×

ஆழ்வார்கள் போற்றிய ஆளரி

திருமழிசை ஆழ்வார்இறைவன் பல அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. கணக்கற்ற அடியவர்கள் வேண்ட, இறைவன் தர்மத்தை நிலை நிறுத்தவும், சாது ஜனங்களைக் காக்கவும், ஏதேனும் ஒரு வடிவம் எடுத்து அவதரிக்கிறான்.ஆனால், நரசிம்ம அவதாரத்தில் மட்டும், ஒரே ஒரு பக்தனின் வேண்டுகோளுக்காக, கணக்கற்ற வடிவங்களில் எங்கும் பரந்து, எல்லா பொருட்களிலும், இடங்களிலும் கலந்தான். காத்திருந்தான். அந்த பெருங் கருணையை நினைக்க நினைக்க வியப்பு மேலிடுகிறது. இது பல புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்வார்கள் பலரும்  நரசிம்ம அவதாரத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். அதில் சில பாசுரங்களை மட்டும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.நம்மாழ்வார்ஆழ்வார்களில் தலைமை ஆழ்வாரான நம்மாழ்வார், நரசிம்ம அவதாரத்தின் மீது காதல் கொண்ட ஆழ்வார் ஆவார். அந்த நரசிம்ம அவதாரத்தை நினைத்ததுமே அவருக்கு நாயகி பாவம் ஏற்படுகின்றது. அந்தப் பெருமானை நினைத்து உருகுகிறார். அந்த எம்பெருமான் திருநாமமான  “நரசிங்கா நரசிங்க” என்று சொல்லி ஆடுகின்றார். அகம் கரைந்து இசை பாடுகின்றார். கண்களில் கண்ணீர் மல்க அவன் எங்கே இருக்கின்றான் என்று, இங்கும் அங்கும் ஓடுகின்றார். அவனைத் தேடுகின்றார். அதை அப்படியே அழகான நாயகி பாவத்தில் அமைந்த அருந்தமிழ் பாசுரமாக நமக்கு நடித்து அளித்திருக்கின்றார், நம்மாழ்வார்.ஆடியாடி அகம் கரைந்துஇசை பாடிப் பாடிக்  கண்ணீர்மல்கி  எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும்  இவ்வாணுதலே  நரசிம்ம அவதாரம் எந்தச் சூழலில் எடுக்கப்பட்டது என்பதை தத்ரூபமாக இன்னும் ஒரு  பாசுரத்தில் நேரடியாகவே அமைத்துக்  காட்டுகின்றார் நம்மாழ்வார்.எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக்காய்ந்து இங்கு இல்லையால் என்று, இரணியன்தூண்புடைப்ப, அங்கு அப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமைஆராயும் சீர்மைத்தே?தான் பெற்ற பிள்ளையான பிரகலாதனிடம், “எங்கே இருக்கின்றான் உன் இறைவன்?” என்று ஆவேசமாகக் கேட்கிறான் இரணியன். அப்பா!  உங்கள் கேள்வி தவறு? அவன் இல்லாத இடம் ஏது?பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்த பரிபூரணன் அல்லவா அவன். என் கண்ணன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று தெளிவாகக் கூறுகின்றான்.“இதோ பார், நீ சொல்வது அறிவுக்குப் பொருத்தமானது அன்று. அவன் எப்படி ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்க முடியும்? ஒரு பொருள் பல இடத்தில் இருந்தால், அப்பொருள் குறைவுடைய பொருளாகத்தானே இருக்கும்? நீ சொல்வது பொருத்தமுடையது அல்ல. நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்” என்ற இரணியன், ஒரு துணைச்  சுட்டிக்காட்டி, ‘‘இங்கு உன்னுடைய ஹரி  இல்லையா?” என்று கேட்க, பிரகலாதன், “சோதித்துப் பார்” என்று பதில் சொல்லுகிறான். இப்படிச் சொன்ன மகனைக் கோபமாகப் பார்த்தபடி, அந்தப் பெருத்த தூணை அடிக்க, அத்தூணில் அவன் அடித்த அப்பொழுதே, அவ்விரணியன் மாயும் படியாகத் தோன்றினார்  சிங்கப்பிரான். அவருடைய  பெருமை யாராலும் ஆராய்தற்குரிய தன்மை படைத்தல்ல என்கிறார், ஆழ்வார்.வயிற்றிலே பிறந்தவனாய் இருந்தும், பிரகலாதன் பகவானுடைய திருநாமம் சொல்லப் பொறுக்க மாட்டாமல் சீறினான். ஆதலின், மகனைக் காய்ந்து என்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்தே அவன் பிணமாகும்படிஅத்தனை பயங் கரமாய்த்  தோன்றிய காட்சியையும்(அவன் வீயத்தோன்றிய)  இப் பாடலில் ஆழ்வார் பாடுகின்றார்.“ஆஹா” என்று விண்ணை பிளக்கும்படி, அதிர்த்துக் கொண்டு புறப்பட்ட தோற்றமும், பயங்கரமான சிரிப்பும் , நாவை மடித்துக் கொண்ட உதடும், நெற்றியில் சுடர்விடும் கண்ணும், உச்சியில் ஏறி இறங்கும் புருவமுமாய்க்கொண்டு, தோன்றிய அவன் வடிவத்தை பார்த்தபோது பொசுக்கின பன்றி போல உருகினான் இரணியன். அடியார் கூட்டத்துக்காக நரசிம்மமாய்த்  தோன்றிய அவனுடைய பரத்துவம் இன்று சிலரால் ஆராயும் படியாக இருக்குமா என்ன?அவன் பெருமை ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது என்கிறார் ஆழ்வார்.ஆண்டாள் நம்மாழ்வார் போலவே ஆண்டாளுக்கும் நரசிம்மன் மீ அன்பு அதிகம். அதற்குக் காரணம் இருக்கிறது. அவன் கண்ணனைப்  போல ஏலாப் பொய்கள் உரைப்பவன் அல்ல. நாளை என்பது அவனிடத்தில் இல்லை. அவன் பொய் சொல்ல மாட்டான். வாக்கைக் காப்பாற்று வான். தன்னுடைய பக்தர்கள் வாக்கும் பொய்யாகி விடக்கூடாது என்று நினைப்பான். ஒரு தலைவன் வாக்கு தவறக் கூடாது. அதனால்தான் அவன் அமர்ந்த இருக்கைக்கு சிங்காசனம் என்று பெயர். நல்லது செய்கின்ற தலைவன் நடக்கும் நடையும் சிங்க நடையாக இருக்கும். அவன் அமரும் கம்பீரமும் சிங்கம் அமர்வது போலவே இருக்கும். அவன் புறப்பட்டு வருவதும் ஒரு குகையில் இருந்து சிங்கம் புறப்பட்டு வருவது போலவே இருக்கும். இந்த நடையைக் காண ஆசைப்பட்ட ஆண்டாள், திருப்பாவை பாசுரத்தில் அச்சாரம் போடுகின்றாள்.‘‘நீ ஒரு குகையில் இருந்து புறப்பட்டு வருகின்ற சிங்கம் எப்படி தன்னுடைய பெருமைகளை எல்லாம் பலரும் உணரும் படி, சிலிர்த்துக்கொண்டு, உடல் அசைந்து உதறிக்கொண்டு, கம்பீரமாக முழக்கமிட்டுக் கொண்டு, வருமோ, அதைப்போல வந்து அமர வேண்டும் என்று பாடுகின்றாள்.“சீரிய சிங்கம் அறிவுற்று, தீ விழித்து, வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி, மூரி நிமிர்ந்து, முழங்கி, புறப்பட்டுப் போதருமா போலே, நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய-சீரிய சிங்காசனத்து இருந்து,யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்” என்பது திருப்பாவையில் நரசிம்மனின் நடையழகை அப்படியே படம் பிடித்துக் காட்டும் பாசுரம். தன்னுடைய திருமணக் கனவான ‘‘வாரணமாயிரம்’’ என்கிற நாச்சியார் திருமொழியில் பாடுகின்றாள். நிச்சயதார்த்தம் செய்து கொள்ள கண்ணன் வருகின்ற பொழுது அவனை வர்ணிக்கும் ஆண்டாள், ‘‘கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர் காளை” என்று வர்ணிக்கிறாள். கோளரி என்பது கண்ணபிரான் கல்யாணப் பந்தலுக்கு நடந்து வரும்போது நாட்டுப்புறத்துப் பையல்களைப் போலல்லாமல் தன்பெருமையெல்லாம் தோற்றமிடுக் கோடே நடந்தபடியைச் சொல்லுகிறது என்பது பெரியவர்கள் சொல்லும் விளக்கம். “அப்ரமேயம் ஹிதத்தேஜ,“ என்னும்படியான மிடுக்கு நடையிலே வருகின்றானாம். மாதவன் என்கிற சொல்லுக்கு பரமரஸிகன்என்று பொருள். மா – பிராட்டிக்கு, தவன் – கொழுநன், அல்லவா.திருமண நிகழ்ச்சியில் லாஜஹோமம் ‘செய்வது, அதாவது பொரியை யிட்டு ஆஹுதி செய்தல், வழக்கம். அப்படி தன்னுடைய கையை பிடித்து பொரியிடும் கண்ணனை, “அரிமுகனச்சுதன் கைம்மேலென் கைவைத்து பொரிமுகந் தட்டக்கனாக்கண்டேன் தோழீநான்” என்று காட்டுகிறாள்.அக்னி ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பொரியிடும்போது அக்னி ஜொலிக்க வேண்டும். புகை மட்டும் இருக்கும்பொழுது போடக்கூடாது. இவன் கிருஷ்ணன். இவனைப் போய்  அரிமுகன் அச்சுதன் என்று ஆண்டாள் சொல்லுகின்றாளே  என்ன காரணம்? தன்னுடைய திருவடியைப் பற்றியவர்களை ஒருநாளும் கைவிடாத சிங்க முகம் படைத்தவன். கைமேல் என் கையை வைத்து என்பதற்கு விளக்கம், அடியார்களுக்கு அளிப்பதில் எம்பெருமானுடைய கையை காட்டிலும் பூமித் தாயான ஆண்டாள் கை மேம்பட்டது என்பதால், அவள் கை மேலே இருக்கிறதாம். ஆக, இந்தப் பாசுரத்திலும் அவள் நரசிம்மனைக்  காட்டுகின்றாள். இன்னுமொரு அருமையான பாசுரம். மேகத்தைத் தூது விடுகின்ற மேகவிடுதூது பாசுரம். வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.அற்புதமான பாசுரம். மேகத்திடம் ஆண்டாள் சொல்லுகின்றாள்.மழை நீரைத் தன்னகத்தே கொண்டு வானிலே கிளர்ந்து எழுந்த பெரும் முகில்களே! அன்றொருநாள் பிரகலாதனுக்காக, கூரிய நகத்தால் இரணியனைப் பிளந்தவனிடம் போய்ச் சொல்லுங்கள். அவனால் நான் இழந்த என் உடல் நலத்தைத் திருப்பித் தருமாறு சொல்லுங்களேன்இரணிய வதம் செய்த நரசிம்மனை இங்கே குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.. எம்பெருமான் நரசிங்கமாக வந்தபொழுது, தன் பக்தனின் விரோதியைக் கொல்வதற்காக தன்னுடைய பெருமைக்கு தகாத உருவம் கொண்டு எடுத்தான். ஆனால், எனக்கு அருள்வதற்கு அப்படி தன்னுடைய பெருமை குறையும்படி உருவம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே! எனக்கு வந்த துன்பம் பிரகலாதனுக்கு வந்த துன்பம் போல் எதிரியினால் வந்ததல்ல. அவனாலே வந்தது. ஆகையினால் அவன் உள்ளது உள்ளபடி முகம் காட்டினால் போதுமே. பிரகலாதன் ஆண்பிள்ளை. அவனுக்கு உதவியவன், பெண் பிள்ளையான எனக்கு உதவக் கூடாதா? பிறர் பகையானால் விரைந்து வந்து உதவுகின்ற அவன், தானே எனக்கு பகை என்பதால் உதவாமல் இருக்கிறானா?அவனுடைய பிரிவால், என்னுடைய உடல் மெலிந்து,  கை வளையல்கள்  “சரி வளையல்கள்” ஆகிவிட்டன. அது “சரி செய்த வளையல்கள்” ஆக வேண்டும். அப்பொழுதுதான் என் கைகளில் அடங்கும்.இங்கே திருவேங்கடத்துக்கு ஏன் தூது விடுகின்றாள்? நரசிங்க மூர்த்தியைச் சொல்வதும் ஏன்?திருவேங்கடத்தில் ஸ்ரீநிவாஸ – பத்மாவதி  திருமணத்திற்கு ஏராளமான உணவுகள் தயார் செய்திருந்தனர். திருக்கல்யாண பிரசாதம் முதலில் பெருமாளுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுத் தான் சாப்பிட வேண்டும். பெருமாளின் திருமணமே நடக்கிறது என்றால், யாருக்கு நிவேதனம் செய்வது? அதை வேங்கடவனிடமே கேட்கிறார்கள். அவர் சொல்கின்றார். “அஹோபிலத்தில்  எழுந்தருளியுள்ள நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்யுங்கள்.” அதனால் அவனும் இவனும் ஒன்று என்றாகிறது. வைணவ மரபில் மூன்று பெருமாள் உண்டு. ஒன்று பெருமாள்(இராமன்). இன்னொன்று பெரிய பெருமாள் (திருவரங்கன்). மூன்றாவதாக பெரிய பெரிய பெருமாள் (நரசிம்மர்).பெரியாழ்வார்இரணியன் தான் மரணம் அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்களும் பழுது படக்கூடாது; அதேநேரத்திலே அவனையும் வெல்ல வேண்டும் என்பதற்காக நரசிங்க அவதாரம் எடுத்தார், பெருமாள். பிரகலாதனைப் படாதபாடு படுத்திய இரணியனை அழிப்பதுதான் முக்கியமான நோக்கம் என்று இருந்தால், இருந்த இடத்திலேயே இருந்து செய்திருக்க முடியும். தன் பக்தன் காட்டிய இடத்தில் பக்தனின்  வாக்கு பொய்யாக  ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே அவதாரம் செய்தான் நரசிம்மன். ஏனென்றால், இதற்கு முன்னும் அவர் பலமுறை பிரகலாதன் உயிருக்கு ஆபத்து  வந்தபோது அவனைக்  காப்பாற்றினார். அப்பொழுது அதிர்ஷ்டமாக (மறைந்து) நின்று காப்பாற்றினார். எப்பொழுது திருஷ்ட  பலமாக எதிரில் நின்று காப்பாற்றுகிறார். பெரியாழ்வார் நரசிம்மனைப்பற்றி பாடிய பாசுரங்கள் தன்னுடைய பக்தனைக்  காப்பாற்றுவதற்காக எத்தனை ஆவேசமாக நரசிம்மன் தோன்றி னான் என்பதை உணர்ச்சியோடு ஓவியமாகத் தீட்டும் பாசுரங்கள் ஆகும். அதில் ஒரே ஒரு பாசுரத்தை மட்டும் பார்ப்போம். அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கேவளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க உருவாய்உளந்தொட்டு இரணியன் ஒண் மார்வகலம்பிளந்திட்ட கைகளால் சப்பாணிபேய்முலை உண்டானே! சப்பாணி.அது என்ன அளந்திட்ட தூண்? அந்தத் துணை மட்டும் ஏன் இரணியன் தட்ட வேண்டும்? அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.அளந்திட்ட  என்பது அற்புதமான வார்த்தை. இரணியன் பெரிய உருவம் படைத்தவன். அவனுடைய சபையோ பிரம்மாண்டமானது. அப்படிப்பட்ட பிரம்மாண்டமான சபையிலே அந்த தூண் மட்டும் சிறியதாக இருக்குமா!  தன்னுடைய உருவத்துக்குத் தகுந்த மாதிரி, தானே பார்த்து கட்டிய பெரிய தூண். தன்னுடைய வெற்றிக்கு அடையாளமாக அதை கட்டியிருந்தான். செங்கல் செங்கல்லாகப் பார்த்துக் கட்டிய தூண். அடுத்ததாக “அவன் தட்ட” என்கிற சொல்லாட்சி அற்புதமானது. வேறு சிலர் தட்டினாலோ கையில் மறைத்து அடக்கிக் கொண்டு வந்து சிங்கத்தை வைத்து விட்டால் என்ன செய்வது?அப்படிச்  சொல்ல முடியாதபடிக்கு  வேறு யாரையும் விட்டுத் தட்டாமல், அந்தத் தூணைத்தானே உடைத்தான். அடுத்த சொல் “ஆங்கே”. – அடித்த இடம் தவிர வேறு இடத்திலிருந்து தோன்றினால், சொன்ன இடத்திலிருந்து தோன்றவில்லை என்கின்ற பிரகலாதனின் வார்த்தை பொய்யாகிவிடும் என்பதற்காக அவன் காட்டிய அந்த தூணிலிருந்தே அவன் தோன்றினான். அடுத்து ஏன் அவனுடைய மார்பைத் தொட்டான் என்கிற ஒரு கேள்வி வருகின்றது. இறைவன் இருக்கின்றான் என்பது இரணியனுக்குத் தெரிந்து விட்டது. அதனால் ஒருவேளை, அவன் மனது மாறி பகவானிடம் கொண்டிருந்த விரோதத்தை கைவிட்டிருப்பானோ என்று தன்னுடைய திருக் கையாலே தொட்டுப் பார்த்தான். உருகிய ஒண் மார்பு – இரணியன் பொன் போன்ற உருவம் படைத்தவன். பொன்னால் செய்யப்பட்ட உருவம் போன்றவன். அதனாலேயே அவருக்கு ஹிரண்யன் என்று பெயர். அவன் நரசிம்மருடைய அதிபயங்கரமான தோற்றத்தைக் கண்டவுடன், வெளியில வீரமாக பேசினாலும், பயம் வந்து விட்டது. நெருப்பின் முன்னால் உருகுவது போல, ஒளிச்  சுடராய் விளங்கிய ஜ்வாலா நரசிம்மர் என்கிற அக்னியின் முன்னாலே, அவனுடைய பொன்னான உடம்பு உருகி விட்டது என்று அழகான உரை செய்தார் மணவாளமாமுனிகள்.பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி அடுத்து பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதியிலிருந்து ஒரு பாசுரம். இப்பாசுரத்தில் லட்சுமி நரசிம்மருடைய தோற்றத்தை அற்புதமாக விளக்குகின்றார். லக்ஷ்மி நரசிம்மருடைய திருவடிகளைத் தவிர, மற்றொரு திருவடி நமக்கு ஒருநாளும் தஞ்சமாகாது என்பது இப்பாசுரத்தில் சாரமான கருத்து. இனி பாசுரத்தை பார்ப்போம்.புரியொரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்திஅரியுருவம் ஆளுருவம் ஆகி எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை அல்லால்மற்று எண்ணத்தானாமோ இமை?வலம்புரி சங்கை இடது கையாலே பற்றி யிருக்கிறார். வலக்கையில் பளபளப்பான சக்ராயுதம் ஏந்தியிருக்கிறார். ‘அரியுருவம் ஆளுருவம் ஆகி’ என்றால், சிங்கத்தின் உருவமும் மனிதனின் உருவமும் கொண்டு என்ற பொருள். எரிகின்ற நெருப்பைப் போன்ற உருவம் படைத்த ஹிரண்ய கசிபுவின் மார்பைப் பிளந்தாராம். அப்படிப்பட்ட பெருமானின் திருவடியை இமைப் பொழுதாவது எண்ணத் தோன்றுமோ?  தோன்றாது என்பதே பதில்.நரசிம்மப் பெருமான் சங்கு சக்கரம் பிடித்துக் கொண்டிருந்தது  ஏன் என்கிற கேள்விக்கு பதிலும் இப்பாசுரத்தில் இருக்கிறது.இன்றைக்கு நாம் எங்கு சேவித்தாலும் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள், சங்கு சக்கரத்துடன்தான் காட்சி தருகின்றார்! நரசிம்மர் தோன்றிய பொழுது சங்கு சக்கரத்தோடு தோன்றி, பின் ஆயுதம் தேவையில்லை என்று மறைத்துக் கொண்டு இரணியனை வதம் செய்து இருக்கலாம். ஏனெனில், கண்ணன் அவதரித்த போதே, நான்கு திருத்தோள்களோடுதான் அவதரித்தார். பாகவதத்தில் ‘சங்கு சக்கர கதையுடன் நான்கு தோள்களுடன் அவதரித்தார் என்றும், தேவகியும் வசுதேவரும் சேவித்தார்கள்’ என்றும் வருகிறது. அவர்கள் கேட்டுக் கொண்டதால், அதிகப்படியான இரண்டு தோள்களை மறைத்துக்கொண்டு சாமான்ய உலகக் குழந்தையைப் போல், காட்சி அளித்தாராம். அதுபோல் நரசிம்மரும், சங்கு சக்கரத்தோடு வந்திருக்கலாம். ஆனால் சங்கு சக்கரத்தைப்  பயன்படுத்தாமல்  நகத்தால்  வதம் செய்தது ஏன் என்று கேட்டால், இரணியனின் வர பலம்தான் காரணம்.திருப்பாணாழ்வார்திருப்பாணாழ்வார் திருவரங்க நாதனைத் தவிர, வேறு யாரையும் பாடாதவர். ஆனால், அந்தத்  திருவரங்க நாதனே  அவருக்கு இராமனாகவும், கண்ணனாகவும், நரசிம்மராகவும் காட்சி தருகின்றான். திருவரங்கநாதன் நரசிம்மராகக் காட்சி தந்ததை இப்பாசுரத்தில் பாடுகின்றார். திருவரங்கநாதனிடம் நரசிம்மரின் கண்ணழகைப் பார்க்கின்றார்.பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட,அமரர்க்கு  அரிய ஆதிபிரான், அரங்கத்துஅமலன்முகத்து கரிய ஆகிப் புடைபரந்துமிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்பெரியவாய்கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!அழகான பெரிய கண்கள். இந்தக் கண்கள் யாரையுமே பரவசப்படுத்தும். இது சம்பந்தமாக ஒரு சம்பவம் ராமானுஜர் காலத்தில் நடந்தது.பிள்ளை உறங்காவில்லிதாசர் என்று ஒருவர் இருந்தார். தன் மனைவியான பொன்னாச்சியின் கண்ணழகில் மயங்கி அவளையே சுற்றிச்சுற்றி வந்தார். ஒருமுறை திருவரங்கத்தில் சித்திரை திருவிழா நடந்தது. ஸ்ரீராமானுஜர் காவிரிக் கரையில் தன் சிஷ்யர்களுடன் அமர்ந்திருந்த போது. பிள்ளை உறங்காவில்லி, தனது மனைவிக்கு வெயில் பட்டால் கண்ணழகு குறைந்து விடுமே என்று, குடை பிடித்துக் கொண்டு வந்தார்.அவரைத் திருத்திப்பணி கொள்ள நினைத்து அழைத்தார். அவர் செய்யும் செயலுக்குக் காரணம் கேட்டார்.‘ஸ்வாமி! இவள் என் மனைவி. இவள் கண்ணழகில் நான் மயக்கம் கொண்டு இருக்கிறேன். அது வெயிலில் கெட்டு விடக்   கூடாது என்பதால் குடை பிடிக்கிறேன்.’ என்றார் வில்லிதாசர்.ராமானுஜர் கேட்டார்: ‘ஏனப்பா! இதைவிட அழகான கண்களைக் காண்பித்தால் உன் அடிமைத்தனத்தை விட்டு விடுவாயா?’வில்லிதாசரும் ஒத்துக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருவரங்கம் பெரிய கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு சயனித்திருக்கும் பெரியபெருமாளின் திருக்கண்களை  இப்பாசுரம் பாடி ‘‘கரிய ஆகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப் பெரியவாய் கண்கள்” என்று காட்ட, வில்லிதாசரும், அவரது மனைவி பொன்னாச்சியும் பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டனர்.திருமழிசை ஆழ்வார் இரண்டு பிரபந்தங்களை இயற்றியிருக்கிறார். அந்த இரண்டு பிரபந்தங்களிலும் நரசிம்மரை, பல பாசுரங்களால் போற்றி இருக்கின்றார். இந்தப் பாசுரத்தில், எல்லோரும் அச்சம் படும்படியான தோற்றம் ஆழ்வாருக்கு இனிமை தருகின்ற தோற்றமாக இருக்கிறது. தீவிழிக்கும் கண்களும், குகை போன்ற திறந்த வாயும், எம்பெருமானின் அழகை அல்லவா பிரதிபலிக்கின்றன; இதைக்கண்டு பரம பக்தர்கள் ஆனந்தம் அல்லவா அடைகின்றார்கள் என்று பாடுகின்றார். நரசிம்ம மூர்த்தியின் கோபம் கூட, ஆழ்வாருக்கு ஒரு வித்தியாசமாய் இருக்கிறது. அதை ஆழ்வார் ஆனந்தத்தோடு சொல்லுகின்றார். இனி பாசுரம்…இவையா பிலவாய்  திறந்தெரி  கான்ற இவையா எரி வட்டக் கண்கள் – இவையாஎரி பொங்கிக் காட்டும்  இமையோர்பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு.திருமங்கையாழ்வார்ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கையாழ்வார், பற்பல திருத்தலங்களைப் பாடிப் பரவி இருக்கின்றார். சிங்கவேள் குன்றம், திருக்கடிகை, முதலிய திருத்தலங்கள் இவருடைய திருப்பாடல்களால் 108 திவ்யதேசங்களில் சேரும் சிறப்பைப் பெற்றன. திருவல்லிக்கேணியில் பிரதானமானப் பெருமாளாக பார்த்தசாரதிப் பெருமாள் இருந்தாலும், பார்த்த சாரதிப் பெருமாளுக்குப் பின் பக்கம், தனிக்கொடி மரத்தோடு, தனிச் சந்நதியில் எழுந்தருளி இருக்கும் நரசிங்க பெருமாளை, திருவல்லிக் கேணியில் கண்டேன் என்று பாசுரமிட்ட ஆழ்வார், பிரகலாதனின் பக்தியையும், நரசிம்மரின் தோற்றத்தையும் சொல்லிய பாசுரம்தான் இந்தப் பாசுரம்.பள்ளியில் ஓதி வந்ததன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம் ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை- திருவல்லிக்கேணிக் கண்டேனே ஒருவருக்கு ஆபத்துக் காலத்தில் உதவுகின்ற உறவு, நரசிம்மப் பெருமானே தவிர, வேறு யாரும் அல்ல என்பதை நிரூபிக்கின்ற வரிகள் ஆழ்வாரின் வரிகள். அதற்குத்தான் பரம பாகவதனான பிரகலாதனின் சரித்திரத்தை எடுக்கிறார்.   பிரகலாதன் பள்ளியில் படித்து வருகின்றான். பள்ளியில் எது உண்மையோ அதைத்தான் படிக்க வேண்டும். நித்தியமான இறைவன் பெயரை அவன் அங்கே ஓதினான். வேதம் காட்டுகின்ற மெய்ப்பொருளை அவன் ஞானத்தோடு தெரிந்து கொண்டு ஓதினான். பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதற்காக தவறான ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முதலில் மறுத்தவன் பிரகலாதன். இதைப் பொறுக்க முடியாமல் தான் பெற்ற பிள்ளை என்றும் பார்க்காமல், அவனிடத்திலே கோபம் கொண்டான். தன்னுடைய சுயநலத்திற்காக, தன் பிள்ளையைக் கொன்றுவிட துடிப்பவன் எப்படித்  தந்தையாக முடியும்? பிள்ளையைக் காப்பாற்றுகின்றவன்தானே தந்தை. பிரகலாதன் என்கிற பிள்ளையைக்  காப்பாற்றிய தந்தை நரசிம்மன். அப்படிப்பட்ட தெள்ளிய சிங்கத்தை, தேவாதி தேவனை, நான் திருவல்லிக்கேணியில் கண்டேன் என்று பாடுகின்றார். திருமங்கையாழ்வார். பெரிய திருமொழியிலும், திருமடலிலும் நரசிம்ம பெருமாளைப்பற்றி ஏராளமான பாசுரங்கள் இருக்கின்றன. இது தவிர மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களும் உண்டு. இங்கே தேவையைக் கருதி ஒருசில ஆழ்வார்களின் ஒரு சில பாசுரங்களை மட்டும் அனுபவித்தோம்.   இப்பாசுரங்களை நாம் தினசரி வழிபாட்டில், பொருளோடு ஓத நரசிம்மரின் பூரண அருள் கட்டாயம் கிடைக்கும்.பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி…

The post ஆழ்வார்கள் போற்றிய ஆளரி appeared first on Dinakaran.

Tags : Alari ,Alvars ,Lord ,Thirumasai Alvar ,Narasimha ,Aalwars ,
× RELATED கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?