×

படியளக்கும் பரமனின் லீலை

மதுரைக்கு ‘திருவிழா நகரம்’ என்றொரு பெயருண்டு. ஆண்டு முழுக்க மாதம் தவறாது திருவிழா காணும் மகத்தான பெருமைக்குரியதாக மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும், அம்மனும் மதுரை புற வீதிகளில் வலம் வருகிற ‘அஷ்டமி சப்பரத் திருவிழா’ நடைபெறுகிறது. இந்த விழா, உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் படி அளப்பது இறைவனே என்பதனை உணர்த்துகிறது.ஒருமுறை உலக ஜீவராசிகளுக்கு படி அளப்பதற்காக சிவபெருமான் புறப்படுகிறார். இதையறிந்த பார்வதி தேவியார், ஈசன், உண்மையிலே ஜீவராசிகளுக்கு படி அளக்கத்தான் போகிறாரா? என்பதை சோதிக்க வேண்டும் என்றெண்ணிய பார்வதிதேவி, தச்சனை அழைத்து காஞ்சார மரம் கம்பு வெட்டி, கட்டைச்சிமிழ் செய்து அதனுள்  இரண்டு கட்டெறும்புகளை பிடித்து அடைத்து அந்த சிமிழுக்கு திருக்காணி இட்டு வைத்துக்கொண்டாள். படி அளந்து விட்டு கயிலாயம் திரும்பினார் பரமன். சிவபெருமானும், எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்புகிறார். ஐயம் கொண்ட ஐயனை தடுத்து நிறுத்தி, ‘‘சுவாமி, எல்லா உயிர்களுக்கும் படி அளந்தீர்களா’’ என வினவ, ஆம், அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்து விட்டுத்தான் வருகிறேன். அதிலென்ன சந்தேகம் உனக்கு என்று பதிலளித்தார். அவரிடம் தேவியார், ‘‘என்னிடத்தில் இரண்டு ஜீவன்கள் பட்டினியாக இருக்கிறதே’’ என்றார்.‘‘எங்கே? அந்த ஜீவன்களை என்னிடத்தில்  காட்டு’’ என்கிறார். பார்வதிதேவிகட்டைசிமிழை திறந்து காட்ட, அதனுள் இருந்த இரண்டு கட்டெறும்புகளும் அரிசியை கவ்விக்கொண்டு வலம் வந்து கொண்டிருந்தன. அப்போது சிவபெருமான், ‘‘அறைக்குள்ளே இருந்தாலும் அரன் அறியா மாயம் உண்டே!, சிமிழுக்குள்ளே இருந்தாலும் சிவன் அறியா மாயம் உண்டோ!’’ என்று கூறுகிறார். வியப்பில் ஆழ்ந்த தேவி, தன் தவற்றை உணர்ந்து சுவாமியிடம் மன்னிப்பு கோருகிறார். இந்தப் புராணக் கதையின் நிகழ்வை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் மதுரை மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோயிலில் அஷ்டமி சப்பர திருவிழா என்ற பெயரில் விழா நடைபெறுகிறது.விழா அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமியுடன் பிரியாவிடை, அம்மன் ரிஷப வாகனங்களில் ஏறி தனித்தனி சப்பரங்களில் மதுரையின் வீதிகளில் உலா வருகின்றனர். கோயிலில் அம்மன் சந்நதி வாயிலில் புறப்பட்டு, கீழமாசி வீதி தேர்முட்டி தொட்டு மதுரையைச் சுற்றிய வெளிவீதிகளை வலம் வந்து, திரும்பவும் கோயிலை அடைகின்றனர். சுமார் 5 மணி நேரம் மதுரையை சுவாமியும், அம்மனும் வலம் வரும் இக்காட்சியை காண கண்கோடி வேண்டும். இரு சப்பரங்களில் மீனாட்சியம்மன் சப்பரத்தை முழுக்க பெண்களே இழுத்து வருவது மேலும் சிறப்பிற்குரியது.சப்பரம் செல்லும் இடமெல்லாம் அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்ததை நினைவூட்டிட ரோட்டின் இருபுறமும் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மஞ்சள் கலந்த அரிசியை பட்டர்கள் தூவிக்கொண்டே வருவர், பக்தர்கள் தூவப்பட்ட அரிசியைத் தேடிச் சேர்த்து சிறிய பொட்டலத்தில் கட்டியெடுத்து சென்று தங்கள் வீட்டு பூஜை அறைகளில் வைக்கின்றனர். அவ்வாறு வைப்பவர்கள் வீட்டில் அன்னத்திற்கும், செல்வத்திற்கும் குறைவு இருக்காது என்கின்றனர் பக்தர்கள்.  தங்கள் வீட்டின் விசேஷ காலங்களில் கொதிக்கும் உலைகளில் ஓரிரு இந்த அரிசி பிரசாதத்தைப் போட்டு சமைப்பதிலும் மதுரை மக்களிடம் ஆன்மிக நிறைவும் வழிகிறது. சாலையில் வீசும் அரிசி எறும்பு முதல் எண்ணாயிரம் ஜீவ ராசிகளுக்கும் போய்ச் சேர்கிற ஐதீகமும்  இருக்கிறது.சுவாமி, அம்மன் வீதியுலா நடத்துகிற இந்நிகழ்வு ஒரு மட்டற்ற திருவிழாக் கொண்டாட்ட குதூகலத்தை மதுரை மக்களுக்கு வாரி வழங்கி விட்டுப் போகிறது. வழியெங்கும் ஆங்காங்கே அன்னதானம் துவங்கி இனிப்புப் பொங்கல், பானகம் என பலதரப்பட்ட பிரசாதம் விநியோகிப்பதும் நடக்கிறது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகளே ஆண்டுதோறும் தங்கள் கட்டளையாக பங்கேற்று இந்த ‘உலா’ நடத்துவதும் தொடர்கிறது.மீனாட்சி கோயில் பிரதான பட்டர் செந்தில் கூறும்போது, ‘‘பழங்காலத்தில் மதுரை நகரம் வெளிவீதிகளுக்குள் சுருங்கி இருந்தது. அதனால்தான் அப்போது வெளிவீதிகளைச் சுற்றி அம்மன் – சுவாமி அஷ்டமி சப்பர உலாவாக வந்து படியளந்த நிகழ்வு நடந்திருக்கிறது. இந்நிகழ்விற்கான மற்றொரு புராணக்கதையும் பேசப்படுகிறது. அதாவது, தீய நடத்தைகளில் இருந்த வார்த்தாகன் என்றொரு விவசாயி, மறு ஜென்மத்திலும் திருந்தாத நிலையில், சிவபெருமானின் ஆலோசனையில் அம்பாள் ரிஷப(காளை மாடு) ரூபத்தில், அவனது கத்தரிக்காய் தோட்டத்திற்குள் போக, மாட்டின் வாலினை பற்றியவனை, ஏழு வீதிகளைச் சுற்றி வந்து முடிவில் கோயில் பிராகாரம் வரை இழுத்து வந்ததாகவும், இறுதியாக அம்மனும், சுவாமியும் முக்தி தந்ததாகவும் ஒரு கதை இருக்கிறது.இதன்படியும் மீனாட்சி கோயில் முதல்பிராகாரம், 2வது பிராகாரம், ஆடிவீதி, சித்திரை வீதி, ஆவணி மூலவீதி, மாசிவீதி கடந்து வெளிவீதி என ஏழு வீதிகளின் வழி ஊர்வலம் நடக்கும் ஐதீகம் இருக்கிறது. எனவேதான், இந்த அஷ்டமி சப்பர நாளில் எங்கிருந்தாலும், அம்மன் சுவாமியை எண்ணிடவும், குறைந்தது வில்வ மரத்தையாவது ஏழு முறை சுற்றிவந்தால் முக்தி கிட்டுமென்ற நம்பிக்கையும்  இருக்கிறது’’ என்றார். இந்த அற்புதத் திருவிழா 6 – 1 – 2021 அன்று நடக்கிறது. வாருங்கள். எம்பெருமானின் அருளைப் பருகுங்கள்.படம்: எஸ்.ஜெயப்பிரகாஷ்செ. அபுதாகிர்…

The post படியளக்கும் பரமனின் லீலை appeared first on Dinakaran.

Tags : Paraman ,Madurai ,Meenakshiyamman ,Padiyalakum ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்