×

பக்தர்களைக் காக்கும் பனசிக்காடு சரஸ்வதி

கேரளாவின் புகழ்பெற்ற சுயம்பு சரஸ்வதி கோயில் இது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், அவர்களது பிறந்த நாளின்  போதும் பஞ்சாமிர்தம், பால் பாயசம் படைத்து இந்தக் கோயிலிலுள்ள சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்கள். நவராத்திரியின்போது  சரஸ்வதியை குழந்தையின் வடிவில் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது. கோபுர வாசலில் இருந்து 30 அடி பள்ளத்தில் கோயில்  அமைந்துள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், அடிக்கடி உடல் நலம் குன்றும் குழந்தைகள் குணமடையவும் நவராத்திரி பூஜையில்  பங்கேற்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இவ்வூரில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. கிழுப்புரம், கரிநாடு, கைமுக்கு என்ற மூன்று நம்பூதிரி குடும்பத்தினர் பூஜை செய்து வந்தனர். இவர்களில்  கிழுப்புரம் தாமோதரன் குடும்பத்தினருக்கு வாரிசு இல்லை. இதுகுறித்து, சரஸ்வதியின் சொரூபமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று  அம்பாளிடம் தன் குறையைச் சொல்லி, அங்கேயே தங்கி வழிபட்டார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய அம்பிகை, ‘பூர்வ ஜென்ம வினைப்பயனால்  இப்பிறவியில் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. உன் வீட்டின் அருகில் உள்ள நம்பூதிரியின் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும். அதை தத்தெடுத்து  வளர்த்து வா!’ என்றாள். அதன்படி பக்கத்து வீட்டில் பிறந்த குழந்தையை தத்து கொடுக்கும்படி கேட்டார் தாமோதரன்.அவர்களோ தங்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தால், தத்து கொடுப்பதாகச் சொல்லிவிட்டனர். வருத்தமடைந்த தாமோதரன், மூகாம்பிகை கோயிலுக்கு  தான் கொண்டு சென்ற குடையுடன், பெருமாள் கோயிலுக்கு வந்தார். குடையை ஓரிடத்தில் வைத்து விட்டு, கோயில் குளத்தில் நீராடினார். திரும்பி  வந்து குடையை எடுத்தபோது அதை எடுக்க முடியவில்லை. அப்போது ஓர் அசரீரி கேட்டது: தாமோதரா, குழந்தை தத்து கிடைக்காதது பற்றி  வருந்தாதே. ஆதிசங்கரர் இங்கிருந்துதான் மூகாம்பிகையை கொல்லூருக்கு கொண்டு சென்று பிரதிஷ்டை செய்தார். இப்போது அவளது அம்சமான  சரஸ்வதி, உனது குடையில் அமர்ந்து உன்னுடன் வந்திருக்கிறாள்.நீ இங்குள்ள காட்டிற்குள் போ. உனக்கு ஒரு குழந்தை வடிவ சரஸ்வதி சிலை கிடைக்கும். அதை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து, அதில்  குடையிலிருக்கும் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து பூஜித்து வா!’’ என்றது. அதன்படி சரஸ்வதி சிலையை கண்டெடுத்த அந்த பக்தர், பெருமாள்  தலமான இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தாமோதரன் நம்பூதிரிக்கு நேரடி வாரிசு இல்லை என்பதால், அவரது உறவினர்கள், அவர் பூஜித்த  சரஸ்வதிக்கு எதிரில் மேற்கு நோக்கி ஒரு கல்லை பிரதிஷ்டை செய்து அதை சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். அதை மட்டுமே நாம்  பார்க்க முடியும்.தாமோதரன் பூஜித்த சரஸ்வதியைச் சுற்றிலும் வெற்றிலை கொடிகள் சூழ்ந்துவிட்டது. இதற்கு அடியில் மூகாம்பிகை கோயிலில் இருந்து, சரஸ்வதி  எழுந்தருளி வந்த குடை இருக்கிறது. இதை பக்தர்கள் தரிசிக்கலாம். ஆனால், குழந்தை சரஸ்வதியைப் பார்க்க முடியாது. ‘சரஸ்’ என்றால் தண்ணீர்  என்றும் ‘வதி’ என்றால் தேவி என்றும் பொருள். இதனடிப்படையில் கோயிலை சுற்றிலும் குளம் அமைந்துள்ளது. சரஸ்வதி கோயில் அருகில்  நம்பூதிரிகள் பூஜித்த பெருமாள் கோயிலும் உள்ளது.கேரளம் கோட்டயத்திலிருந்து சங்கனாச்சேரி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ள சிங்கவனம் சென்று, அங்கிருந்து 4 கி.மீ. ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம்.- ஜெயா…

The post பக்தர்களைக் காக்கும் பனசிக்காடு சரஸ்வதி appeared first on Dinakaran.

Tags : Panasickam Sarasvathi ,Swayambu Saraswadi Temple ,Kerla ,Panasakkudu Saraswadi ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்தை...