நேரங்களில் அவளைப் பார்க்கும்பொழுது, மற்ற வேலைகளையும் மறந்து விடக்கூடிய அளவுக்கு அவள் அழகு அவனைக்கட்டிப் போட்டு இருந்தது.கடமையை மறக்கச் செய்கின்ற அழகும் சில நேரங்களில் விபரீதமான விளைவுகளைத்  தந்துவிடும். அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதை உணராமல் இருந்தான். ஒருநாள் மலர்பறித்து வருவதற்காகப் புறப்படுகின்ற வேளையில் விசாலாட்சி கண்ணில் பட்டாள். என்றைக்கும் இல்லாத அழகில் அவள் அன்றைக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு, அவன் தன் வேலையை மறந்தான். அவளிடத்தில் சல்லாபத்தில் ஈடுபட்டான்.மலர் வருவதற்காகப் பூஜை செய்யாமல் வெகு நேரம் காத்திருந்தான் குபேரன். நேரம் சென்று கொண்டிருந்தது.பூக்களைப் பறித்து வருவதற்கு இத்தனை நேரமா என்று நினைத்தவன், தன்னுடைய மற்றொரு சேவகரிடம், ‘‘நீ சென்று, என்ன இத்தனைத் தாமதம் செய்கிறான் ஹேமமாலி, என்பதைத் தெரிந்து கொண்டு வா’’ என்று அனுப்பினான். சேவகன் விரைவாகச் சென்று பார்த்தபோது, அவன் அங்கு இல்லை. தேடிக்கொண்டு சென்றபோது அவன் தன் வீட்டில் மனைவியுடன் காதல் மொழி பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அதை அப்படியே குபேரனிடம் சொல்லி விட்டான்.தாமதம் ஆனதாலும் சொன்ன வேலையைச் செய்யாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தினாலும் ஹேமமாலியைக் கடுமையாக சபித்து  விட்டான் குபேரன். மனைவியிடம் அன்பு இருப்பது என்பது அவசியம்தான். ஆனால், எல்லாக் கடமை களையும் மறந்துவிட்டு அவளே கதி என்று நினைப்பதும், அதைவிட காமச்சுவை அதிகமாகி கடமையை மறந்ததும் குற்றம்.  காமம் ஒரு நெருப்பு. அது உன்னை அழித்து விடும். அதனுடைய பலனை அனுபவிக்கப் போகிறாய்.“எந்த இன்பம் உனக்கு சந்தோஷத்தைத் தருவதாக நினைத்தாயோ, அந்த இன்பத்திலிருந்து நீ விடுபடுவாய். உன் உடல் துன்பப்பட குஷ்டரோகியாகப் பிறப்பாய். நீ இந்த லோகத்தில் இருந்து இப்பொழுது விழக் கடவாய்” என்று கடுமையாகச் சபித்தான். அடுத்த நிமிடம் குபேரன் சாபத்தினால் கீழே பூலோகத்தில் விழுந்தான் ஹேமமாலி.குஷ்ட ரோகத்தினால் கடுமையாகப் பீடிக்கப்பட்டான். அவனுக்கு உடல் எரிச்சல் அதிகரித்தது. நோயினாலும், கடுமையான மனத் துன்பத்தினாலும்  அவனுக்கு இரவில் சரியான உறக்கம் வரவில்லை. எப்பொழுதும் நெருப்பில் சிக்கிய புழுபோலத் துடித்தான். தான் எதற்காக இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வருத்தத்துடன் நினைத்தான். இவ்வளவு துன்பங்களை அனுபவித்த போதும், ஏற்கனவே குபேரன் பூஜைக்கு மலர் பறித்துத் தந்த புண்யத்தினால், அவனுக்கு பூர்வ நினைவுகள் இருந்தது.அவன் தன் சாப விமோசனத்திற்காக, இமயமலையை அடைந்தான். அங்கே மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். மார்க்கண்டேய மகரிஷியின்  திருவடிகளில் விழுந்து வணங்கினான். சாப விமோசனம் பெறுவதற்கு என்ன வழி என்று கேட்டான். கருணையே வடிவெடுத்த மார்க்கண்டேய முனிவர் அவரைப் பார்த்து‘‘நீ எதற்காக இப்படிப்பட்ட ஒரு சாபத்தை அடைந்தாய்?’’ என்று கேட்க, தன்னுடைய முற்பிறவி நினைவினால், நடந்து கொண்ட விஷயங்களை எல்லாம் மிக விரிவாக ரிஷியிடம் தெரிவித்தான்.முனிவர் சொன்னார். ‘‘இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. ஆடிமாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசிக்கு “யோகினி ஏகாதசி” என்று பெயர். இந்த ஏகாதசியை முறையாக அனுஷ்டித்தால் உன்னுடைய சோகத்திலிருந்து விடுபடலாம். பகவான் மகாவிஷ்ணுவின் அருளாலே நீ பழைய நிலையை அடையலாம்” என்று சொல்லி, அந்த கிருஷ்ணபட்ச ஏகாதசி சிறப்பையும், விரதம் இருக்க வேண்டிய முறையையும், இருந்தால் கிடைக்கும் பலனையும் மிக விரிவாக எடுத்துரைத்தார். இதைப் பணிவோடு கேட்ட ஹேமமாலி, மார்க்கண்டேய மகரிஷியின் பாதங்களில் விழுந்து வணங்கி விடைபெற்றான். ஆடிமாத தேய்பிறை ஏகாதசியை சங்கல்பத்தோடு முழுமையாகக் கடைபிடித்தான். அந்த விரதத்தின் பலனாக அவனுடைய உடல் உபாதைகள் நீங்கி, குஷ்டரோகம் மாறி, பழையபடியான நல்ல உடல் அவனுக்குக் கிடைத்தது. சாபவிமோசனம் பெற்றான். ஏகாதசி விரத மகாத்மியம் நூலில் இந்த ஏகாதசி விரதமகிமை மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சொன்ன ஒரு முக்கியமான விஷயம். 88000 வேத வித்துக்களை அதிதி பூஜை செய்தால், எத்தனைப் புண்ணியம் கிடைக்குமோ அத்தனை புண்ணியம், இந்த ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்தால் கிடைத்துவிடும் என்று ஏகாதசி மகாத்மியம் கூறுகிறது. யோகினி ஏகாதசி, ஆகஸ்ட் மாதம் நாலாம் தேதி இந்த ஆண்டு வருகிறது. அன்றைக்கு விரதம் இருந்து மகாவிஷ்ணுவின் உடைய பாதார விந்தங்களில் பூஜை செய்தால், பாப விமோசனம் ஆகி வினைப்பயன் சிதையும். ‘யோகினி ஏகாதசி’ விரதமானது உடல் நோயைத் தீர்க்கும் மகத்துவம் நிறைந்தது என்கிறது ‘ஏகாதசி மகாத்மியம்.’…

The post தீராத நோய்களிலிருந்து விடுபட யோகினி ஏகாதசி appeared first on Dinakaran.

Tags : Yogini Ekadasi ,Azhakapuri ,Kubera ,Kuberan ,
× RELATED பெண்கள் தினமும் விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளலாமா?