×

பன்னிரெண்டு ராசிகளுக்கான இல்லக் கனவை நிறைவேற்றும் ஆலயங்கள்

மேஷம் – கன்னியாகுமரி பகவதி அம்மன்மேஷத்திற்கு அதிபதியே பூமிக்காரகனான செவ்வாய்தான். மேஷத்தை பூமிப் புத்திரன் என்றே சொல்லலாம். இவர்களிடம், ‘‘உங்க லைஃப் ஆம்பிஷன் என்ன’’ என்றால் கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘‘முதல்ல சொந்த சம்பாத்தியத்துல ஒரு வீடு கட்டணும்’’ என்பார்கள். இந்த ராசிக்காரர்களின் முதல் செலவே வீடாகத்தான் இருக்கும். வீடு பற்றிய இவர்களின் ரசனை சற்று பிரமாண்டமாகத்தான் இருக்கும். மேஷ ராசிக்கு செம்மண் பூமியாக இருப்பின் நல்லது. அல்லது மணல் பூமியாக இருந்தாலும் நலம் பயக்கும். பூமிக்கும் உடம்புக்கும் சம்மந்தமுண்டு. இந்த செம்மண் பூமி அமைந்து விட்டால் எப்போதும் ஆரோக்யத்திற்கு ஒருகுறைவும் வராது. மேஷ ராசிக்கு நான்காவது வீடாக கடகம் வருகிறது. அந்த கடக ராசிக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். அப்படிப் பார்க்கும்போது நீங்கள் வளர்பிறைச் சந்திரனில் பிறந்திருந்தால், வீடு கட்டுவதென்பது எளிதான காரியமாகும். ‘‘லோன் அப்ளை பண்ண ஒருவாரத்துக்குள்ள எல்லா விஷயங்களும் முடிஞ்சுடுச்சி’’ என்பார்கள். இதே நீங்கள் தேய்பிறை சந்திரனில் பிறந்திருந்தால் கொஞ்சம் போராடித்தான் வீட்டை கட்டி முடிப்பீர்கள். மேலும், இன்னும் கொஞ்சம் உங்கள் ஜாதகத்தின் வாயிலாகப் பார்த்தால் குருவின் பார்வையோ அல்லது குருவும், சந்திரனும் சொந்த ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் நல்லது. அந்தத் தெருவுலயே அவரு வீடுதாங்க பிரமாதம்’’ என்று வியப்பார்கள். மேஷ ராசிக்கு தெற்கு பார்த்த வாசலாக வீடு இருப்பது நல்லது. கிழக்கு வாசல் வீடு என்பதை ரெண்டாவது சாய்ஸாக இருக்கட்டும். அபார்ட்மென்ட் ஆக இருந்தால் தரை தளம் நல்லது. ஆனால், மேலே சொன்னவை மேஷத்திற்கான பொதுவான விஷயமாகும். மேஷத்திற்கு நான்காம் இடமான வீட்டை வழங்கும் கடக ராசியின் அதிபதியாக சந்திரன் வருகிறார். அப்போது உங்கள் ஜாதகத்திலும் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால்தான் வீடு கட்டவே முடியும். அப்படியே சந்திரன் பலவீனமாக அமைந்தாலும் கவலைப்படாதீர்கள். சந்திரனை பலப்படுத்தும் சக்தி அம்பாளுக்கு உண்டு. அதுவுமில்லாமல் கடகம் என்பதே கடல்வீடு. அப்போது கடலுக்கு அருகேயே இருக்கும் அம்பாள் எனில் உங்களுக்கு இன்னும் அதிகமான நன்மையை செய்யும். அப்படி இரு அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற தலமே கன்னியாகுமரி ஆகும். கன்னியாகுமரி பகவதியை வணங்க, வேண்டுதலோடு தரிசித்து வர விரைவில் வீடு கட்டத் தொடங்குவீர்கள்.ரிஷபம் – திருவக்கரை வக்ரகாளிமேஷத்தை எப்படி பூமியின் புத்திரன் என்று பார்த்தோமோ, அதுபோல ரிஷபத்தை கட்டிடத்தின் நாயகன் என்று சொல்லலாம். ஏனெனில் ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன்தான் சகலவிதமான கட்டிட கலைகளுக்கெல்லாம் அதிபதியாவான். வெறும் சுவரா அல்லது கண்ணாடிச் சுவரா என்று மயக்கும்படியான கட்டிடத்தை உருவாக்குவதே சுக்கிரனின் வேலைதான். இப்படி கட்டிடக்காரகனாக இருக்கும் சுக்கிரனே உங்கள் ராசிக்கு அதிபதியாக வருவதால் வீடு கட்டுவதிலேயே குறியாக இருப்பீர்கள். ரிஷப ராசிக்கு சரளை மற்றும் கருப்பு நிற மண்ணாக இருந்தால் நல்லது. நீங்கள் ரிஷப ராசிக்காரராக இருந்தாலும் சரி அல்லது உங்கள் ஜாதகப் பிரகாரம் நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை. உங்கள் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ நான்காம் இடமாக சிம்மராசி வருகிறது. அந்த ராசியை சூரியன்தான் ஆட்சி செய்கிறார். எனவே உங்கள் வீடு குறித்த எல்லா விஷயங்களையும் சூரியன்தான் நிர்ணயிக்கிறார். அடுத்ததாக உங்கள் ராசியான ரிஷபத்திற்கு அதிபதியாக வரும் சுக்கிரனும், சூரியனும் கொஞ்சம் பகைவர்கள் ஆவார்கள். அதனால் மனை வாங்கிப் போட்டால் சீக்கிரம் வீட்டை கட்டவிடாது தடைகள் வரும். உங்கள் ஜாதகத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது இந்த ராகுவும், கேதுவும் சூரியனோடு சேர்ந்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் சாலை விரிவாக்கத்தில் வீட்டின் முன்பகுதியை இழப்பீர்கள். மேலும் நல்ல பூமிகூட அமைந்து விடும். ஆனால், பில்டர் ஏமாற்றுவதற்கு முயற்சி செய்வார். ‘‘எல்லாமே ரொம்ப தரமா போட்டிருக்கேங்க’’ என்று சொல்லிவிட்டு மட்டமான மெட்டீரியல்ஸை உபயோகப்படுத்துவார். ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் கொஞ்சம் சொந்த ஊர் வாசனையை விரும்புவார்கள். ரிஷப ராசி அன்பர்கள் வீடு யோகம் பெற வழிபட வேண்டிய தலம் திருவக்கரை ஆகும். வக்ரகாளி எனும் நாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இன்றும் சந்நதியின் அண்மை வெம்மையாய் உக்கிரத்தோடு உள்ளது. வலது காலை மடக்கி, இடது காலை கீழே படரவிட்டு, இடது கைவிரல்களை லாவகமாய் மடித்து ஆள்காட்டி விரல் தன் பாதத்தைச் சுட்டுவதுபோல அமர்ந்த கம்பீரம் அவள் பாதம் பணிய வைக்கிறது. சிலசமயம் ஒரு பேரிளம்பெண் உயிரோடு இளகுவதும், உதடு பிரித்துப் பேசுவது போலும் பார்த்தால் உடல் விதிர் விதிர்த்துப்போடும். குங்குமமும், மஞ்சளும் கலந்த ஒரு சுகந்தம் அந்த சந்நதியில் சுழன்றபடி இருக்கும். அருகே வருவோரை செம்மைப்படுத்தும். இத்தலம் விழுப்புரம், மயிலம் போன்ற ஊர்களுக்கு அருகேயே உள்ளது. இங்கிருந்து பேருந்து மூலமோ அல்லது தனி வாகனம் வைத்துக்கொண்டோ அடையலாம்.மிதுனம் – திருக்கோளூர், வைத்தமாநிதி பெருமாள்மிதுன ராசியின் அதிபதியாக புதன் வருகிறார். மேலும் வீட்டு யோகத்தை அளிக்கும் நான்காம் இடத்திற்கு அதிபதியும் புதன்தான். வீட்டு விஷயத்தைப் பொறுத்த வரையில், ‘‘எனக்கு வீடு வாங்கறதுதான் லட்சியம்” என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள். ஏனெனில், அடிப்படையாக உதவி கேட்டு நிற்கப் பிடிக்காது. லோனுக்கு அலைவதற்கெல்லாம் யோசிப்பீர்கள். ‘‘அமையும்போது எல்லாம் அமையும் அந்த நேரம் பார்த்துக்கலாம். அதுக்காக இப்பவே உட்கார்ந்து சிக்கனமா பால் செலவை குறைச்சு, வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி அவஸ்தைப்படணுமா’’ என்று கேட்பீர்கள். ‘‘அப்படி ஒன்னும் சொந்த வீடு வாங்கணும்னு அவசியமில்லை’’ என்று ஆரம்பத்தில் சொல்வீர்கள். பூமிக்காரகன் என்று செவ்வாயை சொல்கிறோம். அந்த செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டின் அதிபதியாக வருகிறார். ஆறாம் வீடு என்பது கடன், நோய், எதிரிகளைபற்றி சொல்வதாகும். எனவே வெறும் இடமாக வாங்கிப் போடாதீர்கள். அல்லது முதன் முதலில் சொத்து வாங்கும்போது கட்டிய வீடாகவோ அபார்ட்மென்ட்ஸ் மாதிரி அடுக்கிலோ வாங்குங்கள். ‘‘முதல்ல இடத்தை வாங்கிப் போடுவோம். அப்புறமா வீடா கட்டிக்கலாம்” என்று முடிவெடுக்காதீர்கள். நீங்கள் முதன் முதலில் இடம் வாங்கினால் ஆறாம் இடத்து செவ்வாய் உங்களுக்கு எதிர்மறையாக இருப்பதால் வீட்டை கட்ட விடாது. மேலும் எதையும் வாங்கவும் விடாது. மருத்துவமனை, ஏதேனும் கெமிக்கல் கம்பெனி, மெடிக்கல் ஷாப், ரேஷன் கடை, அரிசி மண்டி போன்றவற்றின் அருகில் வீடு வந்தால் வாங்கி விடுங்கள். இவையெல்லாமுமே செவ்வாயின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்கள். உங்கள் பிள்ளைகள் பெயரில் சொத்துக்களை வாங்கிப் போடுவது நல்லது. சிறிய வயதுப் பிள்ளைகளாக இருந்தால் வாழ்க்கைத் துணை பெயரில் வாங்குங்கள். உங்களின் வீட்டு யோகத்தை நிர்ணயிக்கும் புதனை விட, பூர்வ புண்ணியத்தை அளிக்கும் சுக்கிரன்தான் உங்களுக்கு வீட்டு யோகத்தை அளிப்பார். எனவே, குபேரன் வழிபட்ட தலங்களுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். அப்படி நீங்கள் செல்ல வேண்டிய தலமே திருக்கோளூர் ஆகும். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பத்துக்களோடும் வாழ்கின்றனர். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவொன்றாகும். மதுரகவியாழ்வார் அவதாரத்தலம் இது. இத்தலம் திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் சாலையில் 31 கி.மீ. தொலைவில் உள்ளது.கடகம் – கும்பகோணம் கோலவில்லி ராமன்கட்டிடக்காரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன்தான் உங்கள் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பார். அதாவது நீங்கள் கடக ராசியோ அல்லது கடக லக்னமோ உங்களின் நாலாம் வீடானது துலாமாக வரும். அதற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். எனவே,  வீட்டை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு அவருக்குத்தான் உண்டு. அதனால்தான் என்னவோ அவ்வப்போது கட்டிய வீட்டையே மீண்டும் மீண்டு சரிசெய்து கட்டிக் கொண்டிருப்பீர்கள். வீட்டின் வர்ணத்தை வருடத்துக்கு ஒருமுறை மாற்றாது தூங்க மாட்டீர்கள். கடக ராசியை சந்திரன்தான் ஆளுகிறார். எனவே நீங்கள் சந்திரனின் ஆளுகைக்குக் கீழ்தான் வருவீர்கள். எனவே, நீங்கள் தேய்பிறை சந்திரனில் பிறந்திருந்தால் வீட்டை எளிமையாக வடிவமைப்பீர்கள். வீடா… தோட்டமா… என்று தெரியாத அளவுக்கு வீட்டைச் சுற்றிலும் தோட்டத்தை அமைப்பீர்கள். கட்டிய வீடாக வாங்கும்போது ஒன்றை நினைவில் வையுங்கள். இடத்தின் சொந்தக்காரருக்கும், வீட்டை கட்டும் பில்டருக்கும் இருக்கும் ஒப்பந்தங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இடத்தின் சொந்தக்காரரிடம் பில்டர், ‘‘உங்களுக்கு ஒரு ப்ளாட் கொடுக்கறேன். மீதியை வித்துக்கறேன்’’ என்கிற ஒப்பந்தம் இருக்கும். அதில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பார்த்து விடுங்கள். நீங்கள் வாங்கும் இடம் மணல் பூமியாக இருப்பது நல்லது. பொதுவாக கல்லூரிப்பருவம் முடிந்து வேலை கிடைத்த இரண்டு மூன்று வருடங்களில் வீட்டை வாங்கி விடுவீர்கள். நீர்த் தேக்கத் தொட்டி, நீரேற்று நிலையம், மருத்துவமனை போன்றவற்றிற்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. கிடைத்தாலும் வாங்கிப் போடுங்கள். நீங்கள் வசிக்கும் ஊரின் தெற்கு, கிழக்கு பகுதியில் வீடு அமைந்தால் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் முயற்சித்தால் அந்த திசையில் வீடோ, இடமோ உடனேயும் கிடைக்கும்.உங்களின் வீட்டு யோகத்தை சுக்கிரன் அருள்கிறார். எனவே சுக்கிரனின் தலைவரான சுக்கிராச்சார்யார் பூஜித்த தரிசித்த தலங்கள் யாவும் நீங்களும் தரிசிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தலமே ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருவெள்ளியங்குடி ஆகும். இத்தலத்தில் அருளும் ராமனின் அருளால் சுக்கிராச்சாரியார், இழந்த பார்வையை மீண்டும் பெற்றார். பகவான் சுக்கிரனுக்கு அருளியதால் ‘சுக்கிரபுரி’ என்ற பெயரும் உண்டு. அதனால் இத்தலம் சுக்கிர தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. பிற்காலத்தில் திருமங்கையாழ்வாருக்கு ராமனாகவும் காட்சி கொடுத்தபடியால் ஆழ்வார் இவரை ‘கோலவில்லி ராமன்‘ என்றே குறிப்பிடுகிறார்.  கும்பகோணம் -அணைக்கரை மார்க்கத்தில் சோழபுரம் என்ற இடத்திலிருந்து செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.சிம்மம் – கந்தன்குடி முருகன்சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலோருக்கு பரம்பரை சொத்து அமையும். மேலும், உங்களின் வீட்டைப்பற்றி நிர்ணயிக்கும் இடத்திற்கு செவ்வாய்தான் அதிபதியாக வருகிறார். அவரும் சூரியனுக்கு நட்பாகத்தான் வருகிறார். எனவே, பூமி மனையெல்லாம் சாதாரணமாகவே இருக்கும். அது எத்தனை என்பதுதான் நாம் பார்க்க வேண்டுமே தவிர வீடே அமையாது என்று பயப்படத் தேவையில்லை. சொந்த ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் பலமிழந்து இருந்தால் மட்டுமே வீடு அமைவதில் தாமதம் ஏற்படும். வீடு விஷயத்தில் உங்களை கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், கட்டிட ஸ்தானாதிபதியாகவும், பிரபல யோகங்களையும், வசதி வாய்ப்புகளையும் தரக்கூடிய வீடான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாக சுக்கிரனே வருகிறார். சிறிய வயதிலேயே வீடு, சொத்து சுகங்கள் இருக்கும். எவ்வளவுதான் நீங்கள் சொத்துபற்றிப் பேசினாலும், கட்டிடங்களை ரசித்தாலும் பெரிதாக வாங்கி குவிக்க வேண்டுமென்ற ஆசையெல்லாம் இருக்காது. எப்போதோ நாலு இடம் வாங்கிப் போட்டிருப்பார்கள். அதை உடனே விற்பார்கள். அதனாலேயே நறுக்கென்று நாலு சொத்துக்கள் இல்லாது பின் வாழ்க்கையில் தவிப்பீர்கள். ‘‘எவ்ளோ கம்மியால்லாம் வந்துச்சு. வேணாம் வேணாம்னு விட்டுட்டு இப்போ வருத்தப்படறதுல ஒன்னும் பிரயோஜனமில்லை’’ என்று வாழ்க்கைத் துணை வருத்தப்படுவதுண்டு. ஏனெனில், பொதுவாகவே சிம்ம ராசிக்காரர்களுக்கு கையில் பணம் இருக்கும்போது ஏனோதானோ என்று செலவு செய்வார்களே தவிர தொலைநோக்குப் பார்வையில் வீடு நிலமெல்லாம் வாங்கிப்போடத் தெரியாது. சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக வருவதால் அரசாங்க அலுவலகங்கள், தலைவர்களின் சிலைக்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. ‘‘தெருமுனையில ஒரு அண்ணா சிலை இருக்குங்க. அதுக்கு எதிரத்தான் நம்ம வீடு’’ என்பீர்கள். வீட்டு விலாசத்தைக் கூட அரசியல்வாதியோ அல்லது அரசு அலுவலகத்தை சொல்லித்தான் சொல்வீர்கள். நீங்கள் வசிக்கும் வீடு ஊரின் கிழக்குப் பகுதியாக இருந்தால் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  சிம்ம ராசிக்கு நான்காம் இடமாக அதாவது வீட்டு யோகத்தை தரும் இடமாக விருச்சிக ராசி வருகிறது. அந்த ராசிக்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். பொதுவாகவே செவ்வாய்க்கு அதிபதியாக முருகன் வருகிறார். எனவே முருகனை தரிசிப்பது மிகவும் அவசியமாகும். அப்படி நீங்கள் தரிசிக்க வேண்டிய தலமே கந்தன்குடி ஆகும். இத்தலம் தெய்வானை முருகனை மணக்க விரும்பி தவமிருந்த தலமாகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம்- காரைக்கால், மயிலாடுதுறை-  காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்து கந்தன்குடி உள்ளது.கன்னி  – தஞ்சாவூர், தஞ்சபுரீஸ்வரர் கோயில்உங்கள் ராசியாதிபதியான் புதன் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்கிற எண்ணத்தை தூண்டக் கூடியவர். ‘‘பாஸ்கர் எங்க இருக்க. வீடு தேடிக்கிட்டே இருந்தியே அமைஞ்சுதா இல்லையா. ஃபர்ஸ்ட் ஃப்ளோர் ஒன்னு விலைக்கு வருது. நாப்பது சொல்றாரு. முப்பத்தஞ்சுக்கு நெருக்கி வாங்கித் தரேன். என்ன சொல்ற’’ என்று அடுத்தவருக்கு வாங்கித் தருவதிலேயே காலம் கழியும். மேலும், உறவினர்கள், நண்பர்களென்று முயற்சிக்கும் நீங்கள் உங்களுக்கு என்று வாங்கவோ… கட்டவோ ஏனோ அவ்வளவு சீக்கிரம் முயற்சிப்பதில்லை. சரி, வீடு வாங்கலாம் என்று நினைத்த நேரத்திலிருந்து அடுக்கடுக்கான குறுக்கீடுகள், அவஸ்தைகளை சந்திப்பீர்கள். ‘‘மூணாவது மெயின் ரோட்ல அஞ்சாம் நம்பர் வீடு. நல்ல லொகேஷன். பார்த்துட்டு பத்து லட்சம் அட்வான்ஸ் கொடுத்துடுங்க’’ என்று யாரோ சொல்லிப் போவார்கள். குருதான் உங்களின் வீட்டு யோகத்தை அளிக்கும் நான்காம் இடத்திற்கு அதிபதியாக வருகிறார். மேலும் திருமணத்தை நிர்ணயிக்கும் இடத்திற்கும் அதிபதியாக வருகிறார்.  காற்றோட்டமுள்ள வீடு கிடைப்பின் எத்தனை கிலோமீட்டராக இருந்தாலும் பரவாயில்லை என்று தள்ளிப்போய் வாங்குவீர்கள். ஜன்னலிலிருந்து எட்டிப்பார்த்தால் வாசலில் ரெண்டு மரம் இருந்தால் சந்தோஷப்படுவீர்கள். உங்களுக்கென்று தனி அறையை நிச்சயித்து விட்டுத்தான் மற்ற அறைகள் குறித்து பேசுவீர்கள். அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் வசிக்கும் தெருவில் வீடு அமையும் வாய்ப்புகள் அதிகம். ‘‘ரெண்டு தடவை எம்.பியா இருந்தாரே. அவரு ரெண்டு வீடு தள்ளி இருக்காரு’’ என்பீர்கள். அதுபோல டியூஷன் சென்டர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழமையான பல நூறு வருடங்களான ஆலமரம் நீங்கள் வசிக்கும் தெருவில் இருந்தால் கூட பரவாயில்லை. உங்கள் வாழ்க்கை மேன்மை பெறும். வீட்டின் தலைவாசல் கிழக்கு, தென் கிழக்கு திசையைப் பார்த்தும், நீங்கள் வசிக்கும்பகுதி ஊரின் கிழக்கு திசை நோக்கியும் இருந்தால் வளம் பெருகும். மேற்கண்ட திசைகள் அதிகாரப் பதவிகளை அளிக்கும். உங்களின் வீட்டு யோகத்தை நிர்ணயிக்கும் பங்கு குருவை விட சுக்கிரனுக்குத்தான் அதிகம் உண்டு. எனவே குபேரன் வழிபட்ட தலங்களையோ அல்லது குபேரன் அருளும் தலங்களையோ வணங்கி வாருங்கள். அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் ஆலயமாகும். முனிவர்களாலும், தேவர்களாலும் போற்றப்படும் இவ்விடத்தில், சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை குபேரன் வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். இந்த ஆலயம் தஞ்சாவூர் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளது.துலாம் – கும்பகோணம், சார்ங்கபாணி கோயில்அழகியல் தத்துவத்திற்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசியாதிபதியாகவும் வருவதால் வேறு எவரும் வீட்டிற்கு தராத முக்கியத்துவத்தை நீங்கள் தருவீர்கள். ஒரு சிறிய விஷயத்தை இங்கு புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரிஷப ராசியையும் சுக்கிரனே ஆளுகிறார். ‘‘வீடு எப்போ கட்டணும்னு எனக்குத் தெரியும். அந்த இடத்துக்கு வேணும்னே விலையை ஏத்தறாங்க. தானா விலை குறையும் அப்போபோய் வாங்கிக்கலாம்’’ என்பீர்கள். ‘‘லட்சத்துல போறதைப் போய் திடீர்னு கோடிக்கணக்குல சொன்னா உடனே வாங்கிடறதா. அந்த இடத்தை வாங்கறதுல ஒன்னும் லாபம் இல்லை’’ என்று ஆழமாக யோசிப்பீர்கள். ‘‘இனிமே கிராமத்துப் பக்கம் இருக்கற விளைநிலங்களெல்லாம் வைரம் மாதிரி. இங்க வாங்கறதுக்கு அங்க வாங்கலாம்’’ என்று திட்டத்தையே திருப்பிப் போட்டு யோசிப்பீர்கள். மண்ணின் வகை பார்த்து தனிமங்களை சொல்லும் அளவுக்கு அனுபவம் பெற்றவர்கள் அதிகமாக இருப்பீர்கள். உங்கள் ராசியான துலாத்திற்குரிய அதிபதியே சுக்கிரன்தான். கட்டிடங்களுக்கு உரியவனும் சுக்கிரன்தான். எனவே இந்த ராசியில் பிறந்தவர்களில் நிறைய பேர் இன்டீரியர் டிசைனர், ஆர்ட் டைரக்டர், ஆர்க்கிடெக்ட் போன்ற துறைகளில் பிரகாசமாக இருப்பார்கள். எதைக் கொடுத்தாலும் அதை அழகாக்கித் திருப்பித் தருவீர்கள். வீட்டை அப்போது எப்படி அழகுபடுத்துவீர்கள் என்பதை சொல்லவே வேண்டாம். பழைய பொருளைக் கொடுத்தால் கூட பழமை மாறாமல் நவீனமாக காட்டுவீர்கள். துலாம் ராசிக்கு நான்காம் வீடான மகரச் சனிதான் வீட்டு விஷயத்தை நிர்ணயிக்கிறது. அதனால் சேரி (வேளச்சேரி, திட்டச்சேரி), பாக்கம் (காட்டுப் பாக்கம்), கரை (அணைக்கரை, பாலக்கரை) என்று முடியும் இடங்களில் இடமோ, வீடோ கிடைத்தால் தயங்காது வாங்குங்கள். தரை தளம் மட்டுமில்லாமல் எல்லா தளங்களும் உங்களுக்கு ஏற்றதாகும். தனி வீடாக அமைந்தால் ராஜயோகம் கிட்டும். தென் கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. உங்கள் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவர் சனி பகவானே ஆவார். அதிலும் உங்கள் துலாம் ராசியிலிருந்து நான்காம் இடமான மகரச் சனியே வீட்டு யோகத்தை தீர்மானிக்கிறார். சனிக்கும் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாதாரண மனிதருக்கு இறைவனே சிரார்த்தம் செய்த தலமெனில் அதற்கு இன்னும் சிறப்பு உண்டு. அப்படிப்பட்ட தலமான கும்பகோணம் சார்ங்கபாணியை தரிசித்து வாருங்கள். திருமழிசையாழ்வாருக்காக எழுந்தும் எழாமலும் சற்றே தலையை மேலே தூக்கி சேவை சாதிக்கிறார். பூலோக வைகுண்டமாம் கும்பகோணம் சார்ங்கபாணியை தரிசித்து வாருங்கள்.    விருச்சிகம் – தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை முருகன் கோயில்உங்கள் வீட்டை நிர்ணயிக்கும் நான்காம் வீடு என்பது கும்பச் சனியாக வருகிறது. உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு சனியானவர் எதிர்மறை கதிர்வீச்சைக் கொண்டவர். அதனால் வீடு என்றாலே ஒரு மனப்போராட்டம் ஆரம்பித்து விடும். மேலும், இரண்டு முறை முயற்சித்து முடியாமல் போகும் நிலைவரும். ‘‘என்னமோ… அதுக்கப்புறம் அந்த இடத்து மேல இருக்கற ஆர்வம் போயிடுச்சி’’ என்று தவிர்த்து விடுவீர்கள். பொதுவாக நீங்கள் வாங்கும்போது நிமித்தங்கள் (சகுனங்கள்) சரியில்லாமல் இருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். அதுபோல சனிக்கிழமையன்று முன்பணம் கொடுக்காதீர்கள். கட்டிடக் காரகன் எனப்படும் சுக்கிரன் உங்களுக்கு நட்பு கிரகமாக வருகிறது. மேலும், அவரே வாழ்க்கைத் துணைக்குரிய வீட்டை நிர்ணயிப்பவராகவும் வருகிறார். அதனால், வாழ்க்கைத்துணை வந்தபிறகு அவரின் தூண்டுதலால்தான் வீடு வாங்குவீர்கள். ‘‘நாலஞ்சு பில்டருங்க ப்ரெண்டுங்கன்னு சொல்றீங்க. ஆனா நமக்குன்னா மனசு வைக்க மாட்டேன்றீங்களே” என்று அடிக்கடி சொல்வார்கள். எப்போதுமே நீங்கள் லோன் விஷயங்களை சரியாக ஏற்பாடு செய்தபிறகு கட்டத் தொடங்க வேண்டும். இல்லையெனில் பெரும் அவஸ்தைகளை எதிர்கொள்ள நேரிடும். ‘‘இப்பவும் ஒரு அசட்டு தைரியத்துலத்தான் வீடு வாங்கப்போறேன்’’ என்பீர்கள். தினசரி வாழ்க்கையில் அதேசமயம் பொருளாதார நிலை பாதிக்கக் கூடாது என்று நினைப்பீர்கள். வீட்டிலும் அடிக்கடி வீட்டுக்காகத்தான் பார்த்துகிட்டிருக்கேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது பிடிக்காது. மன்னர்கள், சந்நியாசிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரில் தெருக்கள் பெயர் இருந்தால் உங்களுக்கு நல்லதாகும். மூன்று, நான்கு தெருக்களின் சந்திப்புக்களில் வீடு அமைந்தாலும் நல்லது. பூர்விகச் சொத்து தங்காது. வக்கீல், ஓய்வுப்பெற்ற நீதிபதி, மனித உரிமைகழக அலுவலர் போன்றோர் உங்களின் எதிர்வீடு, பக்கத்து வீடு என்று இருப்பார்கள்.  உங்களின் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவரே கும்பச் சனி ஆவார். மகரச் சனியை விட கும்பச் சனி கொஞ்சம் மெதுவாக இயங்கும் ராசியாகும். மேலும், உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் ஆகும். செவ்வாய்க்கு அதிபதி முருகன் ஆவார். பெரும்பாலும் சிறு குன்றுகள் மலைகள் எல்லாமுமே சனியின் ஆதிக்கத்தில் வரும். அப்படிப்பட்ட சனியின் ஆதிக்கத்தில் செவ்வாயின் அதிபதியான முருகன் கோயிலை தரிசிக்கும்போது வீட்டு யோகம் உங்களுக்கு எளிதாக அமையும். அப்படிப்பட்ட ஓர் அற்புதத் தலமே கழுகுமலை. மேலும் இத்தலத்தில் போர்க் கோலம்போல ஆயுதங்களோடு முருகன் காட்சியளிக்கிறார். இத்தலம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.தனுசு – மகாபலிபுரம், ஸ்தலசயனப் பெருமாள்கட்டிடக்காரகன் சுக்கிரன் உங்களுக்கு பகையாளியாக இருந்தாலும், பூமிக்காரகனான செவ்வாய் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். எனவே, புறநகரில் ஒரு கிரவுண்டாவது இடம் இருக்கும். ‘‘இருவது வருஷத்துக்கு முன்னாடி வாங்கிப் போட்டது. இப்போ எப்படி வளர்ந்துடுச்சி’’ என்பீர்கள். உங்கள் ராசிக்கு ஆயுதத்தின் பெயருடைய நகர் இருப்பது நல்லது. வில்லிவாக்கம், வேலாயுதம் நகர், தண்டபாணி தெரு, திரிசூலம் என்பதாக இருந்தால் முன்னேற்றம் எளிதாக இருக்கும். என்னதான் செவ்வாய் உதவினாலும் சொத்து வாங்குவது விற்பது என்றெல்லாம் பெரிய பெரிய ஈடுபாடு காட்ட மாட்டீர்கள். கட்டிய வீட்டை காட்டிலும் நீங்களே இடத்தை வாங்கிக் கட்டுங்கள். விரைவில் குடிபுகுவீர்கள்.வீட்டு லோன் என்றாலே சின்ன பயம் வருவதை தவிர்க்க முடியாது. ‘‘கையில நாலு காசு சேர்ந்தாலே அந்தக் கடன் இந்தக் கடன்னு பாதி பணம் காலியாகுது’’ என்று புலம்பத் தொடங்குவீர்கள். ‘‘நாப்பத்தெட்டு கேள்வி கேட்பாங்க. இல்லாத வருமானத்தை இருக்கறதா காமிச்சு வேற லோன் வாங்கணும். எனக்கு அப்படி வாங்கறதுல இஷ்டமே இல்லை’’ என்று சொந்த வீட்டுக் கனவை உங்களில் சிலர் சுக்குநூறாக்குவார்கள். வீட்டிற்கு அருகேயே பிள்ளையார் கோயில், சித்தர்களின் பெயரில் தெரு, ஜீவ சமாதிக்கு அருகே வீடு என்று வந்தால் உடனே வாங்குங்கள். பக்கத்திலேயே லேத் கம்பெனி, வெல்டிங், மெக்கானிக் ஷெட் என்று வந்தால் முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள். கிழக்கு, வடகிழக்கு, தெற்கு திசைநோக்கி வீட்டின் தலைவாசல் இருப்பது நல்லது. மேலும் ஊரின் இந்த திசைகளிலேயே வீடு இருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்களின் பால்ய வயதிலேயே சுக்கிர தசை நடப்பதால் 27 வயதுக்குள் வீடு அமையும். நீங்கள் படித்துக் கொண்டிருப்பின் உங்களின் அதிர்ஷ்டம் தந்தையாருக்கு சொத்து சேர்க்கைகளை கொடுக்கும். தனுசு ராசிக்கு வீடு கட்டும் அமைப்பை தருவதே மீனராசியின் அதிபதியான குரு ஆவார். மீனம் என்பது கடல் ராசியாகும். எனவே, கடலும், பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் நீங்கள் நினைக்கும் எண்ணம் வலுப்பெறும். சயனக் கோலத்தில் பாற்கடல் பெருமாளாக தரிசனம் தரும் ஆலயங்கள் உங்களுக்கு பொதுவாகவே நன்மை பயக்கும். அதிலும் கடற்கரையோரம் அருளும் பெருமாளாக இருப்பின் இன்னும் அதிக நற்பலன்களை அள்ளித்தரும். எனவே, சென்னை, செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள மகாபலிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்தல சயனப் பெருமாளை தரிசியுங்கள். எனக்கொரு நல்ல இல்லம் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். மகரம் – சிவன்மலை முருகன் கோயில்உங்களின் கட்டிட ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். இவர் உங்கள் ராசிநாதனான சனிக்கு பகைவராகவும் வருகிறார். அதனால், சொந்த வீட்டு ஆசை தாமதித்து நிறைவேறும் வாய்ப்பு அதிகம். ‘‘இவ்ளோ வருஷமா எவ்வளவோ சம்பாதிச்சோம். இப்போதான் நான் நினைச்ச மாதிரி வீடு கட்ட முடிஞ்சுது’’ என்று 45 வயதுக்குப் பிறகு ஆசை நிறைவேறும். அதனால், வாலிப வயதில் இருக்கும்போதே முதலில் வீட்டு மனையாக வாங்காமல் அபார்ட்மென்ட்டில் வாங்குவது நல்லதாகும். உங்களின் முதல் முதலீடு கட்டிய வீடாக இருப்பது நல்லது. எத்தனை சந்தர்ப்பம் கிடைத்தாலும் குறுக்கு வழியில்போய் வீடு வாங்க மாட்டீர்கள். அப்பா வழியில் சிறிய அளவாவது சொத்து இருப்பதை விரும்புவீர்கள். எப்போதுமே முக்கால் கிணறு தாண்டி மீண்டும் பின் வாங்கும் பழக்கமுள்ளவர்கள். அதனால் அந்த இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். ‘‘இதை வித்துட்டு அதை வாங்கலாமா. என்னமோ இந்த ஏரியா நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை’’ என்று அடிக்கடி கட்டிய வீட்டையே விற்கவும் துணிவீர்கள். வீட்டிற்குள் எத்தனை ஜன்னல் வைக்க முடியுமோ அத்தனை வைத்து கட்டுவீர்கள். வீடு இருளோ என்று இருக்கக் கூடாது என்பீர்கள். ராசிநாதன் சனியாக வருவதால் குடிசை வாரிய வீடுகளும் அருகில் இருக்கும். வீட்டின் தலைவாசல் கிழக்கு, தென் கிழக்கு திசையைப் பார்த்தும், நீங்கள் வசிக்கும் பகுதி ஊரின் கிழக்கு திசை நோக்கியும் இருந்தால் வளம் பெருகும். மேற்கண்ட திசைகள் அதிகாரப் பதவிகளை அளிக்கும். மேற்கு பக்க வாசல் இருந்தால் அடிக்கடி ஏதேனும் உடம்பு படுத்திக் கொண்டே இருக்கும். மருத்துவச் செலவுகள் கொடுக்கும். தரை தள வீடு கிடைத்தால் கூட குடியேறுங்கள். அதேபோல கடற்கரை பகுதி உங்கள் குடியிருப்பு இடத்திற்கு அருகில் இருந்தால் உடனே வாங்குங்கள். பூர்வ புண்ணிய ஸ்தானமாக சுக்கிரன் வருவதால் மனைவி வழியிலும் கூட சொத்துக்கள் சேரும்.  உங்களின் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவரே மேஷச் செவ்வாய் ஆகும். மேலும் ராசியாதிபதியான சனி செவ்வாய்க்கு பகைவராக இருக்கிறார். செவ்வாய்க்கு அதிபதியாக முருகக் கடவுள் வருகிறார். சனி கடலுக்கு உரியதைப்போல சிறு குன்றுகளுக்கும் உரியவராவார். குன்றுகளுக்கு மேல் இருக்கும் முருகனை தரிசிக்கும்போது சனியும், செவ்வாயும் இணைந்த அம்சத்தில் அந்த தலம் விளங்கும். அப்படிப்பட்ட தலமே சிவன்மலை ஆகும். இத்தலத்தின் மலை மீது முருகன் வீற்றிருக்கிறார். நான்கு யுகங்களுக்கும் முற்பட்ட தொன்மையான ஆலயமாகும். கோவையிலிருந்து 75 கி.மீ. தொலைவும், காங்கேயத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.கும்பம் – ஸ்ரீமுஷ்ணம் பூவராகர்உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தை சுக ஸ்தானம் என்றும், வாகன ஸ்தானம், வீட்டு ஸ்தானம் என்றும் அழைப்பர். இதற்கு சுக்கிரனே அதிபதியாக வருவதால், ‘அலுவலகம் கூட ஆலமரத்தின் கீழ் இயற்கையாக இருந்தால் எப்படியிருக்கும்’ என்று யோசிப்பீர்கள். கட்டுவது சிறிய இடமாக இருப்பினும் பங்களாவின் அழகைக் கொண்டு வர முயற்சிப்பீர்கள். உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சுக்கிரனே கட்டிடகாரகனாக வருவதால் பொதுவாகவே உங்களுக்கு வீடு, சொத்தெல்லாம் எளிதாகவே அமையும். பூமிகாரகனான செவ்வாய் உங்கள் தைரிய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால், பற்றாக்குறையிலும் துணிந்து வீடு வாங்குவீர்கள். ‘‘இந்த வீடு அஸ்திவாரம் போடும்போது கையில பத்து லட்சம்தான் இருந்தது. பட்ஜெட் என்னவோ நாப்பது லட்சம். அப்புறம் எப்படியோ புரட்டிட்டோம். பகவான் புண்ணியத்துல வீடு அமைஞ்சுது’’ என்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை அப்படியே வைத்திருக்கவே விரும்புவீர்கள். ‘‘ஜாண் நிலமாவது சொந்த ஊர்ல இருக்கணும்’’ என்று உறுதியோடு சொல்வீர்கள். முதலில் வீட்டை வாங்கும்போது மனையாக வாங்கி கட்ட முடியுமா என்று யோசியுங்கள். அதேபோல சனி உங்களை ஆள்வதால் குடிசைகளுக்கு மத்தியில் வீடு கிடைத்தால் வாங்கி விடுங்கள். தரை தளம் உங்களுக்கு ஏற்றது. பெரும்பாலும் தொகுப்பு வீடுகளைத் தவிர தனி வீடு கட்டியே குடிபுக நினைப்பீர்கள். தென் கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. வட கிழக்கு வாசல் வைத்து வீட்டைக் கட்டாதீர்கள். ராணுவக் குடியிருப்பு, தீயணைப்பு நிலையம், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், காவல் நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் வீடோ, அடுக்ககமோ கிடைத்தால் நல்லது. மணலும் செம்மண்ணும் கலந்த பூமியாக இருந்தால் மிகவும் நல்லது.  கும்ப ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகத்தைத் தருபவர் ரிஷபச் சுக்கிரன் ஆவார். கட்டிடகாரகனான சுக்கிரனும் உங்களுக்கு எளிதாக வீட்டு யோகத்தை அருள்வார். மேலும், சனி பகவான் ராசியாதிபதியாக இருப்பதால் பெருமாள் அருள்பாலிக்கும் தலத்திற்கு சென்று வந்தால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். அதனால், பூமியையே மீட்டெடுத்த வராஹரை வணங்க நிலம் மற்றும் வீடு வாங்கும் பாக்கியம் உடனே கிட்டும். இந்த வராகரைத்தான் பூவராகர் எனும் திருப்பெயரிட்டு அழைப்பர். இந்த பூவராகர் ஸ்ரீமுஷ்ணம் எனும் தலத்தில் மூலவராக அருள்கிறார். இத்தலம் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது. விருத்தாசலம் – கும்பகோணம் சாலையில் ராஜேந்திரப் பட்டிணத்திலிருந்து இடது புறம் 6 கி.மீ. பயணிக்க ஸ்ரீமுஷ்ணத்தை அடையலாம். வராகரை வணங்க, வீட்டுக்கனவு நிஜமாகும்.மீனம் – திருத்தொலைவில்லி மங்கலம்பூமிகாரகனாகிய செவ்வாய் உங்களின் வீட்டை நிர்ணயிக்கின்ற புதனுக்குப் பகை. மேலும் உங்களின் ராசிக்கு அதிபதியான குருவுக்கு செவ்வாய் நட்பாக வருகிறது. அதனால் எப்படியேனும் சொந்த வீடு அமைந்துவிடும். ஆனால், ‘அதுவா வந்தா வரட்டும்’ என்கிற அடிப்படை மனோநிலையை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். ‘கையில காசு சேரட்டும்னு காத்திருந்தோம்னா காலம் பூரா உட்கார வேண்டியதுதான்’ என்று நண்பர்கள் நெருக்கும்போது வீடு உங்களை நெருங்கி வரும். வீடு வாங்கவேண்டுமென்ற கனவு உங்கள் ஆழ்மனதில் அசையாமல் அமர்ந்திருக்கும். ஆனால் அதற்காக அலட்டிக் கொள்ளமாட்டீர்கள். ‘‘வாங்குற சம்பளத்தில் வீட்டு லோன்ல சிக்கினா கையில பெரிசா பணம் மீறாது. அப்புறம் அன்றாட செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும். ‘‘கல்யாணம் பண்ணினா புது வீட்டுல போய்த்தான் வாழணும்னு உறுதியா இருந்தேன்’’ என்று உங்களில் சிலர் சொல்வீர்கள். வீடு சிலருக்கு திடீரென அமையும். காலையில போன்… மதியம் அட்வான்ஸ்… என்று உங்களுக்கே தெரியாமல் நிகழ்ந்துவிடும். வக்கீல், ஓய்வுபெற்ற நீதிபதி, ஆசிரியர் போன்றோர் உங்களின் எதிர்வீடு, பக்கத்து வீடுகளில் இருப்பார்கள். எப்போதுமே வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் பெயரில் இடத்தை வாங்குங்கள். அதற்குப் பிறகு வேண்டுமானால் உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நேரடியாக உங்கள் பெயரில் வாங்கினால் தங்காது. வீட்டின் தலைவாசல் தெற்கு, தென்கிழக்கு திசை நோக்கி அமையட்டும். நீங்கள் வசிக்கும் ஊரின் தெற்குப் பகுதியில் வீடு அமைந்தால் அதிர்ஷ்டத்தைத் தரும். செம்மண், மணல் பூமியாக இருப்பின் நல்லது. உங்களுக்கு எல்லா தளங்களுமே ஏற்றதாகும்.  பூர்வீகச் சொத்தில் ஒரு பாதியை விற்றுவிட்டு வேறிடத்தில் வீடு வாங்குவீர்கள். கட்டிடக்காரகனான சுக்கிரன் உங்கள் நட்சத்திர நாயகனான சனிக்கு அதிநட்பாக இருப்பதால் கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். அதே சமயம் தனியார் வங்கிக் கடன்கள் எளிதாக கிடைக்கும். விளை நிலமா, வீடு கட்ட அனுமதியுண்டா, தாய்ப் பத்திரம் சரியாக இருக்கிறதா என்பதையெல்லாம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.  மீன ராசிக்கு வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவர் மிதுனபுதன். மிதுனம் என்றாலே இரட்டை என்பது பொருள். புதன் உங்களின் இல்லக்கனவை நிறைவேற்றுபவராக வருவதால், புதனுக்கு சக்தியைக் கொடுக்கும் பெருமாளை வணங்குவது மிகவும் நல்லது. எனவே இரட்டை திருப்பதி என்றழைக்கப்படும் திருத்தொலைவில்லி மங்கலம் கோயிலை தரிசித்து வாருங்கள். அரவிந்தலோசனன், தேவபிரான் எனும் திருநாமங்களோடு பெருமாள் தனித்தனி கோயில்களில் சேவை சாதிக்கிறார். திருநெல்வேலியிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. …

The post பன்னிரெண்டு ராசிகளுக்கான இல்லக் கனவை நிறைவேற்றும் ஆலயங்கள் appeared first on Dinakaran.

Tags : Aries ,Kanyakumari ,Bhagavati Ammanmesha ,earth ,
× RELATED மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை