×

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

1. விரதங்களில் சிறந்ததுமனித ஜென்மம் எடுத்தவர்கள் தமது வாழ்க்கையில் உயர்வதற்கு ஆன்மிகம் சில வழிகளைக்  காட்டுகிறது. 1. இறைவனை ஆராதனை செய்வது, 2. சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரதங்களைக்  கடைப்பிடிப்பது,3. இறைவனுடைய பக்தர்களை ஆராதனை செய்வது. இதில் இரண்டாவதாகச்  சொல்லப்பட்ட விரதங்களில் ஏகாதசி விரதம் தலை யாய விரதமாகச் சொல்லப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தை எட்டு வயது முதல் 80 வயது உள்ளவர்கள் அனுஷ்டிக்கலாம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.  2. வைகுண்ட ஏகாதசி என்று ஏன் பெயர்?மார்கழி மாத ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த வரலாறு ஸ்ரீ பிரஸன்ன சம்ஹிதையில் தெரிவிக்கப்படுகின்றது. நாராயணன் பிரளயத்துக்குப் பின்னர், ஆலிலையின் மேல் பள்ளி கொண்டு, தம்முடைய நாபிக் கமலத்தில் இருந்து, உலகத்தைப் படைப்பதற்காக நான்முகக் கடவுளை படைத்தார். ஸ்ரீ மன் நாராயணனின் பிள்ளை பிரம்மா என்று புராணங்கள் கூறுகின்றன. பிரம்மாவிடம் வேதத்தைக் கொடுத்து உலகத்தைப் படைக்கச்  சொன்னார். வேதத்தினை ஆதாரமாகக் கொண்டு நான்முகன் உலகங்களையும், உலகத்தின் உயிர்களையும் படைக்கத்  தொடங்கினார். ஒரு கட்டத்தில் தன்னால் மட்டுமே இந்த உலகத்தை படைக்க முடியும் என்கின்ற ஒரு ஆணவம் நான்முகனுக்கு வந்துவிட்டது.ஒருவருக்கு வந்த ஆணவம், சரியான நேரத்தில் போகாவிட்டால், ஆணவமே அவரை அழித்து விடும் என்பதை உணர்ந்த ஸ்ரீ மன் நாராயணன், நான்முகனின் ஆணவத்தை அழிக்க திருவுள்ளம் கொண்டார். மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்களை அனுப்பி வைத்தார். இருவரும் பிரம்மாவின் கையிலிருந்த வேதத்தை அபகரித்துக் கொண்டு மறைந்து விட்டனர். கைப்பொருளை இழந்த நான்முகன், படைக்கும் வழி அறியாது தவித்தார். திகைத்தார். தன் தவறை உணர்ந்தார். திருமாலிடம் சென்று முறையிட்டார். தனக்கு வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டி நின்றார். 3. சொர்க்க வாசல்(பரமபத வாசல்) திறப்புமார்கழி மாத ஏகாதசி அன்று வைகுண்டத்தின் வடக்கு வாசல் கதவைத் திறந்து மது கைடபர்களை உள்ளே அனுமதித்தார். அதனால் மது கைடபர்களுக்கு வைகுண்டம் தந்த  ஏகாதசி என்பதால் “வைகுண்ட  ஏகாதசி” என்று சொல்கின்றார்கள். அன்று மது கைடபர்கள், “இந்த நல்ல நாளிலே  யாரெல்லாம் விரதம் இருப்பார்களோ, அவர்களுக்கும் இந்த வைகுண்டம்  அளிக்க வேண்டும்” என்று வேண்ட, திருமால் அதற்கு இசைந்தார்.எனவேதான், மார்கழி மாத ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் உள்ள வடக்கு வாசல் கதவை, வைகுண்ட வாசலாகக்  கருதி, மக்கள் பயபக்தியோடு, அந்த வழியாகச் சென்று பெருமாளை வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்கின்றனர். ஒருவகையில் இது நிஜமான வைகுண்டத்தை அடைவதற்கு முன் நடக்கும் ஒத்திகையைக் காட்ட  வந்த விழா என்றும்  எடுத்துக்கொள்ளலாம்.4. திருமங்கை ஆழ்வார்திருமங்கை ஆழ்வார் காலத்தில் வேதங் களையும் ஸ்தோத்ரங்களையும் தவிர, வேறு எதுவும் பகவான் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. திருமங்கை யாழ்வார்தான்  இந்த உற்சவத்தின் அமைப்பை முதன்முதலில் மாற்றியவர். திருமங்கை ஆழ்வார், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நாளில் அவதாரம் செய்தவர் திருமங்கையாழ்வார். வைணவ ஆழ்வார்கள் பரம்பரை நம்மாழ்வாரிடம் தொடங்கி, திருமங்கையாழ்வாரிடம் முடியும். நம்மாழ்வாரை “பராங்குசன்”  என்றும், திருமங்கை ஆழ்வாரை “பரகாலன்”  என்றும் சொல்வார்கள். வைணவ பரம்பரையைச் சொல்லுகின்ற பொழுது  ‘‘பராங்குச பரகால எதிவராதிகள்” என்று சொல்லும் வழக்கம் உண்டு.5. திருநெடுந்தாண்டகம் தன்னுடைய ஜென்ம நட்சத்திரமான கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், திருவரங்கன் முன்னால், தன்னுடைய ஆறாவது பிரபந்தமான திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் இசைத்தார் திருமங்கையாழ்வார். அன்றைய இசையும் அபிநயமும் மிக அற்புதமாக இருந்தது. பெருமாளும் மிகவும் உள்ளமுகந்தார். சாமவேதம் கேட்டுப் பழகிய எம்பெருமானின் திருச்செவிகளுக்கு, உணர்ச்சிகரமான, உள்ளம் உருக்கும் தமிழ் பிரபந்தமாகிய திருநெடுந்தாண்டகம், எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இதைப்   பாடிய திருமங்கையாழ்வாருக்கு ஏதேனும் வரம் தந்து ஆக வேண்டும் என்பதால், அர்ச்சகர் மீது ஆவேசித்து, திருமங்கையாழ்வாருக்கு பரிசு தர எண்ணினார்.6. என்ன பரிசு வேண்டும்?திருநெடுந்தாண்டகத்தில் மயங்கிய பெருமாள் கேட்டார்.‘‘உமக்கு நாம் சம்பாவனை செய்யவேண்டும். என்ன சம்பாவனை?” அப்பொழுது திருமங்கை மன்னன் ‘‘நாயந்தே! அடியேனை தேவரீர் ஏன் என்றும் கேட்கும்படியான பாக்கியத்தை அடைந்தேன். நான் என்ன பிரார்த்தனை செய்யப் போகிறேன்? உன்னால் என்ன வேண்டும் என்று கேட்கப் பட்டதே பெருமை அல்லவா? நான் அடைய வேண்டிய பொருளோ குறையோ ஏதும் இல்லை. ஆனாலும் தேவரீர் கேட்பதால், அடியேன் ஒருவரம் கேட்கின்றேன்.” 7. தமிழின் பெருமை  பெருமாள் கேட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நம்மாழ்வாரின் தமிழுக்கு ஏற்றம் தேட நினைத்தார் திருமங்கை ஆழ்வார். ‘‘என்ன வரம்?” என்று பெருமாள் கேட்க, ஆழ்வாரின் தமிழுக்கு ‘‘வேத ஸாமியம் தரவேண்டும்” என்று கேட்க, ‘‘அது என்ன?” என்று பெருமாளும் திரும்பக் கேட்க, ‘‘தேவரீர் வைகுண்டத்தில் எப்பொழுதும் சாமகானம் கேட்டுக் கொண்டிருப்பீர். பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில் மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று உற்சவத்தின்போது நீர் வடமொழி வேதத்தோடு தமிழ் வேதமாகிய திருவாய்மொழியையும் சமமாகக்  கேட்டருள வேண்டும். திருவாய்மொழித் திருநாளாக இந்த விழா நடக்க வேண்டும்”  என்று கேட்க, பகவானும் அப்படியே தந்தருளினார்.8. தமிழ் விழாவாக மாறியதுஇப்படித்தான் “வேதவிழா’’, திருவாய்மொழி விழாவாக மாறியது. ஆழ்வார்கள் திருவோலக்கத்தில், நம் பெருமாள் தினம் இரவு, மதுரகவி கானமாக திருவாய்மொழி கேட்டருளுகிறார். ஒரு தமிழ் பிரபந்தத்திற்காக 1400 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விழா இது.அதற்குக் காரணம் திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம். இப்பொழுதும் வைகுண்ட ஏகாதசி விழா “திருநெடுந்தாண்டக பிரவேசத்தோடு தான் நடக்கும். இதில் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று உண்டு. திருமங்கை ஆழ்வார் இங்கு தம் பாடலுக்கு ஏற்றம் கேட்கவில்லை. தம் தலைவர் நம்மாழ்வார் பாசுரங்களுக்கு ஏற்றம் கேட்டார். அதுதான் திருமங்கை ஆழ்வார்.9. நாதமுனிகள் முயற்சிதிருமங்கை ஆழ்வார் காலத்துக்குப்  பிறகு திருவரங்கத்தின் பல்வேறு நிலைகள் மாறின. ஆழ்வார்கள் பிரபந்தம் மறைந்தது. காட்டுமன்னார்குடியில் தோன்றிய சுவாமி நாதமுனிகள் பெருமுயற்சிக்குப் பின்னால், ஆழ்வார்கள் பிரபந்தங்களைக் கண்டுபிடித்து, தொகுத்து, இயல் இசையாகப்  பிரித்து தமிழ் உலகுக்குக்  கொடுத்தார். 10. பகல் பத்து உற்சவம் எப்படி வந்தது?திருவரங்கத்தில் அப்பொழுது மார்கழி மாத உற்சவ காலம் வந்தது. நாதமுனிகள் யோசித்தார். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு இத்தனை ஏற்றத்தை திருமங்கையாழ்வார் செய்தாரே, அந்த திருமங்கையாழ்வார் ஈரத் தமிழில் பாடிய பிரபந்தங்களையும், மற்ற ஆழ்வார் பிரபந்தங்களையும் இணைத்து இவ்விழாவை விரிவாக்கினால் என்ன என்று நினைத்தார். திருவாய் மொழியைத் தவிர, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களும் பத்து நாட்கள் பாட வேண்டும் என்று, ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்களைச்  சேர்த்தார். மற்ற  ஆழ்வார்களின் பாடல்களை பிற்பகலில் பாடுவதால் இத்திருநாட்கள் “பகல் பத்து உற்சவம்” என்று அழைக்கிறார்கள். நிறைவாக இயற்பாவையும் சேர்த்தார். இயலும், இசையும், அபிநயமுமாக 21 நாட்கள் இந்தத்  திருநாள், திருமொழி திருநாள், திருவாய்மொழி திருநாள் என்ற பெயரோடு மாறியது. 21  நாட்கள் முத்தமிழ் விழாவாகவே நாதமுனிகள் வடிவமைத்தார்.11. அரையர் சேவைதிருமங்கையாழ்வார் காலத்திலும் சரி, நாதமுனிகள் காலத்திலும் சரி, திருவரங்கத்தின் பெருவிழாவாக, மார்கழித் திருவிழா முத்தமிழ் விழாவாகவே மலர்ந்திருந்தது. இந்த மூன்று தமிழையும் உள்ளடக்கிய ஒரு தொண்டு “அரையர் சேவை” என்று அழைக்கப்படுகிறது. அரையன் என்றால் அரசன் என்று பொருள். (புள் அரையன் – கருடன்). இப்பொழுது தமிழகத்தில் திருவரங்கம் திருவில்லிபுத்தூர்,ஆழ்வார்  திருநகரி ஆகிய திருத்தலங்களில் இக்கலை வடிவம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகவும் பின்பாகவும் இந்த அரையர் சேவை நடக்கும். நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பரப்புவதற்காக தமது மருமக்களாகிய மேலை அகத்து ஆழ்வான், கீழை அகத்து ஆழ்வான் ஆகிய இருவருக்கும் இசையுடன் பாசுரங்களைக் கற்றுக் கொடுத்தார்.அவர் வழியினர்களே, இசை நாடக அபிநயத்தோடு பாசுரங்களைப் பாடும் “அரையர்கள்.”  அரையர் சேவையின் மிக முக்கியமான விஷயம் மேடை இருக்காது. இறைவன் முன்னால் பிரபந்தப் பாடல்களைப் இசையோடு பாடுவார்கள். அவர்கள் கையில் உள்ள ஒரு தாளத்திற்கு நாதமுனிகள் என்று பெயர். ஒரு தாளத்திற்கு நம்மாழ்வார் என்ற பெயர்.  தலையில் வெல்வெட்டால் செய்யப்பட்ட குல்லாய் அணிந்திருப்பார்கள். நாதமுனிகள் பேரரான ஆளவந்தார் தம்முடைய குமாரனுக்கு திருவரங்கப் பெருமாள் அரையர் என்று பெயர் சூட்டி னார். திருவரங்கப் பெருமாள் அரையர் ராமானுஜரின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவர் .இந்த அரையர்கள் திருவரங்கத்தில் முத்தமிழ் கைங்கரியத்தைச் செய்வதற்காகவே இருந்தனர். ‘‘வரம் தரும் பெருமாள் அரையர்” ‘‘நாத வினோத அரையர்” என்ற அருளப்பாடுகள் உண்டு.12. மோகனா அவதாரம்பகவான் மோகினி அவதாரம் செய்வதற்கு ஒரு சரித்திரம் உண்டு. மார்கழி சுக்ல தசமி அன்று திருப்பாற்கடல் கடையப்பட்டது  என்கிறார்கள். அன்று தேவர்களுக்கு அமுதம் தர பகவான் மோகனா(மோஹினி) அவதாரம் எடுத்தார். அதற்காகவே மோஹினி அலங்காரம் செய்யப்படுகிறது.இன்னொரு விதத்தில் திருமங்கை ஆழ்வார் தன்னை நாயகியாக பாவித்து கொண்டு  “கள்வன் கொல்” என்ற பதிகத்தை அருளிச் செய்தார். இப்பொழுதும் திருநகரியில் (திருவாலி) திருக்கார்த்திகை உற்சவத்தில், ஆழ்வார் நாயகி பாவத்தில் பெண்வேடம் போட்டுக்கொண்டு, பெருமாளுடன் ஏக ஆசனத்தில் இருப்பார். திருமங்கை யாழ்வாரின் இந்த நாயகி பாவத்தை பார்த்த பெருமாள், தனக்கும் இந்த கோலத்தை ஆதரித்து அலங்காரம் செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.பகல் பத்து பத்தாம் திருநாள் அன்று பகவானுக்கு இந்த அவதார அலங்காரத்தைச்  செய்வார்கள். இதற்கு “நாச்சியார் திருக்கோலம்” என்றும் பெயர். பெருமாள் நாச்சியாராக அலங்கரித்துக்கொண்டு கருட மண்டபம் வந்து  காட்சி தருவார். 13. ரத்னாங்கி சேவையும் முத்தங்கி சேவையும்வைகுண்ட ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பரமபத ஏகாதசி,  அத்யயன உற்சவம் என்று பல பெயர்களால் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி அன்று மது கைடபர்களை, நம்பெருமாள், உத்தர துவார மார்க்கமாக (பரமபத வாசல், வடக்கு வாசல்) வழியாக மோட்சம் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று பெருமாள் ரத்னாங்கி சாத்திக்கொண்டு தம்முடைய திவ்யமான வடி வழகை காட்டி அருளுவார்.  இதைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திருவரங்கத்தில் திரள்வார்கள். விலை உயர்ந்த துப்பட்டாவை சமர்ப்பித்து அரங்கனின் திருவருளைப் பெறுவார்கள். பெருமாள் பகிரங்கமாக துப்பட்டா சாத்தி கொள்ளும் சந்தர்ப்பம் இது.  ஏகாதசி தினமும், அதை அடுத்த சில தினங்களும் முத்தினால் செய்த  அங்கியை  மூலவர் அணிந்து கர்ப்பக் கிரகத்தில் காட்சி தருவார்.இந்த சேவைக்கு “முத்தங்கி சேவை” என்று சொல்கிறார்கள்.14. திருக்கைத்தல சேவைஇராப்பத்து உற்சவம், ஏழாம் நாள், கைத்தல சேவை என்று ஒரு சேவை உண்டு. அன்றைய தினம் பெருமாள் அதிகமான திருவாபரணங்கள் சாத்திக் கொள்ள மாட்டார். திருவாய்மொழி ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி, ‘‘கங்குலும் பகலும்” சேவிக்கப்படும். நாச்சியார் விஷயமாக ஸ்ரீ ஸ்தவம், ஸ்ரீ குண ரத்னகோஸம் சேவிக்கப்படும். பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளி திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, ஆழ்வாருக்கு சேவை சாதிப்பார். இப்படி அர்ச்சகர்களின் கையில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி “கைத்தல சேவை” எனப்படும். கைத்தல சேவைக்காக உத்தம நம்பி சமர்ப்பிக்கும் சர்க்கரைப் பொங்கல், பெருமாளுக்கு அமுது செய்விக்கப்படும்.15. நம்மாழ்வார் மோட்சம் திருவாய்மொழியின் கடைசி பதிகத்தில், நம்மாழ்வார் மோட்சத்துக்கு செல்லும் வழியையும், அங்கே தமக்குக் கிடைத்த வரவேற்பையும் பாடியிருக்கிறார். இந்த உற்சவத்தை நம்மாழ்வார்  மோட்ச உற்சவம் என்பார்கள். அன்று பெருமாள் வழக்கம்போல் புறப்பட்டு வந்து சந்திர புஷ்கரணியில்  தீர்த்தம் சாதித்து, தீர்த்தவாரி நடத்தி, திருமாமணி மண்டபம் சேர்வார். பிறகு திருமஞ்சனம் கண்டருள்வார். அன்று அவருக்கு பன்னீராயிரம் திருப்பணியாரங்கள்  சமர்ப்பிக்கப்படும். நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன்  வேடத்தில்  இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல், வெள்ளை உடுத்தி , பன்னிரு திருநாமம் சாற்றி, துளசி மாலையும் தரித்து, சேவை சாதிப்பார். இரண்டு அர்ச்சகர்கள், தங்கள் சரீரத்தைப் போர்வையால்  போர்த்திக் கொண்டு ஆழ்வாரை திருக்கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொள்வார்கள். சத்ர சாமரங்கள் அவருக்குப்  பிடிக்கப்படும். மோட்சத்துக்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தை (ஒளி வழியை) விவரிக்கும், ‘‘சூழ் விசும்பு” என்ற ஒன்பதாம் திருவாய்மொழி சேவிக்கப்படும். நம்மாழ்வார்  திருமேனியை எடுத்துச் சென்று பெருமாளின் திருவடியில் வைப்பார்கள். அங்கே, திருவாய் மொழியின் கடைசி பதிகமான ‘‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்ற பதிகம் பாடப்படும். ஆழ்வாரின் மீது திருத்துழாய் (துளசி)  வைத்துக்கொண்டே இருப்பார்கள்.  ஆழ்வாரை துளசியால் மூடிவிடுவார்கள். இந்தப் பதிகம் பூர்த்தியானவுடன், பெருமாள் ஆழ்வாருக்கு தம்முடைய கஸ்தூரி திருமண் காப்பையும்  மாலையையும் அருளுவார். அதற்கு பிறகு, ‘‘எங்களுக்கு ஆழ்வாரை கொடுத்தருள வேண்டும்” என்று பிரார்த் தனை செய்ய, மூடியிருந்த துளசியை நீக்கிவிட்டு, மறுபடியும் ஆழ்வாரை யதாஸ்தானம் செய்ய, கைகளில் ஏந்திக் கொள்வார்கள். மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்கின்ற பாசுரம் சேவையாகும்.பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து சந்நதிக்கு புறப்படும்போது பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விலாமிச்சை வேர் சப்பரத்தில் எழுந்தருளுவார்.  மல்லாரி என்கின்ற ராகம் வாசிக்கப்படும். ஒய்யார நடை போடுவார். அப்பொழுது பலவிதமான வாத்தியங்கள் இசைக்கப்படும். கடைசியாக வாசிக்கப்படுவது வீணை. இந்த வாத்தியத்துடன் நாழி கேட்டான் வாசலில் இருந்து படியேற்றமாகி சந்நதிக்குச்  செல்வார்….

The post திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi festival ,Thiruvarangam ,Thiruvaranga ,
× RELATED ஜகத்தைக் காக்கும் புரி ஜகந்நாதர்