×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்-சிங்கமுகாசுரன்

சிங்கமுகாசுரன் ! சூரபத்மனின் சகோதரன் ! கம்ப ராமாயணத்தில் வரும் கும்பகர்ணனுக்கு இணையாகச் சிங்கமுகாசுரன் சொல்லப்பட்டாலும், கும்பகர்ணனை விடப் பல மடங்கு உயர்ந்தவன் ‘சிங்கமுகாசுரன்’.  சூரபத்மனின் தம்பிகளில் ஒருவன்; தலைசிறந்த விவேகி; இக்கட்டான நேரத்திலும் தெளிவாகச் சிந்தித்துச் செயலாற்றக்கூடிய அவன்; வேத- உபநிடதங்களில் கரை கண்டவன்; முருகப்பெருமான் பரம்பொருள் என்பதைப் பற்றி, சூரபத்மனிடம் இவன் பேசும் பேச்சு, சிங்கமுகனின் பரம் பொருளுண்மையை அற்புதமாக வெளிப்படுத்தும்; ஆனால் அவை அனைத்தையும் தாண்டி, சூரபத்மன் மீது சிங்கமுகாசுரன்  கொண்டிருந்த ஆழமான – அழுத்தமான சகோதர பாசம், சிங்கமுகாசுரனை வீழ்த்தியது.ஆம்! சிங்கமுகாசுரனின் சகோதர பாசத்தாலேயே, சூரபத்மன் வாழ்வு பெற்றான். நிகழ்ச்சியின் தொடக்கம் அங்கிருந்து தான் துவங்குகிறது.தாயான மாயையின் ஆலோசனைப்படி – உத்தரவுப்படி சூரபத்மனும் அவன் சகோதரர்களும் சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்தார்கள். சிவபெருமானின் வருகை தாமதமானதால், சூரபத்மன் தன் தவத்தை மேலும் கடுமையாக்கினான்; உடலின் சதைப் பகுதிகளை அறுத்து, யாக அக்கினியில் போட்டான்; பலன் இல்லை; கடைசியில் வேறு வழியின்றி சூரபத்மன், தானே யாகத்தீயில் விழுந்து இறந்தான்.அதைக்கண்ட சிங்கமுகாசுரன் பதைத்தான்;தான் செய்து கொண்டிருந்த யாகத்தை அப்படியே மறந்து, கீழே விழுந்து கதறத் தொடங்கினான்.அப்புலம்பலில், சூரபத்மனைப் பற்றி சிங்கமுகாசுரன் என்ன எண்ணம் கொண்டிருந்தான் என்பது வெளிப்படுகிறது.சூரபத்மன் யாகத்தீயில் விழுந்து இறந்தது கண்டு, சிங்கமுகாசுரன் கதறத் தொடங்கினான்; “மாயையின் மகனே! காசிபரின் குமாரனே! அசுரகுலத்திற்கு இறைவனே! நீ எங்கு போய் ஔிந்தாய்? தீய வேள்வியைப் பல நாட்கள் செய்து, பெற்ற பலன் இதுதானா? ‘‘தாயும் நீ! தந்தையும் நீ! எம் உயிரும் நீ என நினைத் திருந்தோம். நீ அதை நினைக்காமல் இறந்து விட்டாயா?வீரனே! உன்னைப்போல் இந்த யாகத்தை, பலநாட்கள் செய்தவர் யார்? வன்கண்ணராகிய சிவபெருமான், உன் மீது அன்பற்றவர் என்பதை அறியாமல், அவரைக்குறித்தா நீ யாகம் செய்தாய்?“உன்னைப்போல் உயிரையும் கொடுத்து யாகம் செய்தவரும் இல்லை; சிவபெருமானைப் போல அருள்செய்யாத பெரியோரும் இல்லை.“நமக்குப் பயந்திருந்த இந்திரன் முதலான தேவர்களும் மனக்கவலை தீர்ந்தது, இன்றைக்குத்தானா? பல நாட்கள் எங்களுடன் இருந்தும் (வாழ்வின்) நுட்பங்களைச் சொல்லாமல் இறந்து விட்டாயே! இவர்கள் நம்முடன் துணையாக வர மாட்டார்கள் என்று நினைத்து விட்டாயா?  “எல்லோரும் பார்க்கும்படியாக, யாகத்தீயில் இருக்கும்வஜ்ஜிர தூணில் விழுந்து ஊடுருவி, இறந்து விட்டாயே!புலம்பும் நாங்கள் இறந்தாவது, உன்னைப் பார்ப்போம்! ‘‘எனத் தாயைப் பிரிந்த கன்றைப்போலக் கதறியழுதான் சிங்கமுகாசுரன். வேள்விச்சாலை புலம்பல் சாலையாக மாறிப்போனது. அசுரர்களுடன் துன்பக்கடலில் ஆழ்ந்த சிங்கமுகாசுரன், தன் அண்ணனான சூரபத்மன் இறக்க, தான்மட்டும் உயிரோடிருப்பது கூடாது என எண்ணி மனம் வருந்தினான்; தன் ஆயிரக்கணக்கான தலைகளையும் வாளால் அறுத்து, ஒவ்வொன்றாகச் சூரபத்மன் வீழ்ந்திறந்த யாகத்தீயில் இட்டான்.அறுக்க அறுக்க,சிங்கமுகனின் தலைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேயிருந்தன. அதைக்கண்ட மற்ற அசுரர்களும் அதைப்‌ போலவே செய்தார்கள்;  சில அசுரர்கள் யாகத்தீயில் விழுந்து இறந்தார்கள்.சிங்கமுகாசுரன் தானும் யாகத்தீயில் விழுந்து இறக்க எண்ணி, ஆகாயத்தில் எழுந்து போகத் தீர்மானித்தான்.அதையறிந்த சிவபெருமான் சிங்கமுகனின் சகோதர பாசத்தைப் பாராட்டி, அவனுக்கு அருள்புரியத் தீர்மானித்தார்.  ஒரு முதியவர் வடிவம்தாங்கி, கையில் ஓர் ஊன்று கோலுடன், புலம்பிக் கொண்டிருக்கும் சிங்கமுகாசுரன் முதலியோர் முன் நின்றார்; சிங்கமுகாசுரனை நோக்கி, “இங்கு நீங்கள் எல்லோரும் ஏன் புலம்பிக் கொண்டிருக்கின்றீர்கள்? உங்கள் வரலாற்றைக் கூறுங்கள்!” என்றார்.  இக்கட்டான இப்படிப்பட்ட நேரத்தில்,யாராவது ஒருவர் நல்ல தோற்றத்தோடு வந்து, ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினால் போதும்; நம்மை அறியாமலேயே எல்லாவற்றையும் கொட்டி விடுவோம். இதற்கு சிங்கமுகாசுரன் மட்டும் விதிவிலக்கா என்ன? முதியவர் வடிவில் வந்து சிவபெருமான், ஆறுதலாக சில வார்த்தைகள் பேசியவுடன், சிங்கமுகாசுரன் உள்ளதை எல்லாம் சொல்லத் தொடங்கி விட்டான்; முதியவரை வணங்கி, “சுவாமி! எங்கள் தந்தை காசிப முனிவர்; தாய் மாயை; அவர்களுக்கு நாங்கள் மூன்று பிள்ளைகள். எங்கள் உடன் பிறந்தவர்கள் இன்னும் ஏராளமாக இருக்கிறார்கள். “நாங்கள் மூவரும் எங்கள் தாய் மாயையின் தூண்டுதலால், சிவபெருமானை நோக்கித் தவம் செய்தோம். பல்லாண்டுகளாகத் தவம் செய்தும் சிவபெருமான் எங்களுக்கு அருள் புரியவில்லை.“எங்கள் மூத்த சகோதரர் சூரபத்மன், வேள்வித்தீயில் விழுந்து இறந்தார். அது பொறுக்க மாட்டாமல், நாங்களும் எங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ள நினைத்தோம். உங்களைப் பார்த்தவுடன் சற்றுநேரம் தாமதமாகி விட்டது” எனத் தங்கள் வரலாற்றைச் சொல்லி முடித்தான் சிங்கமுகாசுரன். அதைக்கேட்ட முதியவர், சிங்கமுகனை நோக்கி, “நீங்களும் உங்கள் மூத்த சகோதரனைப்போல, இறக்க வேண்டாம்; யாக அக்கினியில் இருந்து, அவனை இப்போதே எழுப்பித் தருகிறோம் உயிருடன். உங்கள் சோகத்தை விடுங்கள்!” என்று அருள் புரிந்தார்.முதியவர் வடிவில் வந்த சிவபெருமான் சொன்னதோடு நிற்காமல், தேவகங்கையை வரவழைத்து, அதனை யாக நடுக்குண்டத்தில் புகச்செய்தார். உடனே சூரபத்மன் உயிர் பெற்று, ஆரவாரத்துடன் எழுந்தான். சிங்கமுகன் உட்பட அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். (இதன்பின் சிவபெருமானிடம் சூரபத்மன் வரம் பெற்றது தனிக்கதை) சகோதரனுக்காக இவ்வாறு உயிரையே கொடுத்து, மறுபடியும் சகோதரனை உயிருடன் எழுப்பச்செய்த சிங்கமுகன் அதே சகோதரன் – சூரபத்மன் முறைதவறிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, அவனை இடித்து எச்சரிக்கவும் தவறவில்லை.முதலில் சகோதரனுக்காக உயிர் துறக்கத் தீர்மானித்த போது, சிங்கமுகனின் சகோதர பாசம் வெளிப்பட்டது. ஆனால் சகோதரனுக்கு அறிவுரை சொல்லும் இப்போது, அறவுரையும் முருகப்பெருமானின் பிரம்மத்துவமும் வெளிப்பட்டு, சிங்கமுகனின் தெளிந்த ஞானத்தைப் பறை சாற்றுகிறது.வரங்கள் பல பெற்ற சூரபத்மன், நல்லவர்கள் அனைவரையும் அடக்கித் தனக்குக் கீழ்ப்படச் செய்து, முறையற்ற செயல்களையெல்லாம் வரம்பு மீறிச் செய்தான்.அவனை அழிப்பதற்காக அவதரித்த முருகப்பெருமான், அவனுக்குத் தூது அனுப்பினார். வீரபாகுதேவர் தூதுவராகப் போய், எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ஆனால் அவர் கூறிய எதையுமே காதில் போட்டுக்கொள்ளாத சூரபத்மன், வீரபாகுதேவரை அவமானப் படுத்தினான். வீரபாகுதேவர் திரும்பினார்.அப்போது தன் சபையைக் கூட்டிய சூரபத்மன், மந்திரிகள்- சேனாதிபதிகள்- பிள்ளைகள் எனப் பலரோடும் ஆலோசனை செய்தான். அச்சபையில் சிங்கமுகனும் இடம் பெற்றிருந்தான்.  சபையில் பேசிய அனைவருமே, சூரபத்மனை அனுசரித்தே பேசினார்கள். அவரவர் பேச்சில், அவரவர் வீரமும் தற்பெருமையுமே எதிரொலித்து, “என்னைப் போருக்கு அனுப்புங்கள்! அனைவரையும் அழித்துத் திரும்புவேன்” என்றே முடிந்தது. அவர்கள் அனைவரும் பேசி முடித்த அந்த வேளையில் தான், சிங்கமுகன் பேசத் தொடங்கினான்; பேச்சின் துவக்கத்திலேயே, அவ்வளவு நேரம் பேசியவர்களின் பேச்சுக்களைக் கண்டிப்பது வெளிப்படுகிறது. சிங்கமுகன் சூரபத்மனை வணங்கிப் பேசத் தொடங்கினான்; “அண்ணா!அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், உங்கள் பிள்ளைகள் ஆகியோர் தங்கள்தங்களின் வலிமையைப் பற்றிப் பேசினார்களே தவிர, யாருமே உனக்கு ஏற்ற அறிவுரை சொல்லவில்லை.உன் நல்வாழ்வுக்காக ,நான் கூறும் மொழிகளைக் கருத்துடன் கேள்!“செல்வ வசதி பெற்ற காலத்தில் உண்டாகும் கோபம், நன்கு படித்தவர் அறிவையும் மீறிச் செயல்படும். அந்தக் கோபம் முற்றுவதற்கு முன்னால், அன்புடையோர் உண்மைகளை எடுத்துச் சொல்லித் தெளிவுபடுத்த வேண்டும். “அரசர் காதில் தீக்கோல் சொருகியதைப்போல, நன்னெறியை அளிக்கக்கூடிய நடுநிலைமையாகிய நீதியைச்‌ சொல்பவர்களே, அமைச்சரும் துணைவரும் மேலோரும் ஆவார்கள். அதை விடுத்து அரசர் விருப்பத்திற்கு ஏற்றபடி சொல்பவர்கள், பகைவர்களே ஆவார்கள்.பெற்றிடு திருவினில் பிறந்த வெஞ்சினம்கற்றவர் உணர்வையும் கடக்கும் அன்னதுமுற்றுறு கின்றதன் முன்னம் அன்பினோர்உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால்மன்னவர் செவியழல் மடுத்த தாமெனநன்னெறி தருவதோர் நடுவு நீதியைச்சொன்னவர் அமைச்சர்கள் துணைவர் மேலையோர்ஒன்னலர் விழைந்தவாறு உரைக்கின் றார்களே(கந்த புராணம்). “செய்யத் தொடங்கிய செயல், அதனால் வரும் பலன், அதற்கு வரும் இடையூறுகள் ஆகியவற்றைச் சீர்தூக்கித் தெளிந்தபின்; எந்தச் செயல்களை செய்தாலும் குற்றம் உண்டாகாது.“மயக்க உணர்வால், மீன்கள் உணவை விரும்பித் தூண்டில் முள்ளை விழுங்கி, அதில் அகப்பட்டு வருந்துவதைப் போல; நீ தேவர்களுக்குத் தீமை செய்வதால் வரும் துன்பத்தை ஆராயாமல், வருத்தப்படுகிறேன்.“இந்திரன் முதலான தேவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியவர்கள், தங்கள் செல்வங்களோடு அழிந்தார்களே தவிர, பிழைத்ததாக வரலாறு இல்லை. மீன்களைப் பிடித்து வருமாறு தேவர்களை அனுப்பினாய்; அது உனக்கு நன்மை தருமா?  “விண்ணுலகை அழித்தாய்; இந்திரனுக்குத் துன்பம் செய்தாய்; தேவர்களைச் சிறையில் அடைத்தாய்; சிறையில் இட்ட தேவர்களை இன்னும் சிறையிலிருந்து விடுதலை செய்யவில்லை.“இரக்கம் என்பதை,அடியோடு விட்டுவிட்டாய். அதனால் அல்லவா, ஆறுமுகக்கடவுள் உன்னோடு போர்செய்ய வந்திருக்கிறார்?“உனக்கு வரங்களை அளித்த சிவபெருமான், ‘நீங்கள் பெரும் செல்வங்களுடன், நூற்றெட்டு யுகம் இருங்கள்!’’ என அருள் புரிந்தார். அவர் குறிப்பிட்ட அந்தக்காலமும் நெருங்கி விட்டது. அதை நீ உணரவில்லை. ப்ச்! விதியின் வலிமையை யாரால் மீற முடியும்?“எவ்வளவு பெரிய வலிமை உடையவரானாலும், உங்களை வெல்ல முடியாது. நமது சக்தியே உங்களை வெல்லும்’ எனச் சிவபெருமான் கூறியருளினார். அதனால் தான், ஆறுமுகக்கடவுள் செலுத்திய வேலாயுதம் தாரகனை அழித்தது.“பயனுள்ள காரியங்களைச் செய்து,அதனால் துன்பத்தை அடைவது, மேலோர் செயலா? குரவர்(குருநாதர்)களையும் சிறுவர்களையும் பெண்களையும் தவசீலர்களையும் வேத வல்லுனர்களையும் மற்றும் மேலோர்களையும் தண்டித்தவர், நரகம் அடைந்து வருந்துவார்கள்.குரவரைச் சிறு பாலரை மாதரைக் குறைதீர்விரத நற்றொழில் பூண்டுளோர் தம்மை மேலவரைஅருமறைத் தொழிலாளரை ஒறுத்தனர் அன்றோநிரயமுற்றவும் சென்று சென்றலமரும் நெறியோர்(கந்த புராணம்)“என் அண்ணாவே! தேவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விட்டால், குமரக்கடவுள் இங்கு வரமாட்டார். நமது குற்றத்தையும் பொருட்படுத்தாமல், முருகப்பெருமான் நாளைக்கே கயிலைக்குத் திரும்புவார்.“தேவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யா விட்டால், முப்புரம் எரித்த சிவபெருமானின் குமாரனாகிய சண்முகக்கடவுள் வந்து, நம் குலமெல்லாம் தொலையும் படி அழிப்பார்; உன்னையும் கொல்வார். இது உறுதி” என்று அறிவுரை கூறினான் சிங்கமுகன். ஆனால் இவ்வளவு நேரம் சிங்கமுகன் சொன்ன வார்த்தைகள் எதையுமே ஏற்கவில்லை சூரபத்மன்; மாறாக, கைகளைத்தட்டிச் சிரித்தான்; உதட்டைக் கடித்தான்; கோபம் பொங்க எழுந்தான்; சிங்கமுகன் கூறிய ஒவ்வொன்றையும் மறுத்துப் பேசினான். முடிவில் சூரபத்மன், முருகப்பெருமானையும் இகழ்ந்து பேசினான்.“தனியாக வந்த ஒரு சிறுவனா (முருகனா) என்னைக்கொல்ல முடியும்? அவன் என்னை வெல்லும் சக்தி படைத்தவனா என்ன? “ஒரு பாலகன் (சிறுவன்) என்னை வெல்வான் என்று நீ சொல்வது, எப்படி இருக்கிறது என்றால்; கண் இல்லாதவன் கதிரவனை ஒரு பழம் என விரும்பிக்காட்ட, கையில்லாதவன் போய், அதைப்பேராசையால் பிடிப்பதைப் போல் இருக்கிறது” எனக் கேலி பேசினான். எண்ணிலாததோர் பாலகன் எனை வெல்வன் என்கை விண்ணில் ஆதவன் தன்னை ஓர் கனியென வெஃகிக் கண் இலாதவன் காட்டிடக் கையிலாதவன் போய்  உண்ணிலாத பேராசையால் பற்றுமாறு ஒக்கும்(கந்த புராணம்).பலர் கூடியிருந்த சபையில், சூரபத்மன் தன்னை அவமானப் படுத்தியதை எண்ணி, சிங்கமுகன் கலங்க வில்லை; மாறாக, மேலும் பொறுமையுடன் அண்ணனுக்கு அறவுரை கூறத் தொடங்கினான்.   ஏற்கனவே அறிவுரை சொல்லி,அது பலனளிக்காத நிலையில் இப்போது அறவுரை கூறத் தொடங்கினான் சிங்க முகன்; சூரபத்மன் முருகப்பெருமானை இகழ்ந்து பேசிய நிலையில், சிங்கமுகனின் பேச்சில் அறவுரை வெளியாகிறது; அதுவும் முருகப்பெருமானின் பிரம்மதத்துவம் முழுமையாக வெளியாகிறது.மறுபடியும் சூரபத்மனை வணங்கிய அறிஞரில் அறிஞனான சிங்கமுகன்,”அண்ணா! நான் இன்னும் சொல்கிறேன். கோபப்படாமல் கேள்!தமக்கு ஒப்பிலாத பரம்பொருள் பிறை நிலவு முடித்த சடை, பவளம் போன்ற திருமேனி, மூன்று கண்கள், நான்கு தோள்கள், நீலவணாணக் கழுத்து ஆகியவற்றுடன் நின்றது எதற்காக?  “படைத்தல் முதலான ஐந்து தொழில்களைச் செய்து, ஆன்மாக்களிடம் பதிந்திருக்கும் பாசமனைத்தையும் நீக்கி,வீடுபேற்றை அருளும்படித் திருவுள்ளத்தில் கொண்ட பேரருளினாலே தான்!“அப்படிப்பட்ட சிவபெருமானை நோக்கி, நீ அளவில்லாத காலம் பெருந்தவத்தைச் செய்தாய். அவர் அதனைக் கண்டு வெளிப்பட்டு, உனக்கு ஒப்பில்லாத வரங்களைத் தந்து, அதற்கு முடிவையும் சொல்லி வைத்தார். நீ அதை அறியவில்லை போலிருக்கிறது!“யாராலும் பெறமுடியாத செல்வங்களையெல்லாம் பெற்ற நீ, அறத்தை விரும்பி – நீதிவழியில் நிற்க வில்லை. உன் வலிமையால், கோபித்துத் தேவர்களைச் சிறையில் வைத்தாய்; அதனால் சிவபெருமான் உன்னை அழிக்க நினைத்தார்.  “வரம் கொடுத்த நாமே அழிப்பது முறையல்ல என்று எண்ணி, தன் திருவுருவமாகும் ஒரு திருக்குமாரனைக் கொண்டு,உன்னைக்கொல்ல நினைத்தார்; சிவந்ததிருமேனி,ஆறு திருமுகங்கள், பன்னிரண்டு திருத்தோள்கள் கொண்ட ஒரு திருக்குமாரனைத் தம் நெற்றிக் கண்ணிலிருந்தும் உண்டாக்கினார்.“உலகில் பிறந்து உழலும் உயிர்களைப்போல, அந்த முருகப்பெருமானை நினைக்காதே நீ ! அவர் பரஞ்சோதியாகிய சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்தவர். அவர்‌ உங்களாலும் அறியப்படாத பரம்பொருள். “சீலம் இல்லாதவர்களால் அறிய முடியாத அப்பரம் பொருளைப் பாலகன் என்று இகழ்ந்தாய். ஒரு சிறிய ஆலம் விதையில் அகன்றதோர் – பெரிய மரம் அடங்கியிருந்து தோன்றுவதைப் போல, எல்லாப் பொருட்களும் அவரிடம் இருந்து தோன்றும்.  “அந்த முருகப்பெருமான் அருவம் (உருவமில்லா நிலை) ஆகுவார்; உருவமும் ஆகுவார்; அருவமும் உருவமும் இல்லாத நிலையும் ஆகுவார்.அவருடைய திருவிளையாடலை யாரால் சொல்ல முடியும்?  “அவர் வேதங்களின் ஞானத்திற்கும் உபநிடதங்களின் ஞானத்திற்கும் காண இயலாதவர்; புதியவர்க்குப் புதியவர்; மூத்தவர்க்கெல்லாம் மூத்தவர்; முடிவிற்கு முடிவாய்,  ஆதிக்கு ஆதியாய், உயிர்க்கு உயிராய் நின்ற நிர்மலர்.சீலம் இல்லவர்க்கு உணர ஒண்ணாத சிற்பரனைப்பாலன் என்றனை அவனிடத்தில் பல பொருளும்மேலை நாள் வந்து தோன்றிய சிறியதோர் வித்தின்ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித்தது போல்அருவும் ஆகுவன் உருவும் ஆகுவன் அருவும்உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்கருமம் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன் கண்டாய்பரமன் ஆடலை யாவரே பகர்ந்திடற் பாலார் வேதக் காட்சிக்கும் உபநிடதத்து உச்சியில் விரிந்தபோதக் காட்சிக்கும் காணலன் புதியரில் புதியன்மூதக்கார்க்கும் மூதக்கவன் முடிவிற்கு முடிவாய்ஆதிக்கு ஆதியாய் உயிர்க்கு உயிராய் நின்ற அமலன்(கந்த புராணம்).“அண்ணா! ஞானமே வடிவான முருகப்பெருமானின் இயல்பை, நானும் நீயுமாகச் சொல்லிக் கொள்வோம் என் றால், அது சுலபத்தில் நடக்கக்கூடியதா என்ன? மவுனத்தில் கரைகண்ட முனிவர்களால் கூட, முனிவரைக் காண முடியவில்லை.  ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை யானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ மோனம் தீர்கலா முனிவரும் தேற்றிலர் முழுவதும் தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும் தலைமை(கந்த புராணம்) “அப்படிப்பட்ட முருகனைப் பாலகன் என இகழ்ச்சியாகப் பேசுகிறாய்! கணக்கற்ற கோடி அண்டங்களை ஓர் நொடிப் பொழுதில் ஆக்கவும் அழிக்கவும் சக்திபடைத்த முழுமுதல் கடவுளாகிய சிவபெருமானே உன்னுடன் போர் செய்ய விரும்பி, முருகனாகச் செந்தூரில் வந்திருக்கிறார்.“எல்லா வளங்களையும் பெற்ற நீயும் உன் கிளைகளும் அழியாதிருக்க இவற்றைக் கூறினேன். இப்போதே தேவர்களைச் சிறையிலிருந்து நீக்கி விடு!” என்று நீள நெடுகக் கூறி முடித்தான் சிங்கமுகன்.அவை எதையுமே ஏற்காத சூரபத்மன், சிங்கமுகனை மேலும் இழிவாகப் பேசி, அவமானப் படுத்தினான்.போர் மூண்டது. வேறுவழியற்ற நிலையில், சிங்கமுகன்‌ போர்க்களம் சென்று முருகப்பெருமானால் முடிவு பெற்றான்.  தெய்வீகத்தின் நிலையை முழுதுமாக-தெளிவாக அறிந்து உணர்ந்திருந்தும், தீயவைகளுக்குத் துணை நின்று, தன்னைத்தானே அழித்துக்கொண்ட ஓர் உத்தமமான கதாபாத்திரம் – சிங்கமுகன்.(தொடரும்)பி.என்.பரசுராமன் …

The post காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்-சிங்கமுகாசுரன் appeared first on Dinakaran.

Tags : Singamukasura ,Soorapadman ,Singhamukasuran ,Kumbhakarna ,Kamba Ramayana ,
× RELATED சூரசம்ஹாரத்தின் புராணக்கதை உங்களுக்கு தெரியுமா?