×

நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு..!

கந்தசஷ்டி விரதம் –  சூரசம்ஹாரம் – 9-11-2021‘கடற்கரையாண்டி’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்குத்தான் இப்படி ஒரு செல்லப்பெயர். கடற்கரையோரம் நின்று அருள்பாலிப்பதால் இப்படி அழைக்கிறார்கள் பக்தர்கள். மூலவர் பெயர் பாலசுப்பிரமணியர். முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இது இரண்டாம்படை வீடு. பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது, இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனினும் தற்போது நாம் காணும் கோயிலை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர் சுவாமிகள். காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுகசுவாமிகள் என்ற மூவர்தான் அவர்கள். இவர்கள் மூவரும் தத்தமது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டிகாணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது.   இந்தத் திருக்கோயிலில் வள்ளி, தெய்வானை, மூலவர் கோயில்களுக்கு போத்திகளும், ஆறுமுகப்பெருமான், நடராஜர், சனீஸ்வரர் கோயில்களுக்கு சிவாச்சாரியார்களும் பூஜை செய்கின்றனர். வெங்கடாசலப்பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். கோயில் திருப்பணி செய்த மூவர் சமாதிகளில் ஓதுவார்கள் பூஜை செய்கின்றனர். மூலவரின் இடது பாதத்தின் அருகே தங்கச் சீபலி வைக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தருகே வெள்ளியாலான சீபலி உள்ளது. இந்த சீபலி மூலவரைப் போலவே உள்ள ஒரு சிறு விக்ரகம். தினமும் கோயில் பிராகாரங்களில் வலம் வந்து எல்லா சந்நதிகளுக்கும் சென்று அந்தந்த கடவுளர்களுக்கு முறையாக நிவேதனம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த சீபலிக்கு உண்டாம். தன் கோயிலில் தன்னுடனேயே உறையும் பிற கடவுளர்களுக்கே படியளக்கும் இந்த பாலகுமாரன், தன்னை நாடும் பக்தர்களை எவ்வாறெல்லாம் பரிவுடன் பார்த்துக்கொள்வான் என்ற நிறைவு இந்தச் சீபலியைக் கண்டவுடனேயே தோன்றுகிறது. கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் இவற்றை கோயிலுக்கு வழங்கியுள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகளின் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி கோயில் திருப்பணியை மேற்கொள்ளும்படி ஆணையிட்டாராம். அதன்படி அவர் இங்கு தங்கி கோபுரம் கட்டி முடித்திருக்கிறார். அவ்வாறு கோபுரம் கட்டியபோது அந்தப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கூலி கொடுக்க அவரிடம் பணமில்லை. மனதார முருகனை வேண்டிக்கொண்டு, அவர் பிரசாதமான விபூதியை இலையில் மடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அந்த இலையை தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டி சென்றதும் திறந்து பார்க்குமாறு கூறினார். பணியாளர்களும் அப்படியே பார்த்தபோது தங்களுக்கான ஊதியம் அந்த இலை விபூதிக்குள் இருந்தது கண்டு அதிசயத்தனர். அதாவது அவரவர் செய்த வேலைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஊதியம் அமைந்திருந்தது!  ஆனால், கோபுரத்தின் ஆறாம் நிலை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டபோது இந்த அற்புதம் நின்றுவிட்டது. சுவாமிகள் மிகவும் வருந்தினார். ஆனால் அன்றிரவே முருகன் அவரது கனவில் தோன்றி காயல்பட்டினத்தில் வசிக்கும் சீதக்காதி என்னும் வள்ளலிடம் சென்று பொருள் பெற்று வருமாறு பணித்தார். ஆனால் வள்ளலோ, சுவாமிகள் கொடை கேட்டவுடனேயே ஒரு மூட்டை உப்பை எடுத்துக் கொடுத்தார். சுவாமிகளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பணத்தை எதிர்பார்த்தால் உப்பு கிடைக்கிறதே என்று வருந்தினார். ஆனாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் உப்பு மூட்டையை வாங்கிச் சென்றார். திருச்செந்தூர் வந்து சுவாமிகள் மூட்டையை திறந்து பார்த்தால் அதற்குள் தங்கக் காசுகள் இருந்ததைக் கண்டு வியந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைக் கொண்டு கோபுரத்தைக் கட்டி முடித்தார் சுவாமிகள்.சூரபத்மன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று தனக்கு சர்வ வல்லமை வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டான். சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து தமது சக்தியன்று வேறு எந்த சக்தியாலும் அவனுக்கு மரணம் கிடையாது என்று வரம் அருளினார். அதன் பிறகு சூரபத்மனின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போனது. அவனால் துன்பத்திற்கு ஆளான தேவர்கள் பலரும் சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்கவே சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை உருவாக்கினார். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. பார்வதிதேவி அந்த குழந்தைகளை எடுத்து ஒரே உருவமாக்கினார்.  ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்த 6ம் நாள் முருகன் சூரனை வென்றான். இதுவே கந்த சஷ்டி என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மனின் தளபதிகளான யானைமுகன், சிங்கமுகன், சூரபன்மன் ஆகிய மூன்று அரக்கர்களை ஒழித்தான். இக்காலத்திலும் இம்மூன்று அரக்கர்களும் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய குணங்களாக மக்களிடம் குடியிருக்கிறார்கள். இவர்களை ஒழிக்கவும் திருச்செந்தூரான் அருள்பாலிக்கிறான். இந்த மூன்று துர்குணங்களையும் விட்டொழித்தால் சூரனைப்போல இறுதியில் இறைவனை அடைய முடியும். முருகனுக்கு அருகிலேயே அவனுக்கு மயிலாகவும், சேவலாகவும் உருமாறி சூரன் பணிவிடை செய்வது போன்ற பெரும் பேற்றினை அடையமுடியும். இந்த சூரசம்ஹார சம்பவத்தைச் சித்திரிக்கும் வைபவம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடக்கும். தீராத நோய் நீங்க வேண்டும் என்றும் பிள்ளைப்பேறு வேண்டியும், பல பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர். திருச்செந்தூரில் வியப்புக்குரிய ஓர் அம்சம், நாழிக்கிணறு. கடற்கரையை ஒட்டி வெகு அருகில் அமைந்துள்ள சிறிய கிணறு இது. இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் உப்பு கரிப்பதில்லை என்பதும், இறைக்க இறைக்க வற்றாமல் நீர் அதே அளவில் சுரப்பதும் விடை காண முடியாத அதிசயமாகும். இது இயற்கை நீரூற்று. இதன் அருகிலேயே உள்ள நீள்சதுரக் கிணற்றின் நீர் கந்தக நெடியுடன், கலங்கிக் காணப்படுவதிலிருந்து நாழிக்கிணறின் தெய்வாம்சத்தைப் புரிந்துகொள்ளலாம். கடலில் நீராடிய பக்தர்கள் இந்த நாழிக்கிணற்றில் குளித்து செல்வது வழக்கம். இந்த கிணற்றில் எவ்வளவு நீர் எடுத்தாலும் அது உடனடியாக ஊறிவிடுகிறது. சூரபத்மனை போரில் வீழ்த்திய முருகன் தம் படையினரின் தாகம் தணிக்க கடற்கரையில் ஓரிடத்தில் தன் வேலால் குத்தி நீர் வரச்செய்தார். முருகனே உருவாக்கிய பெருமையுடையது இந்த நாழிக்கிணறு என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. கோயிலின் வடபுறத்தில் வள்ளி குகை அமைந்துள்ளது. இங்கு திரிசுதந்திரர்கள் பூஜை செய்கின்றனர். குகைக்குள் உள்ளே நுழையும் வாயில் 4 அடி உயரமே உள்ளது. குனிந்துதான் செல்லவேண்டும். குகைக்குள் வள்ளியம்மன் சிலை சுவரையொட்டி அமைந்துள்ளது. முருகன் வள்ளியை சிறையெடுக்க வந்தபோது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினான். முருகன், வள்ளியை இக்குகையில் ஒளிந்திருக்கச் சொல்லி பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு போருக்குச் சென்றதாக புராணம் சொல்கிறது. தெய்வானையை திருமணம் முடித்து வருவதைக்கண்ட முதல் மனைவியான வள்ளி, முருகன் மீது கோபம் கொண்டு இக்குகையில் வந்து ஒளிந்து கொண்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. இக்கோவிலில் இலை விபூதி பிரசாதம் வேறெங்கும் கிடைக்காதது. பன்னீர் மர இலை களில் பன்னிரண்டு நரம்புகளுள்ள இலைகளாகத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து கட்டுக் கட்டாக வைத்திருப்பர். நோயால் பாதிக்கப்பட்ட முனிவர் விசுவாமித்திரருக்கு அந்நோய் நீங்க ஆறுமுகப்பெருமான் தம் பன்னிரண்டு கைகளாலும் இலை விபூதியை வழங்கி அவரை முற்றிலும் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் இன்றும் நடைமுறையாகி இருக்கிறது. எந்த நோயினால் பீடிக்கப்பட்டாலும், இந்த இலை விபூதி பிரசாதம் நலமளிக்கும் என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்புகிறார்கள்.தொகுப்பு: பிரபு சங்கர்

The post நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு..! appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Murugapperuman ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...